Published:Updated:

ஆன் லைன்... ஆஃப் லைன் - 7

விகடன் விமர்சனக்குழு

எமோஜி;

பிரீமியம் ஸ்டோரி
ஆன் லைன்... ஆஃப் லைன் - 7

மொபைல்தான் இப்போது எல்லாமே. பணப் பரிமாற்றத்திலிருந்து பர்சனல் பஞ்சாயத்து வரை எல்லாமே மொபைல் மூலம்தான். சொல்லப்போனால் ஒரு மொபைலை ஹேக் செய்தால் அது புதையல்தான். அதன்மூலம் பணம் கிடைக்கும்; என்டெர் டெயின்மென்ட் கிடைக்கும்; ஒருவரைப் பழிவாங்க வாய்ப்பு கிடைக்கும். இன்னும் ஏராளமான ‘கிடைக்கும்’கள். அப்படியென்றால் அந்த மொபைலைத் தாக்க எப்படியெல்லாம் யோசிப்பார்கள்? அழிப்பவர்களே அவ்வளவு யோசித்தால் அதைவிட அதிகமாக அதைக் காக்க நினைப்பவர்கள் யோசிக்க வேண்டாமா? ஸ்மார்ட்டாக யோசிக்கலாம் வாங்க.

மொபைல் தாக்குதல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1) ஆப் மூலம் நடக்கும் தாக்குதல்கள்.
2) இணையம் மூலம் நடக்கும் தாக்குதல்கள்.
3) நெட்வொர்க் வழி நடக்கும் தாக்குதல்கள்.
4) மொபைலைத் திருடி நடக்கும் தாக்குதல்கள்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 7

ஆப் மூலம் நடக்கும் தாக்குதல்கள்

எந்தச் செயலியைத் தரவிறக்கினாலும் அவை முதலில் சில அனுமதிகளைக் கேட்கும். அவை என்னவென்று கவனிக்காமல் சரியெனத் தலையாட்டிவிட்டால் அவை நம் மொபைலிலிருந்து வேண்டிய தகவல்களை எடுத்துக்கொள்ளும். ஏற்கெனவே பல செயலிகளுக்கு இப்படித் தந்துவிட்டேனே என நினைப்பவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒன்றைச் செய்யவும்.

Settings > Apps & Notifications > App Permissions. இங்கே போய்ப் பாருங்கள். மொபைலின் எந்தெந்த வசதிகளை எந்தெந்தச் செயலிகள் பயன்படுத்த அனுமதி தந்திருக்கிறோம் என்பதைப் பார்த்து வேண்டாதவற்றை நீக்கிவிடுங்கள்.

இது மட்டுமல்ல, சிலர் ப்ளே ஸ்டோர் மூலமாக இல்லாமல் நேரிடையாக APK ஃபைல் மூலம் செயலிகளை இன்ஸ்டால் செய்வதுண்டு. அவை உங்களுக்கு நன்கு தெரிந்த செயலிகள் என்றால் பரவாயில்லை. இல்லையென்றால் அவை மொபைலில் என்னவெல்லாம் செய்யுமென்பதை நம்மால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது. பெரும்பாலான டிராக்கிங் ஆப்ஸ் இப்படித்தான் நம் மொபைலில் குடியேறுகின்றன. மாதம் ஒரு முறையாவது உங்கள் மொபைலில் இருக்கும் செயலிகளை ரிவ்யூ செய்து தேவையில்லாதவற்றை நீக்கிவிடுங்கள்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 7

