Published:Updated:

`ஐ அக்ரி’, பொது இடத்தில் Wifi, பாப் அப் மெசேஜ், லொகேஷன் ஷேரிங்... ஃபேஸ்புக் பாதுகாப்பு!

இணையத் திருடர்கள் ஒருவருடைய சமூக வலைதளங்களை சில நிமிடங்கள் பார்த்தால் போதும், அத்தனை தகவல்களையும் சேகரித்துவிடலாம். ஏனெனில்...

`ஐ அக்ரி’, பொது இடத்தில் Wifi, பாப் அப் மெசேஜ், லொகேஷன் ஷேரிங்... ஃபேஸ்புக் பாதுகாப்பு!
`ஐ அக்ரி’, பொது இடத்தில் Wifi, பாப் அப் மெசேஜ், லொகேஷன் ஷேரிங்... ஃபேஸ்புக் பாதுகாப்பு!

ன்று, நாம் எல்லோருமே ஸ்மார்ட்போன்களை எந்நேரமும் இணைய இணைப்பில்தான் வைத்திருக்கிறோம். இது சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை அதிகப்படுத்தும். கடந்த 2018, ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் சுமார் 250 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. இணையத் திருடர்கள் ஒருவருடைய சமூக வலைதளங்களை சில நிமிடம் பார்த்தால் போதும், அத்தனை தகவல்களையும் சேகரித்துவிடலாம். ஏனெனில், புகைப்படம், தொலைபேசி எண்கள், முகவரி என ஒருவருடைய தனிப்பட்ட எல்லா தகவல்களும் கிடைக்கும் ஒரே இடம் ஃபேஸ்புக். அதனால் அதைக் கவனத்துடன் கையாள்வது முக்கியம்.

எல்லோரையும் நம்பக் கூடாது!

நண்பர்கள், குடும்பத்தினர், வகுப்புத் தோழர்கள், சகப்பணியாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருக்க, சமூக வலைதளங்கள் உதவுகின்றன. இவர்களைத் தவிர, உங்களுக்கு வரும் ப்ரெண்ட் ரிக்வஸ்ட்டுகளை கவனமாகப் பரிசீலித்து, அவர்கள் சரியான நபர்கள்தானா, குறைந்தபட்சம் இருவருக்கும் பொது நண்பர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்யுங்கள். ஆன்லைனில் புதிய மனிதர்களுடன் பழக விரும்பினால், உங்களுக்கு ஆர்வமுள்ள வலைப்பக்கங்கள், போரம்கள், குழுக்களில் இணைந்து எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளலாம். அதைத் தாண்டி வேறெந்த விஷயத்தையும் அவர்களிடம் கேட்பதும் பகிர்ந்துகொள்வதும் கூடாது. 

உங்களுக்கு அறிமுகமாகாத நபர்களிடமிருந்து அல்லது நீங்கள் பேசவே விரும்பாத நபரிடமிருந்து ப்ரெண்ட் ரெக்வஸ்ட் வந்தால், அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். அதேமாதிரி ஏற்கெனவே உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும், தொந்தரவு கொடுக்கும் நபர்களையும் பிளாக்செய்ய அல்லது நட்பு வட்டத்திலிருந்து நீக்கவும் தயங்க வேண்டாம். சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி வன்கொடுமைச் சம்பவமும் ஃபேஸ்புக் விஷயங்களை மையமாக வைத்துதான் அரங்கேறியிருக்கிறது.
 
அனைத்தையும் பகிராதீர்கள்!

நம்மில் பெரும்பாலானவர்கள் எங்குப் போனாலும் அங்கிருந்து ஒரு செல்ஃபியை எடுத்து, லொகேஷனையும் பகிர்கிறோம். இது ஆபத்துக்கு அடித்தளம் அமைக்கும் செயல். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்று காட்டும் லொகேஷன் சொல்லும் ஆப்ஷன்களை முதலில் அணைத்து வையுங்கள். புகைப்படங்கள் போடும்போது யாரெல்லாம் பார்க்கலாம் என்பதில் கூடுதல் கவனம் தேவை. ஏனென்றால், புகைப்படங்களை save செய்து, தவறாகச் சித்திரிக்க வாய்ப்புண்டு. மற்றவர்களின் புகைப்படங்களையும் உங்கள் பக்கத்தில் பதிவிட அனுமதிக்க வேண்டாம். எந்த ஒன்றையும் பதிவிடுவதற்கு முன்பாக, அதைச் செய்யலாமா என முடிவெடுக்க காமன்சென்ஸைப் பயன்படுத்துங்கள். 

