பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

எமோஜி

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

ந்தியாவில் 2015 - 2016க்குப் பின் ஸ்மார்ட்போன் அபார வளர்ச்சி பெற்றது. அப்போதைய புள்ளி விவரப்படி இந்திய மொபைல் சந்தையின் மதிப்பு ஏறத்தாழ 15 பில்லியன். அதே காலகட்டத்தில் மொபைலுக்குத் தேவையான இணைக்கருவிகள் எனப்படும் மொபைல் அக்சஸரீஸ் சந்தையின் மதிப்பு 1.5 பில்லியன். உண்மையில் மொபைல் கடைகள் மொபைல் விற்பதைவிட இணைக் கருவிகளை விற்பதையே விரும்புவார்கள். காரணம், அதில்தான் அவர்களுக்கு சதவிகித அடிப்படையில் லாபம் (Profit Margin) அதிகம்.

மொபைல் பயனராக நாம் மொபைலுக்குத் தேவையான அக்சஸரீஸ் எவற்றையெல்லாம் வாங்குகிறோம், அது சரியான கருவியா, அதைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பது முக்கியமானது. மொபைல் பயனர்கள் என்ன மாதிரியான  இணைக்கருவிகள் அதிகம் வாங்குகிறார்கள் என்ற பட்டியலை முதலில் பார்த்துவிடலாம்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

• ஸ்க்ரீன் கார்டு

• மொபைல் கேஸ்

• ஹெட்போன்

• மெமரி கார்டு

• பவர் பேங்க்

• புளூடூத் ஸ்பீக்கர்கள்

• சார்ஜர்

இவற்றை எல்லா மொபைலுக்கும் பொருந்து பவை, பிரத்யேகமான கருவிகள் என்று பிரிக்கலாம். சரி. அக்சஸரீஸ் வாங்குவதில் என்ன பிரச்னை? அதில் நாம் ஸ்மார்ட்டாகச் செயல்பட என்ன இருக்கிறது?

இந்தக் கேள்விதான் பிரச்னையே. இணைக்கருவிகள் என்ற வார்த்தையே, அவை மொபைலுடன் இணைந்து செயல்படுபவை என்பதைச் சொல்லிவிடுகிறது. இதில் நாம் தவறு செய்தால் அது கருவிகள் வாங்கிய பணத்தை மட்டும் பாழாக்காது; மொபைலையே பாழாக்கிவிடும்.

பெரும்பாலும் இணைக் கருவிகள் தரும் பிரச்னைகளை நாம் மொபைலின் பிரச்னை யாகவே பார்த்துப் பழகிவிட்டோம். `மொபைல் வெடித்து சிறுவன் இறப்பு’, `இளைஞரின் காதில் காயம்’ போல எத்தனை செய்திகளைப் படித்திருப்போம்? அவற்றிலெல்லாம் பிரச்னை மொபைலில் இல்லை, பெரும்பாலும் இணைக்கருவிகளில்தான். அனைத்து மொபைல் பேட்டரிக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அதை மீறிய சார்ஜர் பயன்படுத்தும்போது பேட்டரி சூடாகும்; வெடிக்கும். ஒரிஜினல் சார்ஜரின் விலையைப் பார்த்தால் நெஞ்சே வெடிக்கிறதே; மொபைல் வெடித்தால் பரவாயில்லை என இதற்கும் சாக்கு சொல்லலாம். இதில் நாம் செய்ய வேண்டியது, ஒவ்வொரு சார்ஜர் அடாப்டரிலும் இருக்கும் Amps, Volts ஆகியவற்றைக் கவனிப்பதே. அந்தத் திறனை உங்கள் மொபைல் தாங்கினால் பிரச்னையில்லை. இல்லையேல் ஆபத்துதான். சார்ஜராவது மின்சாரம் சார்ந்தது. சில மொபைல் பேக் கவர்கூட பிரச்னை என்றால் நம்ப முடிகிறதா?

