Published:Updated:

13 நிமிடங்கள்... சாம்சங் S10 ஃபிங்கர் சென்சார்... ஹேக் செய்த நெட்டிசன்!

இந்த ஒட்டு மொத்த புராஸசையும் செய்ய 13 நிமிடங்கள் ஆனது. ஆனால் அதையே 3 நிமிடங்களில் கூட என்னால் செய்ய முடியும்” எனச் சொல்லியிருக்கிறார் darkshark.

13 நிமிடங்கள்... சாம்சங் S10 ஃபிங்கர் சென்சார்... ஹேக் செய்த நெட்டிசன்!
13 நிமிடங்கள்... சாம்சங் S10 ஃபிங்கர் சென்சார்... ஹேக் செய்த நெட்டிசன்!

மீபகாலமாக மொபைல் நிறுவனங்கள் பாதுகாப்பு விஷயங்களில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஃபேஸ் மேப்பிங் என நிறைய விஷயங்கள் சென்ற சில வருடங்களில் வந்து கவனம் ஈர்த்தன. மொபைல் தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வேகமாக வளர்கிறது. அதிகமானோர் பயன்படுத்தும் எந்த ஒரு விஷயமும்  வேகமாக வளர்வது இயல்புதான். ஆனால், அதே வேகத்தில் எதிர்மறை விஷயங்களும் வரத்தான் செய்யும். சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது புதிய மொபைலான ‘சாம்சங் கேலக்ஸி எஸ்10” மாடலை அறிமுகம் செய்தது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக பெருமையாகச் சொன்னது சாம்சங். 

ஆனால், darkshark என்ற ஐடியில் இயங்கும் ஒருவர் சாம்சங்கின் இந்த நம்பிக்கையை 13 நிமிடங்களில் உடைத்திருக்கிறார். ஒரு கிளாஸில் தன் கைரேகையைப் பதித்து, அதை போட்டோஷாப்பில் நகலெடுத்து கொஞ்சம் வேலை செய்து, 3டி பிரின்ட் மூலம் தன் கைரேகையின் போலியை உருவாக்கிக் கொண்டார். அதைக் கொண்டு தன் சாங்சங் கேலக்ஸி 10 மொபைலை அன்லாக் செய்ய முயன்றபோது எந்தப் பிரச்னையும் தராமல் திறந்துகொண்டது மொபைல்.

சமீபத்திய மொபைல்களில் கெப்பாசிட்டிவ் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் (capacitive fingerprint scanner) தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றை ஏமாற்றுவது சுலபம் என darkshark போன்ற சிலர் ஏற்கெனவே நிரூபித்திருந்தார்கள். அதனால்  சாம்சங் தனது புதிய மொபைலில் அல்ட்ரா சானிக் சென்சாரைப் (ultrasonic sensor) பயன்படுத்தியிருக்கிறது. இது கூடுதல் பாதுகாப்பானது என்பது சாம்சங்கின் நம்பிக்கை. ஆனால், இதையும் ஏமாற்றலாம் பாஸ் எனக் காட்டியிருக்கிறார் darkshark.

”இந்த ஒட்டு மொத்த புராஸசையும் செய்ய 13 நிமிடங்கள் ஆனது. ஆனால்  அதையே 3 நிமிடங்களில் கூட என்னால் செய்ய முடியும்” எனச் சொல்லியிருக்கிறார் darkshark. ”இந்தப் பதிவில் இருக்கும் கைரேகை என்னுடையதுதான். ஆனால், கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன். அதனால், இதை வைத்து எதையும் முயற்சி செய்யாதிங்க மக்களே” என ஜாலியாக அதே சமயம் கவனமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வங்கிகளின் செயலிகளில் கூட பாஸ்வேர்டுக்குப் பதில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போதுமென மாற்றிவிட்டார்கள். இந்தச் சூழலில் நம் கைரேகையைப் போலி செய்தாலே நம் மொபைலை ஹேக் செய்ய முடியுமென்றால், என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. 

முதலில், மொபைலின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டு வரப்பட்டது. அதன் பின், முன்பக்கம் திரைக்குக் கீழ் இருக்கும்படி மாற்றியமைப்பட்டது. அதன் பின் ஃபேஸ் அன்லாக் அறிமுகமானது. ஆனால், நம் முகத்தின் புகைப்படத்தைக் கொண்டே அதை எளிதில் ஹேக் செய்ய முடியும் என நிறைய பேர் நிரூபித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து இப்போது திரையிலே ஃபிங்கர் பிரின்ட் சென்சாரைக் கொண்டு வந்தார்கள். அதில் பல ஆண்ட்ராய்டு மொபைல்கள் நம் கைரேகையைப் புகைப்படமெடுத்து அதோடு ஒப்பிட்டு அனுமதி வழங்கும். இதனால் பாதுகாப்பை உறுதியாகத் தர முடியாது.

அதிக விலை கொண்ட சில மொபைல்கள் மட்டும் நம் கைரேகையைச் சோதிப்பதோடு, அதில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என்பதையும் சோதிக்கும். அதாவது, உயிருடன் இருப்பவரின் விரலைத் தவிர வேற எந்த நகலை வைத்தாலும் அதை அனுமதிக்காது. இந்த சூழலில் சாம்சங் அறிமுகம் செய்த அல்ட்ராசானிக் சென்சாரும் 100% பாதுகாப்பானதல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் காலத்தில் ஸ்மார்ட்போனின் வெற்றி என்பது அதன் விலை மற்றும் வசதிகளை மட்டும் நம்பியில்லாமல் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை வைத்தே முடிவாகும்.