Published:Updated:

``பழைய புராசஸர்... சுமாரான டிஸ்ப்ளே!’’ - மோட்டோரோலாவுக்கு என்னதான் ஆச்சு? #MobileReview

இதே விலையில் இதைவிட அதிக வசதிகளுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. எனவே, இந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம்தான்.

``பழைய புராசஸர்... சுமாரான டிஸ்ப்ளே!’’ - மோட்டோரோலாவுக்கு என்னதான் ஆச்சு? #MobileReview
``பழைய புராசஸர்... சுமாரான டிஸ்ப்ளே!’’ - மோட்டோரோலாவுக்கு என்னதான் ஆச்சு? #MobileReview

மோட்டோரோலாவின் நிலைமை கடந்த சில வருடங்களாகவே கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. பட்ஜெட் செக்மென்ட் தொடங்கி பிரீமியம் செக்மென்ட் வரை அனைத்து இடங்களிலும் மோட்டோவின் இடம் பறிபோய் பல காலம் ஆகிறது. கூகுளின் கையிலிருந்தவரை மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் தனி மதிப்பு இருந்தது. ஆனால் நிறுவனம் என்றைக்கு லெனோவோவிடம் கைமாறியதோ அன்றைக்குத் தொடங்கியது மோட்டோரோலாவின் வீழ்ச்சி.

இந்த முடிவின் மூலமாக மோட்டோரோலாவின் தனித்தன்மை குறையும் என ரசிகர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது போலவே நடந்தது. மோட்டோ ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் மாற்றம் நன்றாகவே தெரிந்தது. அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தையில் அதன் இடத்தை இழந்தாலும், மொத்தமாகப் பின்வாங்கவில்லை மோட்டோரோலா. அவ்வப்போது ஏதாவது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதுபோல நேற்றைக்கு மோட்டோ ஒன் மற்றும் G7 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மோட்டோ G7  மற்றும் ஒன்


தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தியவர்களுக்கு மோட்டோவின் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் தேவையிருக்காது. ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் செக்மென்ட்டில் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றவை. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பரவலாக்கியதில் இவற்றின் பங்கு அதிகம். ஆனால், இவற்றுக்கான வரவேற்பும் படிப்படியாகக் குறைந்துபோனது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ஏழாம் தலைமுறை ஸ்மார்ட்போன். G7 என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் பிரேசிலில் வெளியாகியிருந்தது. அதன் பிறகு இந்தியாவில் G7 பவர் என்ற ஸ்மார்ட்போனை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 6.2 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. ஆனால், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியே கொடுக்கப்பட்டுள்ளது. இதே செக்மென்ட்டில் இதைவிட அதிக பாதுகாப்பான டிஸ்ப்ளேவை பிற நிறுவனங்கள் அதன் ஸ்மார்ட்போன்களில் வழங்குகின்றன. பின்புறமாக 12+5 மெகா பிக்சல் டூயல் கேமரா இருக்கிறது. முன்புறமாக 8 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் புராஸசர் என்ற விஷயம் பலரால் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

இதில் Snapdragon 632 புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சற்று திறன் குறைவான பழைய புராஸசர் .கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னால் வெளியான பழைய புராஸசரை இதில் கொடுத்திருக்கிறது மோட்டோரோலா. இது நிச்சயம் இந்த ஸ்மார்ட்போனுக்கு பின்னடைவுதான். இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் 3500 mAh-க்கு குறைவாக பேட்டரி கொடுக்கப்படுவது கிடையாது. ஆனால், இதில் 3000 mAhபேட்டரியை கொடுத்திருக்கிறது மோட்டோரோலா. ஆனால், இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. இதில் இருக்கும் 15 W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலமாக வெறும் 15 நிமிட சார்ஜிங்கில் 9 மணி நேரம் பயன்படுத்துவதற்கான பவரை பெற்றுவிட முடியும் என்கிறது மோட்டோரோலா. 4GB ரேம் 64 GB இன்டெர்னல் மெமரி வேரியண்ட் 16,999 ரூபாய்க்குக் கிடைக்கும்.

அடுத்ததாக மோட்டோ ஒன் ஸ்மார்ட்போனை 13,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது மோட்டோரோலா. கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5.9-இன்ச் டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. இதில் வழக்கமான நாட்ச் தரப்பட்டுள்ளது. 13+2 மெகா பிக்சல் கேமரா பின்புறமாகவும் 8 மெகா பிக்சல் கேமரா முன்புறமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. Snapdragon 625 புராஸசர் இதில் இருக்கிறது. இது இரண்டு வருடம் பழைய புராஸசர் என்பதால் அதற்கேற்ற செயல்திறன்தான் இருக்கும். 3000 mAh பேட்டரி 15 W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதே விலையில் இதைவிடப் பல மடங்கு வசதிகளுடன் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறது மோட்டோரோலா. இதே நிலை நீடித்தால் என்ன நடக்கும் என்பது மோட்டோரோலா நிறுவனத்துக்கு நன்றாகவே தெரியும். கடுமையான போட்டி நிலவும் இந்திய மொபைல் சந்தையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம்தான்.