பவர்ஃபுல் பாஸ்வேர்டு

உங்கள் பாஸ்வேர்டு நினைவில் வைக்க எளிதாகவும், மற்றவர்கள் யூகிக்க முடியாத வகையிலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு அக்கவுன்ட்டுக்கும் இமெயில், நெட்பேங்கிங் இப்படி எல்லாவற்றுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டு இருக்கட்டும். பிறந்த நாள், மொபைல் எண், குடும்பத்தினர் அல்லது செல்லமானவர்களின் பெயர் இவற்றை பாஸ்வேர்டுக்குப் பயன்படுத்த வேண்டாம். எழுத்துகள், எண்கள், சிறப்பு கேரக்டர்கள் இணைந்ததாக இருக்கட்டும். முக்கியமாக, யாருடனும் பாஸ்வேர்டைப் பகிர வேண்டாம். வேறு யாரையும் உங்கள் கணக்கைக் கையாள அனுமதிக்க வேண்டாம். குறிப்பாக, உங்களின் முதன்மையான இமெயில் ஐடி-யின் பாஸ்வேர்டைப் பயன்படுத்தவே வேண்டாம். கூடுதல் பாதுகாப்புக்காக பேஸ்புக், கூகுள் போன்றவை அளிக்கும் உங்கள் செல்போன் எண்ணுடன், இமெயிலுடன் லிங்க் செய்து இரட்டை வெரிபிகேஷன் முறையைப் பின்பற்றலாம்.  
 
தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கவும் 

மொபைல் எண், பர்சனல் இமெயில் ஐடி, வீட்டு முகவரி, போன் நம்பர், பிறந்த தேதி அல்லது உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் எந்த ஒரு தகவலையும் ஆன்லைனில் அளிக்க வேண்டாம். சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும், உங்கள் ஸ்டேட்டஸ் மெசேஜ்களை, பகிர்வுகளை யாரெல்லாம் பார்க்கலாம் எனக் கட்டுப்படுத்தும் ஆப்ஷன்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்துங்கள். உங்கள் அனுமதியின்றி உங்களை டேக் செய்யாமலிருக்கக் கட்டுப்பாடுகள் வையுங்கள். பதிவுகளை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை `ப்ரெண்ட்ஸ் ஆப் ப்ரெண்ட்ஸ்’ என்பதிலிருந்து `ப்ரெண்ட்ஸ் ஒன்லி’க்கு மாற்றுங்கள்.  
 
கடும் நடவடிக்கைகள்

சமூக வலைதளங்களில் நீங்கள் விரும்பத்தகாத வகையில் கமென்ட்கள் அளிப்பவர்களை உடனடியாக நட்புப் பட்டியலில் இருந்து நீக்குங்கள். பிளாக் செய்வதும் நல்லதே. அப்போது அவர்களால் உங்களுடன் எந்த விதத்திலும் தொடர்புகொள்ள முடியாது. அவர்களின் நடத்தை அதைவிடவும் மோசமாக இருந்தால், சமூக வலைதள சேவை அளிக்கும் நிறுவனத்தில் புகார் செய்யலாம். விதிகளுக்கு மாறாகச் செயல்படுகிறவர்களைக் கண்டறிந்து வெளியேற்றவும் முறைப்படுத்தவும் தனிக்குழுக்கள் இருக்கின்றன. உங்களை யாராவது தொந்தரவு/வன்கொடுமை செய்தாலோ, உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ, நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தாலோ அல்லது மிரட்டினாலோ, சைபர் க்ரைம் பிரிவில் அச்சமின்றி புகார்செய்யலாம். இதற்கென இருக்கும் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
 
முன்பே தெரிந்துகொள்ளுங்கள்

ஒரு சமூக வலைதளத்தில் இணைவதற்கு முன்பாக, அதன் பிரைவசி பாலிசிகள், நிபந்தனைகள், விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளவும். ஒவ்வொரு தளத்திலும் இவற்றில் வித்தியாசம் இருக்கும். எதையும் படிக்காமல், `ஐ அக்ரீ’ என்ற பட்டனை அழுத்துவது பெரும் தவறு. பிறகு இதுவே பிரச்னைகளுக்குக் காரணமாகலாம். எனவே, எல்லா பிரைவசி செட்டிங்குகளையும் செக் செய்துவிட்டு, உங்கள் தேவைக்கேற்ப அவற்றை மாற்றிவைக்கவும். உங்கள் கணினி, ஸ்மார்ட்போனில் நல்ல ஆன்டிவைரஸ், ஸ்பைவேர் சாப்ட்வேர் இருக்கட்டும். பொது இடங்களில் வைஃபை பயன்படுத்துவது உங்கள் தகவல்களைத் திருட உதவும். ஆகவே, தவிர்க்கவும். அதுபோல பிரவுஸ் செய்யும்போது வந்து பளிச்சிடும், கவனத்தைக் கோரும் பாப்-அப் மெசேஜ்களைத் தொடவே கூடாது. மேலும், பாதுகாப்பான இணையதளங்களில் மட்டுமே ஷாப்பிங் செய்யுங்கள்.