இணையம் மூலம் நடக்கும் தாக்குதல்கள்

ஆப்ஸ் இருந்தாலும் மொபைல் பிரவுசர் வழியாகவும் பல இணையதளங்களை நாம் பார்ப்பதுண்டு. சில இணையதளங்கள் மூலம் மால்வேர் எனப்படும் பிரச்னைகள் நம் மொபைலில் டவுன்லோடு ஆகலாம். அவை நம் பர்சனல் தகவல்களைத் திருடுவதோடு மொபைலையே பாழாக்கலாம். பொதுவாக ஆபாச இணையதளங்கள், பாதுகாப்பற்ற தளங்களுக்குச் செல்லும்போது வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலம் நம் மொபைலுக்கு இவை வரலாம். மொபைலில் திரை சிறியது என்பதால் நாம் எதை க்ளிக் செய்கிறோம் என்பதை முழுவதுமாகப் பார்க்காமல் க்ளிக் செய்வோம். அதைத்தான் மால்வேர் அட்டாக் செய்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 7

நெட்வொர்க் வழி நடக்கும் தாக்குதல்கள்

``காஸ்ட்லி போனுதான் கையில இருந்தாலும்
ஓசி வைஃபைக்கு அலைஞ்சிடுவோம்!”

சமீபத்தில் ஹிட் ஆன ஒரு பாடலில் வந்த வரிகள் இவை. நாம் போகும் பல இடங்களில் இப்படி இலவச இணையம் கிடைக்கலாம். அவை எல்லாமே பாதுகாப்பான இணையச் சேவை எனச் சொல்லிவிட முடியாது. அந்த நெட்வொர்க்கிலிருக்கும் போது நாம் செய்யும் அத்தனை நடவடிக்கைகளையும் இன்னொருவர் நமக்கே தெரியாமல் பார்க்கும் வாய்ப்புண்டு. வங்கி மற்றும் பணம் தொடர்பான பரிமாற்றங்களை இதுபோன்ற இணையச் சேவை மூலம் செய்யாமலிருக்கலாம். முடிந்தவரை தெரியாத நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 7

மொபைலைத் திருடி நடக்கும் தாக்குதல்கள்

மேலே சொன்ன அனைத்துத் தாக்குதல்களையும் சமாளிக்கும் டெக்னாலஜி தெரிந்தவர்கள்கூட இன்னொரு சின்ன விஷயத்தில் மாட்டிக்கொள்வதுண்டு. சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் 34% பேர் தங்கள் மொபைல்களுக்கு பாஸ்வேர்டு போடுவதில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனி பாஸ்வேர்டு போடலாம். அதுகூடப் பரவாயில்லை. பலர் மொபைலுக்கே பாஸ்வேர்டு போட்டு லாக் செய்வதில்லை. ஒருவேளை எங்கேயாவது மொபைலை சார்ஜ் போடுகிறோம் என வைத்துக்கொள்வோம். 2 நிமிடங்களில் ஒருவர் உங்கள் மொபைலைத் திறந்து போதுமான தகவல்களை அவர் மொபைலுக்கு மாற்றிக்கொள்ளலாம்; ஒரு டிராக்கிங் ஆப்பை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யலாம். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பிக்கொள்ளலாம்.

பாஸ்வேர்டு வைப்பவரும், மறக்காமலிருக்க 1234, ABCD அல்லது பிறந்த வருடம் ஆகியவற்றை பாஸ்வேர்டுகளாக வைப்பதுண்டு. நம்மைத் தெரிந்தவர்கள் மொபைலைத் திருடினால் இவற்றை எளிதில் யூகித்துவிடலாம். அதனால் பாஸ்வேர்டை வைப்பது மட்டுமல்ல; அதை மற்றவர்களால் யூகிக்க முடியாத ஒன்றாக வைப்பதும் அவசியம்.

ஸ்மார்ட்போன் எனச் சொல்லிவிட்டு இவ்வளவு பிரச்னைகளைச் சொன்னால் எப்படி என்கிறீர்களா? எங்கே வசதிகள் அதிகமோ அங்கே பிரச்னைகளும் அதிகம். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல; தொழில்நுட்பத்துக்கும் பொருந்தும். நம் மொபைல் ஸ்மார்ட்போன் ஆனால் நாமும் ஸ்மார்ட் ஆகத்தானே வேண்டும்?

- ஸ்மார்ட் ஆவோம்

 ஓவியங்கள்: ரமணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு