சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

எமோஜி

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

மொபைல் ஸ்கிரீன் மற்றும் பேட்டரி. இவைதாம் மொபைலின் வாழ்நாளை பாதிக்கும் இரண்டு முக்கியமான விஷயங்கள். திரைகூட நாம் மொபைலைக் கீழே போடுவதால் உடையும். பேட்டரிதான் என்ன நடந்ததென்றே தெரியாமல் பாழாய்ப்போகும். செய்யாத தவற்றுக்குத் தண்டனை என்றால் யாருக்குத்தான் கடுப்பாகாது? ஆனால், பேட்டரி வீணாவதும் நம் செயலால்தான் என்பதை நாம் அறிவதில்லை. எப்படி? முதலில் பேட்டரி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

இப்போது வரும் மொபைல்களில் பயன்படுத்தப்படுவது லித்தியம் அயன் பேட்டரிகள். மற்ற பேட்டரிகளைவிட விலை அதிகம். அதிக சக்தியை வெளிப்படுத்தக்கூடியதாலும், அளவில் சிறியது என்பதாலும் இதை மொபைலுக்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு காரணமும் உண்டு.  அது, இந்த வகை பேட்டரிகளில் இருக்கும் பாதுகாப்புக்காக இருக்கும் ஸ்மார்ட் சர்க்யூட்.  ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்பிருந்த மொபைல்கள் 100% சார்ஜ் ஆன பிறகு மின்சாரம் தொடர்ந்தால் பேட்டரி சூடாகும். பின், குண்டாகும். சில சமயம் வெடிக்கவும் செய்யும். இந்த ஸ்மார்ட் சர்க்யூட்தான் மொபைல் 100% சார்ஜ் ஆன பின் சார்ஜரை எடுக்காமல் விட்டாலும் பேட்டரியைப் பாதுகாக்கிறது. இரவு முழுவதும் சார்ஜ் போட்டாலும் பாதிப்பில்லை.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

இன்னொரு விஷயம், இந்தப் பாதுகாப்பு சர்க்யூட்டால் பேட்டரிக்குப் பிரச்னையில்லை. ஆனால், தொடர்ந்து சார்ஜ் போட்டுக்கொண்டேயிருப்பதால் அதன் வாழ்நாள் குறையலாம் என்கிறது இன்னொரு ஆய்வு. ஒரு பேட்டரியின் வாழ்நாள் என்பது அதை எத்தனை முறை சார்ஜ் செய்து பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்கிறது. மொபைல் பேட்டரிகளை 90 சதவிகிதத்துக்கு அதிகமாகவும், 10 சதவிகிதத்துக்குக் குறைவாகவும் போகாமல் பார்த்துக்கொண்டால் அதன் வாழ்நாள் நீடிக்கும். இடையில் எப்போது வேண்டுமென்றாலும் சார்ஜ் போட்டுக்கொள்ளலாம். அடிக்கடி பேட்டரியின் சார்ஜ் முழுவதும் தீர்ந்து  மொபைல் ஆஃப் ஆகி விட்டால், பேட்டரியின் ஆயுள் வெகுவாகக் குறையும். போலவே, 100% தொடர்ந்து இருந்தாலும் குறையும். 10% - 90% பேட்டரிக்கான மிகச்சரியான சார்ஜ் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

சார்ஜரைப் பொறுத்தவரை இரண்டு விஷயம் முக்கியமானவை. ஒன்று மின்னழுத்தம் (Voltage) மற்றொன்று மின்சாரத்தின் அளவு (Amps). ஒவ்வொரு பேட்டரியிலும் இந்த இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கேற்ற சார்ஜர்கள் என்றால் எந்த நிறுவனத்தின் சார்ஜரையும் பயன்படுத்தலாம். வோல்டேஜ் குறைவாக இருந்தால் சார்ஜ் ஆகாது. அதிகமாக இருந்தால் அது பேட்டரியை பாதிக்கும். ஆனால், மின்சாரத்தின் அளவு பிரச்னையில்லை. சார்ஜரின் திறன் அதிகமிருந்தால் தேவையான மின்சாரத்தை மட்டும் பேட்டரி எடுத்துக்கொள்ளும்.  குறைவாக இருந்தால் சார்ஜ் ஏறாதே தவிர பேட்டரி பாதிக்கப்படாது. முடிந்தவரை ஒரிஜினல் சார்ஜரையே பயன்படுத்தவும். தவிர்க்க முடியாத சூழலில் பேட்டரியின் மின்னழுத்தம் மற்றும் மின்சாரத்தின் அளவுக்கேற்ற மற்ற சார்ஜர்களைப் பயன்படுத்தலாம்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

பேட்டரி என்பது ஒரு நிரந்தரமான பொருளல்ல. அதற்கு ஓர் ஆயுள் உண்டு. குறிப்பிட்ட தடவை சார்ஜ் செய்தால் அதன்பின் அது பயனற்றுப்போகலாம். ஒவ்வொருவரின் பயன்பாட்டைப் பொறுத்து பேட்டரியின் ஆயுள் கூடலாம்; குறையலாம். எனவே, பேட்டரியின் ஆயுளை நாள்களால் கணிக்காமல் எத்தனைமுறை சார்ஜ் செய்யப்பட்டது என்பதை வைத்தே கணக்கிட வேண்டும்.

பேட்டரியின் பர்ஃபாமென்ஸை பாதிக்கும் இன்னொரு விஷயம் வெப்பநிலை. மொபைலை சூடான இடத்தில் அதிக நேரம் வைப்பதால் பேட்டரியின் ஆயுளும் குறையும். காரில் பயணிக்கும்போது சூரிய ஒளி படும்படி டேஷ்போர்டில் வைப்பது, வேலை செய்யும் இடத்தின் வெப்பநிலை அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் நம்மை அறியாமல் மொபைலை நாமே பாழாக்குவதுண்டு.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 8

மொபைலை பல நாள்களுக்கு சார்ஜ் போடாமலே வைத்திருப்பதும் தவறுதான். இதனால் பேட்டரியில் இருக்கும் பாதுகாப்பு சர்க்யூட் செயலிழந்து, பேட்டரி தன் முழு சார்ஜை இழந்துவிடும். இது பேட்டரியின் ஆயுளைக் குறைப்பது மட்டுமல்ல; மீண்டும் அந்த பேட்டரியைப் பயன்படுத்தவே முடியாத சூழலுக்குத் தள்ளிவிடும். மொபைலைப் பயன்படுத்தாவிட்டாலும் அவ்வப்போது சார்ஜ் போட்டு வைக்கவும்.

உங்கள் மொபைல் பேட்டரி மற்றும் சார்ஜரின் திறன்களை இன்றே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். நம் மொபைலை நாம் எவ்வளவு தூரம் அறிந்துவைத்திருக்கிறோம் என்பதுதான் அதை நாம் ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த உதவும்.

- ஸ்மார்ட் ஆவோம்

 - ஓவியங்கள்:  ரமணன்