Published:Updated:

48 MP கேமரா... மொபைல் சந்தையை மாற்றியமைக்குமா #RedmiNote7Pro?

ஷியோமி பில்ட்அப் கொடுத்த அளவுக்கு வொர்த்தாக இருக்கிறதா ரெட்மியின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்

48 MP கேமரா... மொபைல் சந்தையை மாற்றியமைக்குமா #RedmiNote7Pro?
48 MP கேமரா... மொபைல் சந்தையை மாற்றியமைக்குமா #RedmiNote7Pro?

``நாங்கள் இந்தச் சந்தையை தலைகீழாக மாற்றப்போகிறோம்" இப்படித்தான் கடந்த மாதம் இறுதியில் ட்வீட் செய்திருந்தார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநரான மனு குமார் ஜெயின். அவர் சொன்னது நேற்றைக்கு ஷியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரெட்மி நோட் 7 புரோ மற்றும் நோட் 7 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களைப் பற்றித்தான். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே ட்விட்டரில் ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஹேஷ்டேக்குகளைக் கூடத் தலைகீழாகவே வைத்து ட்வீட்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. 

பொதுவாக அடுத்ததாக அறிமுகப்படுத்தப்போகும் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கு எதிர்பார்ப்பைத் தூண்டுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் ஷியோமி கொஞ்சம் அதிகமாகவே விளம்பரம் செய்கிறதோ என்றுதான் பலர் நினைத்திருப்பார்கள். இது மட்டுமன்றி பல வகைகளில் ஷியோமி பில்ட்அப் கொடுத்த அளவுக்கு வொர்த்தான வசதிகளைக் கொண்டிருக்கிறதா இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் இரண்டும். 

தலைகீழாக மாறுமா பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தை

நேற்றைக்கு இந்த ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் முதலில் பேசத் தொடங்கியவர் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநரான மனு குமார் ஜெயின். இது ஷியோமியால் இந்த வருடம் நடத்தப்படும் பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக இருக்கப்போகிறது என்று சொல்லிவிட்டுத்தான் நிகழ்வைத் தொடங்கினார். மேலும் கடந்த மூன்றாண்டுகளில் ஷியோமி நடத்தும் பெரிய அறிமுக நிகழ்வு இதுதான் என்றும் குறிப்பிட்டார். அதன் பின்னர் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன். ஷியோமி இந்த மொபைலை அறிமுகப்படுத்தியதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7-ஐ தான் இந்தியாவிலும் வெளியாகப்போகிறது என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் ரெட்மி நோட் 7 புரோ முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது ஷியோமி. எனவே இனிமேல்தான் சீனா மற்றும் மற்ற நாடுகளில் இது வெளியாகும். 

ஷியோமியைப் பொறுத்தவரையில் அதன் ரெட்மி நோட் சீரிஸ்தான் சந்தையில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. எனவே, ஒவ்வொரு முறையும் ரெட்மி நோட் சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் போது அதற்காகக் கொஞ்சம் மெனக்கெடும். இந்த முறை ரெட்மி நோட் 7 புரோவின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பையே மொத்தமாக மாற்றியிருக்கிறது ஷியோமி. இதுவரை பிரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இடம்பெற்று வந்த பின்புறக் கண்ணாடி வடிவமைப்பை இதில் கொண்டு வந்திருக்கிறது. எனவே, இதுவரை வெளியான ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களிலிருந்து முற்றிலும் புதிதாகத் தோற்றமளிக்கிறது இந்த ரெட்மி நோட் 7 புரோ. 6.3 இன்ச் டிஸ்ளேவில் மேற்பக்கம் மட்டும் முன்புற கேமராவிற்காக டாட் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவைத்தான் தொடக்கத்திலிருந்தே இதன் முக்கிய சிறப்பம்சமாகத் தெரிவித்து வந்தது ஷியோமி. அதற்குக் காரணம் இதில் உள்ள கேமராவின் பிக்ஸல் அளவு இதுவரை வெளியான வேறு எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் இல்லை என்பதுதான். இந்த ஸ்மார்ட்போனில் 48 MP மெயின் கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் சோனியின் IMX586 என்ற சென்ஸார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு போட்டோவின் தரம் இதுவரை வெளியான ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விடவும் சிறப்பானதாக இருக்கும் என்கிறது ஷியோமி. இந்த கேமரா சென்ஸரை இதுவரை பட்ஜெட் செக்மென்டில் வேறு எந்த மொபைல்களும் பயன்படுத்தவில்லை என்பதால் இது நிச்சயம் ஷியோமிக்குச் சாதகமான ஒன்றுதான். இது தவிர இரண்டாவதாக 5 MP கேமரா ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறமாக 13 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பர்ஃபாமன்ஸ் விஷயத்திலும் மிச்சம் வைக்கவில்லை ஷியோமி. 2.0GHz திறன் கொண்ட Snapdragon 675 புராஸசர் மற்றும் LPDDR4X ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 4000 mAh அளவு பேட்டரியைக் கொடுக்கும் ஷியோமி. அதை இந்த முறையும் மாற்ற விரும்பாமல் அப்படியே கொடுத்திருக்கிறது. இறுதியாக Type-C போர்ட்டையும் கொடுத்திருக்கிறது. Quick Charge 4 ஆப்ஷன் இருப்பதால் வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். ஆனால், ஷியோமி அதற்கு ஏற்ற சார்ஜரை உடன் கொடுப்பதில்லை. வேண்டுமென்றால் தனியாக வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். கறுப்பு, நீலம், சிவப்பு என மூன்று நிறங்களில் ரெட்மி நோட் 7 புரோ கிடைக்கும். 4 GB ரேம் மற்றும் 64 GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 13,999 ரூபாய்க்கும், 6GB+128GB வேரியன்ட் 16,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.

இரண்டாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கும் நோட் 7 புரோவுக்கும் இடையே பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. தோற்றத்தில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஆனால் உள்ளே இருக்கும் சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. 48 MP கேமராவிற்குப் பதில் 12 MP+2 MP டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Snapdragon 660 AIE என்ற புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறம் 2 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற விஷயங்கள் அனைத்தும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின்  3 GB+32 GB வேரியன்ட் 9,999 ரூபாய் மற்றும் 4 GB+64 GB வேரியன்ட் 11,999 ரூபாய். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் உள்ள வசதிகள் பட்ஜெட் செக்மென்ட்டில் இருக்கும் வேறு எந்த மொபைல்களிலும் கிடையாது. எனவே முந்தைய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே இதன் விற்பனையும் தாறுமாறாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. எப்படியும் இது ஷியோமியின் போட்டி நிறுவனங்களை தலைகீழாக யோசிக்க வைக்கும் ஒன்றாகத்தான் ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போன் இருக்கப்போகிறது.