Published:Updated:

பிரைவசிக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஆண்ட்ராய்டு Q பீட்டா... தரமான சம்பவமாக இருக்குமா?

ஆண்ட்ராய்டு Q பீட்டாவைத் தற்பொழுது வெளியிட்டிருக்கிறது கூகுள். இன்னும் சில மாதங்களில் இதன் முழுமைப்படுத்தப்பட்ட பதிப்பு வெளியாகும்

பிரைவசிக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஆண்ட்ராய்டு Q பீட்டா... தரமான சம்பவமாக இருக்குமா?
பிரைவசிக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஆண்ட்ராய்டு Q பீட்டா... தரமான சம்பவமாக இருக்குமா?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பின் பீட்டா வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது கூகுள். இறுதியாகக் கடந்த வருடம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு Q இந்த வருடம் வெளியாகவுள்ளது. பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக வருவதற்கு முன்பாக அதன் பீட்டா பதிப்பு வெளியிடப்படும். இதைக் கடந்த நான்கு பதிப்புகளுக்கும் இதைப் பின்பற்றி வருகிறது. இதன் மூலமாக அதைப் பற்றிய நிறை குறைகளைக் கூகுள் தெரிந்துகொண்டு அதைச் சரி செய்யும். 

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இந்த பீட்டா பதிப்பை கூகுளின் சொந்த ஸ்மார்ட்போனான பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு  செய்து கொள்ள முடியும். இது அண்மையில் வெளியான Pixel 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமன்றி அதற்கு முன்பு வெளியான அனைத்து பிக்ஸல் ஸ்மார்ட்போன்களிலும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். வரும் மே மாதம் நடைபெறும் Google IO 2019 டெவலப்பர் மாநாட்டில் ஆண்ட்ராய்டு Q-வின் முழுமையான வசதிகள் பற்றிய தகவல்களை கூகுள் வெளியிடும். அதற்கு முன்பாக தற்பொழுது அதன் பீட்டா பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான சில வசதிகள் இவைதாம்.

privacy protections 

ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படும் டேட்டாவின் முக்கியத்துவத்தை மக்கள் அண்மைக்காலமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்றவாறு ஒவ்வொரு முறையும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையும் அதே போல ஒருவரது தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு ஆப் ஸ்மார்ட்போனிலிருந்து பெற்றுக்கொள்ளும் தகவல்களை முன்பை விட இதில் கவனிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். எடுத்துக்காட்டாக ஒரு ஆப் செயல்பாட்டில் இருக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் மறைவாக இயங்கிக்கொண்டிருக்கும். அதுபோன்ற சமயங்களில் தகவல்களை அவற்றால் அணுகவும் முடியும். ஆனால், இந்த இயங்குதளத்தில் அதற்கான கட்டுப்பாடு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போது ஒரு ஆப் ஒருவரது இருப்பிடத்தை அறிந்துகொள்ள அனுமதி கேட்டால் ஒன்று அனுமதியை மறுக்க முடியும் அல்லது அனுமதியளிக்க முடியும். ஆனால், ஆண்ட்ராய்டு Q-வில் ஒரே ஒரு முறை மட்டும் அறிந்துகொள்ள அனுமதி கொடுக்க முடியும். 
மேலும் ஸ்மார்ட்போனின் IMEI எண், MAC அட்ரெஸ் போன்றவற்றை ஸ்மார்ட்போன்களைத் தொடர்பு கொள்ளும் நெட்வொர்க்குகள் அணுகுவதற்கான வழிகள் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலமாக வைஃபை போல நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் போது நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும். 

ஃபோல்டபிள் டிஸ்ப்ளே


இந்த வருடம் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் ஃபோல்டபிள் டிஸ்ப்ளேவை அதிகமாக எதிர்பார்க்க முடியும். ஏற்கெனவே சாம்சங், ஹுவாவே என மொபைல் நிறுவனங்கள் ஃபோல்டபிள் டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டன. இந்த வகை ஸ்மார்ட்போன்கள் வரும் காலங்களில் சந்தையை ஆக்கிரமிக்கும். மேலும் இவற்றில் இருக்கப்போவது ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான். வரும் காலங்களில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்காக இப்போதிருந்தே தயாராகிவிட்டது கூகுள். இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பெரிய டிஸ்ப்ளேவிற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இருப்பதை விடவும் சிறப்பான அனுபவத்தை இதன் மூலமாகப் பெற முடியும்.

ஷேரிங் ஷார்ட்கட்ஸ் 


ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் ஒருவர் ஒரு போட்டோவோ, வீடியோவோ எதுவாக இருந்தாலும் அதை மற்றவருக்கு வேகமாக ஷேர் செய்யவே விரும்புவார்கள். அதை தற்பொழுது இருப்பதை விடவும் வேகமாக மாற்ற இந்த ஷேரிங் ஷார்ட்கட்ஸ் வசதி உதவும்.     

Settings Panels


வழக்கமாக அடிப்படையான செட்டிங்ஸ் தேவைப்படும் பட்சத்தில் டிஸ்ப்ளேவின் மேலே இருக்கும் பகுதியில் அதை அணுக முடியும். ஆனால் இதில் ஒரு ஆப்பிற்கு ஏற்ற செட்டிங்ஸ் அதனுள்ளே காட்டப்படும். எடுத்துக்காட்டாக ஒரு செயலிக்கு இணைய இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் அதைத் தேர்ந்தெடுக்க எளிதாக ஒரு பக்கம் ஆப்-பினுள்ளே காட்டப்படும். இவை பீட்டா பதிப்பில் உள்ள வசதிகள் மட்டுமே, இது இறுதியாக வெளியாகும் போது இன்னும் சிறப்பான வசதிகளைப் பெற முடியும். பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு உணவுப் பொருள் ஒன்றின் பெயரையே வைக்கும் கூகுள். இந்த முறை ஆண்ட்ராய்டு Q-வுக்கு என்ன பெயரிடப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.