Published:Updated:

ஷியோமி மொபைலில் எக்கச்சக்க விளம்பரங்கள் வருதா... இதைப் பண்ணுங்க மக்களே!

ஷியோமி ஸ்மார்ட்போன்களில் தோன்றும் விளம்பரங்களை முழுவதுமாகத் தடை செய்ய முடியாது என்றாலும் சில வழிகளைப் பினபற்றினால் அவற்றைக் குறைக்க முடியும்.

ஷியோமி மொபைலில் எக்கச்சக்க விளம்பரங்கள் வருதா... இதைப் பண்ணுங்க மக்களே!
ஷியோமி மொபைலில் எக்கச்சக்க விளம்பரங்கள் வருதா... இதைப் பண்ணுங்க மக்களே!

ந்தையில் ஷியோமி எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் இருக்கும் கஸ்டமைஸ்டு இயங்குதளமான MIUI-யும் பலரால் விரும்பப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. அதற்குக் காரணம் இதில் இருக்கும் வசதிகள் மற்ற இயங்குதளத்தில் இல்லாததுதான். ஷியோமி நிறுவனம் அது விற்பனை செய்யும் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தவிர்த்து அனைத்து போன்களிலும் MIUI-யைத்தான் பயன்படுத்துகிறது. ஆனால், இதில் பலருக்கும் பிடிக்காத விஷயம் என்னவென்றால் அதில் காட்டப்படும் விளம்பரங்கள்தாம். கடந்த ஒன்பது வருடங்களாக  MIUI-யைப் பயன்படுத்தி வருகிறது ஷியோமி. தொடக்கத்தில் விளம்பரங்கள் என்பது சுத்தமாக இல்லாமல்தான் இருந்தது, அதன் பின்னர், குறைவாகத் தோன்ற ஆரம்பித்தன. கடந்த வருடத்தில் இருந்து நிலைமை கொஞ்சம் மோசமானது. மொபைலில் இருக்கும் பெரும்பாலான ஆப்களின் உள்ளேகூட விளம்பரங்கள் தோன்ற ஆரம்பித்தன. உச்சகட்டமாக செட்டிங்க்ஸ் பகுதியில்கூட விளம்பரங்கள் தோன்றத் தொடங்கின.

எதற்காக விளம்பரங்களைக் காட்டுகிறது ஷியோமி?

ஷியோமி மொபைலில் எக்கச்சக்க விளம்பரங்கள் வருதா... இதைப் பண்ணுங்க மக்களே!

விளம்பரங்கள் காட்டப்படுவது தொடர்பான விளக்கம் பல முறை ஷியோமி நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விளம்பரங்கள் காட்டப்படுவது வருமானத்துக்காகத்தான் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. ஷியோமியின் திட்டம் என்பது அதுதான். இதன் மூலமாகத்தான் குறைந்த விலையில் அசத்தும் வடிவமைப்பு, சிறப்பான கேமரா மற்றும் புராஸசர் எனச் சிறந்த ஹார்டுவேர்களை ஒரு மொபைலில் ஷியோமியால் கொடுக்க முடிகிறது. மற்ற மொபைல்களைவிட மிகக்குறைவான விலையில் மொபைல்களை விற்பனையும் செய்கிறது. உங்களுக்கு சிறப்பான வசதிகள் வேண்டும் என்றால் இந்த விளம்பரங்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறது ஷியோமி. ஆனால், இது தொடர்ந்து வாடிக்கையாளர்களைக் கடுப்பேற்றவே, இதில் கொஞ்சம் மாற்றம்செய்ய தற்போது முடிவு செய்துள்ளது. சில நாள்களுக்கு முன்னால் இதுதொடர்பாகப் பேசிய ஷியோமியின் நிறுவனர் லீ ஜூன் MIUI 11 பதிப்பில் விளம்பரங்கள் காட்டப்படுவதைக் குறைக்க முயற்சி செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். இப்போது இருக்கும் ஷியோமி மொபைல்களில் MIUI 10 பதிப்பே இருக்கும். அதில் தோன்றும் விளம்பரங்களை முழுமையாகத் தோன்றாமல் செய்ய முடியாது என்றாலும் அவற்றைச் சில வழிகளைப் பயன்படுத்திக் குறைக்கலாம்.

முதலில் கவனிக்க வேண்டியது msa ஆப்தான்!

ஷியோமி மொபைலில் எக்கச்சக்க விளம்பரங்கள் வருதா... இதைப் பண்ணுங்க மக்களே!

ஷியோமி ஸ்மார்ட்போன்களில் இருக்கும் இன்பில்ட் ஆப்களில்தான் பெரும்பாலான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அவற்றை அன் - இன்ஸ்டாலும் செய்ய முடியாது என்பது இவற்றில் இருக்கும் சிக்கல். மேலும் அவை மொபைலுக்கு அவசியமாகத் தேவைப்படும் ஆப்களாகவும் இருக்கும். எனவே, விளம்பரங்களைக் குறைக்க முதலில் கவனிக்க வேண்டியது மொபைலில் இருக்கும் 'msa (MIUI System Ads)' என்ற ஆப்பைத்தான். ஷியோமி ஸ்மார்ட்போன்களில் தோன்றும் விளம்பரங்களுக்கு முதல் காரணம் இந்த ஆப்தான். இந்த ஆப்பை வெளியே பார்க்க முடியாது. செட்டிங்ஸ் பகுதியில் மறைந்திருக்கும். ஆப்களில் காட்டப்படும் விளம்பரங்களைச் சரியான நேரத்தில் தோன்ற வைப்பதுதான் இதனுடைய வேலை. எனவே முதலில் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். Settings > Additional Settings > Authorization and Revocation என்ற பகுதிக்குச் சென்றால் அங்கே ஆப்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் msa என்ற ஆப்புக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதற்காக Revoke என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலமாகவே பெரும்பாலான விளம்பரங்கள் தோன்றுவது குறைந்துவிடும். அடுத்ததாக Settings > Additional Settings > Privacy >  User Experience > Ad services என்ற பகுதிக்கு சென்றால் Personalized ad recommendations என்று இருக்கும் ஆப்ஷனை நிறுத்திவைக்க வேண்டும்.

ஷியோமி மொபைலில் எக்கச்சக்க விளம்பரங்கள் வருதா... இதைப் பண்ணுங்க மக்களே!

ஷியோமியைப் பொறுத்தவரையில் மொபைலில் இருக்கும் Recommendation (பரிந்துரை) என்ற சொல்லுக்கு விளம்பரம் என்றுதான் அர்த்தம். அனைத்து இன்பில்ட் ஆப்களிலும் Recommendation என்ற ஆப்ஷனைக் கொடுத்து வைத்திருக்கிறது ஷியோமி. இது மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் ஏதாவது அப்டேட்கள், புதிய வசதிகள் ஆகியவற்றைப் பயனாளருக்குத் தெரியப்படுத்தப் பயன்படும். ஆனால், ஷியோமி மொபைல்களில் விளம்பரத்துக்காகவே இருக்கிறது. Downloads, File Manager, Mi Video ஆப், உட்பட அனைத்து இன்பில்ட் ஆப்களின் உள்ளேயும் இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆப்களின் செட்டிங்க்ஸ் பகுதியில் சென்று தேடினால் இந்த ஆப்ஷனைக் கண்டுபிடித்து விடலாம். இவற்றின் மூலமாக தோன்றும் விளம்பரங்களைக் குறைக்கத்தான் முடியுமே தவிர, முழுவதுமாக நிறுத்த முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.