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

இப்போது வரும் பெரும்பாலான மொபைல்களின் பின்பக்கம் கண்ணாடியாலானவை.  அதற்கு கவர் போடுவது சரிதான். ஆனால், சில கவர்கள் தவறான அளவில் இருக்கும். கடைக்காரர் அதை அட்ஜஸ்ட் செய்து போட்டுக் கொடுத்துவிடுவார். நாம் அதைக் கழற்றவே மாட்டோம். சில ஆண்டுகள் கழித்து எடுத்துப் பார்த்தால், மொத்தத் தூசியும் அங்கே குடிகொண்டு மொபைலின் பின்பக்கத்தையே பாழாக்கிவிடும்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

எல்லா மொபைலிலும் Proximity Sensor என ஒன்றிருக்கும். நாம் காதில் வைத்துப் பேசும்போது திரையின் ஒளி வெளிவராது. காதிலிருந்து எடுத்தால் ஒளிரும். இதற்குக் காரணம் அந்த சென்ஸார்தான். இதை மறைக்கும்படி கவர் போட்டால், நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் திரை ஒளிரும். திரையிலிருக்கும் ஐகான்கள் மேல் காது பட்டு கால் ஹோல்டில் போகும்;  ஸ்பீக்கர் ஆன் ஆகும்; கான்ஃபரன்ஸ் கால் இன்னொருவருக்குப் போகும் என, பேய்வீட்டில் நுழைந்தது போல நம்மை அதிர்ச்சியாக்கும். எந்த மொபைல் வாங்கினாலும் பிராக்ஸிமிட்டி சென்சார் எங்கிருக்கிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

ஹெட்போன் வாங்குவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. சிலரின் காதுகளுக்குச் சில வகை ஹெட்போன்கள்தான் பொருந்தும். பொருந்தாத ஹெட்போன்கள் வாங்கினால் காதில் வலி ஏற்படும். சிலர் வாங்கும்போது ஆர்வத்தில், மைக் இல்லாத ஹெட்போன்களை வாங்கிவிடுவதுண்டு. நீண்ட நேரம் மொபைலில் பேசுபவர்கள் ஹெட்போன் பயன்படுத்தினால் நல்லது. அதற்கு மைக் தேவை. இப்போதுவரும் ஹெட்போன்களில் 3.5mm Jack மற்றும் C டைப் என இரண்டு வகைகள் உள்ளன. உங்கள் மொபைலில் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு வாங்காவிட்டால் வீண்தான். கனெக்டர்கள் எல்லாம் நல்ல தரத்தில் கிடைக்குமெனச் சொல்ல முடியாது.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 5

இணைக்கருவிகளில் முக்கியமானது பவர் பேங்க். அவை எடை அதிகமானவை. அதனால், உங்கள் தேவைக்கேற்ப வாங்குவது அவசியம். எத்தனை மொபைல் வைத்திருக்கிறீர்கள், அவற்றின் சார்ஜ் எவ்வளவு நேரம் நீடிக்கும், அடுத்த முறை சார்ஜ் போட எவ்வளவு நேரம் கிடைக்கும் போன்ற காரணிகளைப் பட்டியலிட்டு அதற்குத் தேவையான திறனுள்ள பவர் பேங்க் வாங்க வேண்டும். மொபைலுடன் வந்த சார்ஜிங் கேபிளையே பயன்படுத்தவும். போலி கேபிள்கள் உங்கள் மொபைலையே காலி செய்துவிடும்.

பவர் பேங்க், புளூடூத் ஸ்பீக்கர்ஸ் போன்றவற்றை வீட்டிலிருக்கும் அனைவரும் பயன்படுத்தலாம். அதனால், பொதுவான மொபைல் இணை உபகரணங்கள் வாங்கும்போது வீட்டிலிருக்கும் அனைவரின் தேவைகளையும் புரிந்துகொண்டு வாங்கவும். இது பணத்தை மிச்சப்படுத்தும். மொபைல் போன் வாங்குவதில் காட்டும் அக்கறையைவிட, இணைக்கருவிகள் வாங்குவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். இல்லையெனில், அவை உங்கள் ஸ்மார்ட்போனையே பாழாக்கிவிடலாம்.

- ஸ்மார்ட் ஆவோம்...

 - ஓவியங்கள்: ரமணன்