Election bannerElection banner
Published:Updated:

திடீரென அதிகரிக்கும் 48 MP கேமரா மொபைல்கள்... சோனியின் 'சென்ஸார் ரகசியம்'

திடீரென அதிகரிக்கும் 48 MP கேமரா மொபைல்கள்... சோனியின் 'சென்ஸார் ரகசியம்'
திடீரென அதிகரிக்கும் 48 MP கேமரா மொபைல்கள்... சோனியின் 'சென்ஸார் ரகசியம்'

திடீரென ஸ்மார்ட்போன்களை ஆக்கிரமித்து வருகிறது சோனியின் IMX586 என்ற கேமரா சென்ஸார். அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

ண்மையில் வெளியான ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போனை அதன் கேமராவை வைத்துதான் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது ஷியோமி நிறுவனம். குறைந்த விலைதான், ஆனால் சாத்தியமா என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது அதில் இருக்கும் 48 MP கேமரா என்ற ஒரு விஷயம். ரெட்மி நோட் 7 புரோ மட்டுமல்ல அது வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளாகவே 48 MP கேமராவுடன் வெளியாகியிருக்கிறது Oppo F11 Pro என்ற அடுத்த ஸ்மார்ட்போன். இது மட்டுமல்ல இனிமேலும் இதே போல பல மொபைல்கள் சந்தையை நோக்கிப் படையெடுக்கப்போகின்றன. இப்படி திடீரென 48MP கேமராக்கள் ஸ்மார்ட்போன்களை ஆக்கிரமிப்பதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

முன்னிலையில் இருக்கும் சோனியின் சென்ஸார்

இந்தியாவில் 48 MP கேமரா என்ற ட்ரெண்டை தொடங்கி வைத்தது வாவே நிறுவனம்தான். கடந்த வருடம் வெளியான Honor View 20 என்ற ஸ்மார்ட்போனில் முதல்முறையாக 48 MP கேமரா கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்பொழுது இரண்டாவதாக ஷியோமி, அடுத்ததாக ஒப்போ ஆகியவை இதே மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களின் கேமராக்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது சோனி நிறுவனத்தின் IMX586 என்ற சென்ஸார்தான். 
பல முன்னணி மொபைல் நிறுவனங்கள் கேமராவிற்கான சென்ஸாரை அவற்றைத் தயாரிக்கும்  குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்தே வாங்கிப் பயன்படுத்துகின்றன. அவற்றில் சோனி மற்றும் சாம்சங் ஆகிய இரண்டும் முக்கியமானவை. சோனியின் கேமரா சென்ஸார்களின் தரம் அதிகம் என்பதால் பல மொபைல் நிறுவனங்களும் அதை வாங்கிப் பயன்படுத்துகின்றன. ஆப்பிள் கூட அதன் ஐபோன்களில் சோனியின் சென்ஸாரை பயன்படுத்துகிறது. இந்நிலையில் கடந்த வருடம் IMX586 என்ற புதிய கேமரா சென்ஸாரை வெளியிட்டது சோனி.

இதேபோல சாம்சங்கும் ISOCELL GM1 என்ற சென்ஸாரை அறிமுகப்படுத்தியது. இதுவும் சில ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருவதுதான் என்றாலும் கூட சோனியின் சென்ஸாருடன் ஒப்பிட்டால்  இதன் தரம் சற்று குறைவுதான். எனவே மொபைல் நிறுவனங்கள் பெரும்பாலும் சோனியின் சென்ஸாரையே பயன்படுத்த விரும்புகின்றன. எடுத்துக்காட்டாகச் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் சென்ஸார்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் வெளியான ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போனில்  IMX586 -ஐப் பயன்படுத்தியிருக்கிறது ஷியோமி. இதன் விலையும் மிகக் குறைவு. ஒரு சென்ஸாரின்  விலை இரண்டாயிரம் ரூபாய்க்கும் குறைவுதான். எனவே இதை மொபைல் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கும்போது அதை விடவும் குறைவான விலைக்குகூட கிடைக்கும். இந்த சென்ஸார் மூலமாக  அதிகபட்சமாக 48 MP திறன் கொண்ட படங்களை எடுக்கமுடியும். ஆனால் அதற்குப் பின்னால் ஒர் தந்திரமும் இருக்கிறது.  

மென்பொருள் செய்யும் மாயம் 


இப்படி 48 MP புகைப்படங்களை எடுத்துக் கொடுக்கும் இந்த சென்ஸாரின் உண்மையான மெகா பிக்ஸல் திறன் வெறும் 12 MP மட்டும்தான். அதற்கான ரகசியம் மென்பொருளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. மேலும் இந்த IMX586 சென்ஸாரிலும் குறிப்பிட்ட மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. பொதுவான ஒரு சென்ஸாரில் பேயர் (Bayer) அடுக்கு என்ற பகுதி கொடுக்கப்பட்டிருக்கும். இது கேமராவின் வழியாக உள்ளே வரும் ஒளியில் இருக்கும் நிறங்களைப் பிரித்து சென்ஸாருக்குள்ளே அனுப்பும். பேயர் அடுக்கில் 25 சதவிகிதம் சிவப்பு மற்றும் நீல நிறங்களுக்கானப் பகுதிகளும். 50 சதவிகிதம் பச்சை நிறத்துக்கான பகுதியும் கொடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு சென்ஸாரில் இந்த அடுக்கில் உள்ள நிறப் பகுதிகள் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்த IMX586 சென்ஸாரில் கீழே இருக்கும் படத்தில் உள்ளதைப் போல ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக, வெளிச்சம் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் அதிக ஒளியை உணர முடியும் என்பதால் இரவில் தெளிவான புகைப்படம் கிடைக்கும். இந்த மாற்றம் செய்யப்பட்ட போதிலும் இதனால் 48 MP புகைப்படங்களை எடுக்க முடியாது. அதற்கேற்றவாறு ஸ்மார்ட்போனில் உள்ள மென்பொருளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த சென்ஸார் 48 MP போட்டோ தேவைப்படும் போது மென்பொருள் அதற்குத் தகுந்த அளவு படங்களை எடுத்து ஒன்றிணைக்கிறது. எனவே இறுதியாகத் தேவைப்படும் அளவுள்ள போட்டோ கிடைக்கிறது. ஆனால் இதற்கு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புராஸசரும் அதன் வேகமும்  மிக முக்கியமானவை. அதற்கேற்ற வகையில் ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போனில் Snapdragon 675 புராஸசர் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 புரோவில் 48 MP போட்டோ எடுப்பதற்கான  ஆப்ஷன் கேமரா ஆப்பில் புரோ மோடு என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு