Published:Updated:

ரெட்மி நோட் 7 வாங்கப் போறீங்களா... அப்போ இந்த சாம்சங் போனையும் பார்த்துடுங்க!

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு இது போட்டியாக இருக்கும் என நினைக்கிறது சாம்சங்.

ரெட்மி நோட் 7 வாங்கப் போறீங்களா... அப்போ இந்த சாம்சங் போனையும் பார்த்துடுங்க!
ரெட்மி நோட் 7 வாங்கப் போறீங்களா... அப்போ இந்த சாம்சங் போனையும் பார்த்துடுங்க!

ட்ஜெட் செக்மென்ட்டில் கடந்த மாதம் ஷியோமி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. 48 MP கேமரா என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் வெளியான ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ என இரண்டும் விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கடந்த பின்னரும் இன்னும் இன்னும் பலரால் அவற்றை வாங்க முடியவில்லை. விற்பனைக்கு வந்த அடுத்த நொடியில் காணாமல் போய்விடுகின்றன இரண்டும். மற்ற நிறுவனங்கள் இதற்கு பதிலடியாக எந்த ஸ்மார்ட்போனை களமிறக்கலாம் எனத் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கிட்டத்தட்ட அதே விலையில் சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை நேற்றைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

ரெட்மி நோட் 7 சீரிஸ்-க்கு மாற்றாக இருக்குமா இந்த Samsung Galaxy A20?


ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 புரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இடைப்பட்ட விலையில் இதை அறிமுகம் செய்திருக்கிறது சாம்சங். நீங்க எந்த வசதியை வேணாலும் உங்க ஸ்மார்ட்போன்ல கொடுக்கலாம் ஷியோமி, ஆனால் இத மட்டும் கொடுக்கவே முடியாதுனு சாம்சங் சொல்ற ஒரு விஷயம் AMOLED டிஸ்பிளேதான். ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கும் AMOLED டிஸ்பிளே தேவையைத் தீர்த்து வைப்பதில் சாம்சங்கின் பங்கு அதிகம். இந்த வகை டிஸ்பிளேவின் விலை அதிகம் என்பதால் மற்ற நிறுவனங்கள் பிரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இதைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், சாம்சங் நிறுவனத்திடம் சொந்தமாகவே இதைத் தயாரிக்கும் திறன் இருப்பதால் விலை குறைவான ஸ்மார்ட்போன்களில்கூட இதைப் பயன்படுத்துகிறது. கேலக்ஸி A20 ஸ்மார்ட்போனில் இருப்பது 6.4 இன்ச் Super AMOLED டிஸ்பிளேதான். இந்த ஸ்மார்ட்போனில் 13+5 MP டூயல் கேமராக்கள் பின் பக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறமாக 8 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Exynos 7884 Octa புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 GB + 32 GB என்ற ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே இது விற்பனைக்கு வருகிறது. ஆனால் ரெட்மிபோல இதில் இருப்பது ஹைபிரிட் சிம் ஸ்லாட் இல்லையென்பதால் கவலை இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ரெட்மியுடன் ஒத்துப்போகும் ஒரு விஷயம் பேட்டரி. 4000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 15W சார்ஜர் கையில் இருந்தால் வேகமாக சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும். பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் Type-c போர்ட் கொடுக்கும் வழக்கத்தை ஷியோமி தொடங்கி வைத்தது. எனவே இதிலும் Type-c போர்ட் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மற்றபடி பில்டு குவாலிட்டி போன்ற விஷயங்களில் ரெட்மியே முன்னிலையில் இருக்கிறது. ரெட்மி நோட் 7-னின் 64+4 GB வேரியன்ட் 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு நெருக்கமாக 12,490 ரூபாய் என கேலக்ஸி A20-னின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 500 ரூபாய்க்கு ரெட்மியைவிடப் பெரிய, சிறப்பான டிஸ்பிளே கிடைக்கும். சந்தையில் ஷியோமியுடன் ஒப்பிடும்போது சாம்சங்குக்கு மற்றுமொரு சாதகமான விஷயமும் உண்டு. பல ஆப்ஃலைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் என்பதால் இதன் விற்பனை அதிகமாக வாய்ப்புண்டு. ரெட்மி நோட் 7  சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரு மாதம் கடந்தும் கிடைக்கவில்லை என்பதால் கடுப்பான சிலர் வேறு மொபைலையாவது வாங்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். கேமரா, பில்டு குவாலிட்டி என சில விஷயங்களில் இது ரெட்மியைவிடக் குறைவுதான் என்றாலும் மாற்று மொபைலைத் தேடுபவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைன் ஸ்டோர்களில் இது விற்பனைக்கு வருகிறது.