Published:Updated:

5,000 mAh பேட்டரி; பெரிய டிஸ்ப்ளே... ஷியோமியை வீழ்த்துமா #SamsungGalaxyM30?

மு.ராஜேஷ்

ஷியோமியின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்தான் பட்ஜெட் செக்மென்ட்டைப் பொறுத்தவரையில் அதிகமாக விற்பனையாகின்றன. ரெட்மி ஸ்மார்ட்போன்கள் முதலில் ஸ்கோர் செய்யும் இடம் எதுவென்றால் அதன் பேட்டரிதான். அதனால் இந்த ஸ்மார்ட்போனிலும் பேட்டரியின் அளவை கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டது சாம்சங்.

5,000 mAh பேட்டரி; பெரிய டிஸ்ப்ளே... ஷியோமியை வீழ்த்துமா #SamsungGalaxyM30?
5,000 mAh பேட்டரி; பெரிய டிஸ்ப்ளே... ஷியோமியை வீழ்த்துமா #SamsungGalaxyM30?

லகச் சந்தையில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாம்சங்குக்குப் போட்டி ஷியோமிதான். இந்தியாவில் கால் பதித்ததிலிருந்து அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்த ஷியோமி தற்போது முதலிடத்தில் இருக்கிறது. பல வருடங்களாகக் கையிலிருந்த முதலிடம் எப்படிப் பறிபோனது என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறது சாம்சங். விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்ற புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. எனவே, பட்ஜெட் செக்மெண்டில் கூடுதலாகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதற்காக M சீரிஸ் என்ற புதிய பெயரில் ஸ்மார்ட்போன்களை வெளியிடத் திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் M வரிசையில் M10, M20 என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்த வரிசையில் மற்றொரு போனையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தது. ஒரு மாதம் கழித்து தற்பொழுது அதன் தொடர்ச்சியாக M30 என்ற ஸ்மார்ட்போனை நேற்றைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங் நிறுவனம்.

ரெட்மி போன்களைவிடப் பெரிய பேட்டரி, சிறப்பான டிஸ்ப்ளே

ஷியோமியின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்தான் பட்ஜெட் செக்மென்ட்டைப் பொறுத்தவரையில் அதிகமாக விற்பனையாகின்றன. ரெட்மி ஸ்மார்ட்போன்கள் முதலில் ஸ்கோர் செய்யும் இடம் எதுவென்றால் அதன் பேட்டரிதான். அதனால், இந்த ஸ்மார்ட்போனிலும் பேட்டரியின் அளவை கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டது சாம்சங். அதற்குத் தகுந்த வகையில் சாம்சங் M30 ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 31 மணி நேரம் வரை டாக்டைமைப் பெற முடியும் என்கிறது சாம்சங். பொதுவாக, அதிக திறன் கொண்ட பேட்டரி என்றால் அதற்கு சார்ஜ் ஏற்ற அதிக நேரம் பிடிக்கும். எனவே, அந்த நேரத்தைக் குறைப்பதற்காக இதனுடன் வேகமாகச் சார்ஜ் ஏற்றும் வகையில் 15W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Type-C போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் பொதுவாக அதன் ஸ்மார்ட்போன்களில் AMOLED டிஸ்ப்ளேவையேக் கொடுக்கும், அது பட்ஜெட் மொபைலாக இருந்தாலும்கூட. ஆனால், இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட M10, M20 என்ற ஸ்மார்ட்போன்களில் TFT டிஸ்ப்ளேவையே கொடுத்திருந்தது. ஆனால், M30 மொபைலின் விலை சற்று அதிகம் என்பதால் இதில் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது தவிர மொபைலின் வடிவமைப்பையும் சற்று மாற்றியமைத்துள்ளது சாம்சங். டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸைன் கொடுக்கப்பட்டுள்ளது. 6.4 இன்ச் டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. சிறந்த ஒலியைப் பெற வேண்டும் என்பதற்காக Dolby Atmos sound வசதியையும் இதில் கொடுத்துள்ளது சாம்சங்.

சாம்சங் M30 ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் கேமரா 13 MP திறன் கொண்டது. இரண்டாவது கேமரா 5MP திறன் கொண்டது. இது லைவ் ஃபோகஸ் செய்யப் பயன்படும். மூன்றாவதாக இருக்கும் 5MP கேமரா 123 டிகிரி வைடு ஆங்கிள் திறன் கொண்டது. இதன் மூலமாகப் புகைப்படம் எடுக்கும்போது அதிக அளவு பரப்பைக் கவர் செய்ய முடியும். முன்புறமாக 16 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் அதன் சொந்த தயாரிப்பான Exynos 7904 என்ற புராஸசரை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியுள்ளது. 6GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட்டின் விலை 17,990 ரூபாய். 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட்டின் விலை 14,990 ரூபாய்.

இது இன்று வெளியாகியிருக்கும் ஷியோமியின் புதிய ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போனுடன் போட்டியிடும் என சாம்சங் கருதுகிறது. ஆனால், தகுந்தவாறு சாம்சங் M30 ஸ்மார்ட்போனில் வசதிகள் கொடுக்கப்படவில்லை என்றே கருதலாம். பேட்டரி, டிஸ்ப்ளே இரண்டையும் தவிர்த்து பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இதில் வேறு  எந்த வசதிகளும் இதில் கொடுக்கப்படவில்லை.  எனவே, இது சாம்சங் எதிர்பார்த்ததுபோல மக்களிடையே வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகம்தான். மொபைலை என்டர்டெயின்மென்ட் விஷயங்களுக்காக மட்டும் அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றதாக இது இருக்கும்.