Published:Updated:

``பேக் கேமராவும் இதான்... ஃப்ரன்ட் கேமராவும் இதான்!” - என்ன செஞ்சு வச்சிருக்கீங்க சாம்சங்?

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போனில் ஒரே கேமராவை முன்புறம், பின்புறம் என இரண்டு பக்கங்களிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளது சாம்சங்.

``பேக் கேமராவும் இதான்... ஃப்ரன்ட் கேமராவும் இதான்!” - என்ன செஞ்சு வச்சிருக்கீங்க சாம்சங்?
``பேக் கேமராவும் இதான்... ஃப்ரன்ட் கேமராவும் இதான்!” - என்ன செஞ்சு வச்சிருக்கீங்க சாம்சங்?

உலகில் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டி என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் அதன் நிலைமை இன்னும் மோசம். கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் குறைந்துகொண்டே வருகிறது. பட்ஜெட் செக்மென்டில் ஷியோமி, மிட்ரேன்ஜ் செக்மென்ட்டில் ஒன் ப்ளஸ் மற்றும் ப்ரீமியம் செக்மென்டில் ஆப்பிள் என மும்முனைப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது சாம்சங். அதைச் சமாளிக்க ஒரு மாதத்துக்குக் குறைந்தபட்சம் ஒரு ஸ்மார்ட்போனையாவது அறிமுகப்படுத்திவிடுகிறது. நேற்று முன்தினம் தாய்லாந்தில் நடைபெற்ற நிகழ்வில் Galaxy A70 மற்றும் Galaxy A80 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களைப் புதிதாக அறிமுகம் செய்திருக்கிறது.

'J' சீரிஸுக்கு விடை கொடுத்த சாம்சங்

கடந்த சில வருடங்களாக சாம்சங்குக்கு பட்ஜெட் செக்மென்ட்டில் கை கொடுத்து வந்தது j சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்தான். அந்த சீரிஸில் இனிமேல் புதிய ஸ்மார்ட்போன்களை இனி அறிமுகப்படுத்தப்போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது சாம்சங். இனிமேல் அதற்குப் பதிலாக A சீரிஸ் என்ற வரிசையிலேயே புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களில் Galaxy A80 கொஞ்சம் ஸ்பெஷலானது. அதற்குக் காரணம் இதுவரை சாம்சங் மொபைல்களில் இல்லாத புதிய வடிவமைப்பை இதில் கொடுத்திருக்கிறது. இப்போது அனைத்து மொபைல்களும் ஃபுல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவாக மாறிக்கொண்டு வருகின்றன. பொதுவாக ஒரு மொபைலில் முன்புறமாக இடம்பெறும் கேமராவை வேறு இடத்துக்கு மாற்றி வைத்துவிடுகிறார்கள். எனவே ஃபுல் டிஸ்ப்ளே கிடைத்துவிடுகிறது. கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒன் ப்ளஸ் 7 ஸ்மார்ட்போன் இதே வடிவமைப்பில்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு முன்பாகவே முந்திக் கொண்டிருக்கிறது. கேலக்ஸி A80 ஸ்மார்ட்போனில் முழு டிஸ்ப்ளேவையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும், இதில் முன்புற  கேமரா, பின்புற கேமரா எனத் தனித்தனியாக எதுவும் கிடையாது. இருப்பது ஒரே கேமராதான். அதுவே இரண்டு பக்கமும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கிறது. முன்புற கேமரா தேவைப்படும்போது மொபைலில் மேல்பக்கமாக நடுவில் இருக்கும் அமைப்பு தனியாகப் பிரிந்து மேலே எழும்பி வரும். அதன் பின்னர் பின்புறமாக இருக்கும் கேமரா அப்படியே முன் பக்கமாகத் திரும்பிவிடும். இதன் மூலமாக ஒரே கேமராவை இரண்டு பக்கமும் பயன்படுத்துவது சாத்தியமாகிறது.

கிட்டத்தட்ட இதேபோல இருக்கும் வடிவமைப்பை வேறு சில மொபைல் நிறுவனங்கள் இதற்கு முன்பே பயன்படுத்தியிருக்கின்றன. ஒப்போ நிறுவனம் அதன் Find X என்ற மொபைலில் இதே வடிவமைப்பைக் கொடுத்திருந்தது. அதே போல சில வருடங்களுக்கு முன்னர் வெளியான Oppo N1 என்ற ஸ்மார்ட்போனிலும் ஒரே கேமராவை இரண்டு பக்கமும் பயன்படுத்திக்கொள்ளும்படி இருந்தது. தற்போது சாம்சங் அதை இரண்டையும் ஒன்று சேர்த்தது போன்ற வடிவமைப்பை கேலக்ஸி A80 ஸ்மார்ட்போனில் கொடுத்திருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒன்று தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் விஷயமான  48 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக இருப்பது அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட 8 MP கேமரா. மூன்றாவதாக இருப்பது TOF 3D கேமரா. இது ஆக்மென்ட் ரியாலிட்டி போன்ற வசதிகளை மேம்படுத்த உதவும். 6.7 இன்ச் டிஸ்ப்ளே வழக்கம்போல Super AMOLED வகையைச் சேர்ந்தது. Snapdragon 730 புராஸசர் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன் ப்ளஸ் 6T-யைப் போலவே இதிலும் 3700 mAh பேட்டரி மற்றும் ஆன் ஸ்க்ரீன் ஃபிங்கர் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 25W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக வேகமாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதியையும் சாம்சங் இதில் கொடுத்திருக்கிறது. இதைத் தற்போது விற்பனையில் இருக்கும் ஒன் ப்ளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன் ப்ளஸ் 7 ஸ்மார்ட்போனுக்கும் போட்டியாக இருக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் 50,000 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. வரும் மே 29-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.