
எமோஜி
ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி என்பதற்கு முன் ஒரு விஷயம் இருக்கிறது. அது நமக்கான சரியான ஸ்மார்ட்போனை எப்படிக் கண்டறிவது என்பது.

இந்தியாவில் மொபைல் விற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல். மாடல்கள் ஆயிரத்துக்கும் மேல். இதிலிருந்து ஒன்றைக் கண்டறிவது சிரமமான விஷயம்தான். பொதுவாக கேமரா, பிராசஸர், மெமரி, திரைய அளவு ஆகியவற்றை வைத்து முடிவெடுக்கலாம். இவை அடிப்படை. ஆனால், நமக்கான மொபைலை இவற்றை மட்டும் வைத்து வாங்குவது சரியாக வராது. ஒருவருக்கு உபயோகமான மொபைலாகத் தெரியும் ஒன்று, மற்றவருக்கும் அப்படியே தெரிய வேண்டிய கட்டாயமில்லை. நமக்குத் தேவை நல்ல மொபைல் மட்டுமல்ல; நமக்கான மொபைலும்கூட. நம் தேவை என்ன என்பதில் தெளிவிருந்தால் பிரச்னையில்லை.ஸ்மார்ட்போன் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஸ்மார்ட் டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

• ஆண்டிராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ், பிளாக்பெர்ரி ஆகியவை முக்கியமான மூன்று மொபைல் இயங்குதளங்கள். பிளாக்பெர்ரி இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. மற்ற இரண்டில் ஒன்றைத்தான் பயன்படுத்துகிறோம். உங்கள் வீட்டில் மொபைலுடன் இணைந்து வேலை செய்யும் கேட்ஜெட்கள் எந்த இயங்குதளத்தில் இயங்குகின்றன என்பது முக்கியம். ஆப்பிள் தயாரிப்புகள் வைத்திருப்பவருக்கு மொபைலும் அப்படியே இருந்தால் வசதி. மொபைலிலிருந்து டி.வி-க்கு ஸ்ட்ரீம் செய்ய நினைப்பவருக்கு ஆப்பிள் சிரமம். முதலில் எந்த இயங்குதளம் வேண்டுமென்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

• சிலர் மொபைலை ஒவ்வோர் ஆண்டும் மாற்றுவார்கள். சிலர், 10 ஆண்டுகள் வரைகூட மாற்றாமல் வைத்திருப்பார்கள். நீங்கள் எப்படி? நீண்ட நாள்கள் ஒரே மொபைலை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கூடுதலான பணத்தை மொபைலுக்காகச் செலவு செய்யலாம்.
• சிலர் இரண்டு மொபைல்கள் பயன்படுத்துவதுண்டு. அவர்கள் இரண்டாவது மொபைலை கொஞ்சம் பேஸிக் மாடலாக வாங்கினால் கையில் வைத்துக்கொள்வதும் எளிது; சார்ஜும் அதிக நேரம் வரும்.
• மொபைல் என்றால் கால் பேச, மெசேஜ் அனுப்பதானே என்பார்கள். ஸ்மார்ட்போன் அப்படியில்லை. அதன் பயன்கள் ஆயிரம்.பேசுவதைத் தவிர வேறு எதற்கெல்லாம் மொபைல் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பட்டியிலிடுங்கள். லேப்டாப் வைத்திருப்பவர் படம் பார்க்க மொபைலைப் பயன்படுத்த மாட்டார். திரை அளவு சின்னதாக இருந்தாலும் அவருக்கு ஓகே. ஆனால், மொபைல் மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு கேட்ஜெட் என்பவர்களுக்குப் பெரிய திரையிருந்தால் நல்லது.

• சிலர் அதிக நேரம் கேமிங் ஆடுபவர் என்றால் அதற்கெனப் பிரத்யேக மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன.
• மார்க்கெட்டிங் பிரிவில் இருப்பவர்கள் அதிக நேரம் சுற்றிக்கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு சார்ஜ் அதிக நேரம் நீடித்தால் நல்லது. இல்லையேல் எடை அதிகமான பவர் பேங்க்கையும் தூக்கிக்கொண்டே சுற்ற வேண்டும்.
• சிலர் செயலிகளைப் பணம் கொடுத்து வாங்கியிருப்பார்கள். அடுத்த மொபைல் வாங்கும்போது அவை புது மொபைலிலும் வேலை செய்யுமா என்பதைக் கவனிக்க வேண்டும். இல்லையேல், இன்னொருமுறை செலவு செய்ய நேரிடும்.
• இப்போது வரும் மொபைல்களில் பெரும்பாலும் ஹெட்போன் இருப்பதில்லை. நம்மிடமிருக்கும் ஹெட்போனையே பயன்படுத்தலாம் என நினைப்போம். ஆனால் அவற்றில் 3.5mm ஜேக் பதிலாக C டை்ப் கனெக்டர் இருக்கலாம். அப்படியிருந்தால் கன்வெர்ட்டர் வாங்க வேண்டியிருக்கும். சில சமயம் கன்வெர்ட்டர் சரியாக வேலை செய்யாமல் போகலாம். அதனால், மொபைலுடன் இணைத்துப் பயன்படுத்தும் கேட்ஜெட்களுக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்யலாம்.

• சிலர், செல்ஃபி எடுப்பதற்காகவே மொபைல் வாங்குவார்கள். அவர்களுக்கு கேமரா நன்றாக இருக்க வேண்டும், குறிப்பாக முன்பக்க கேமரா.
இதுபோல, உங்கள் தேவைகளைப் பட்டியிலிட்டு அதற்கேற்ற மொபைலைத் தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம். ஆன்லைன் தளங்களில் Compare என்ற வசதி மொபைல்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும். ஸ்மார்ட்போனுக்கு சரியான விலை என ஒன்று கிடையாது. மொபைல் மூலமே மாதம் பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் இங்குண்டு. அவர்களிடம் 20,000-க்கும் மேல் மொபைல் வாங்காதே எனச் சொல்ல முடியுமா?! போலவே, செல்ஃபி எடுக்க மட்டுமே மொபைல் பயன்படுத்துபவர்களிடம் லட்ச ரூபாயில் மொபைல் வாங்கலாமே எனச் சொல்ல முடியுமா?! அவரவர் தேவை; அவரவர் மொபைல்தான் சரி.
ஸ்மார்ட் என்பதற்கு இடம், பொருள், காலம் பொறுத்தும் பொருள் மாறும். உங்களை நீங்களே நன்றாக அறிந்துகொள்வதும்தான் ஸ்மார்ட்னெஸ்.
- ஸ்மார்ட் ஆவோம்...
- ஓவியங்கள்: ரமணன்