Published:Updated:

`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண!' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ!

`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண!' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ!
`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண!' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ!

நோக்கியாவின் ஸ்மார்ட்போன் ஒன்றை வெறும் சுவிங்கம் மூலமாக அன்லாக் செய்யும் வீடியோ ஒன்று பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எடுத்துக்கொண்டால் அதை லாக் செய்து பாதுகாக்க இப்போது அனைவரும் பயன்படுத்துவது ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரைத்தான். இதன் வருகைக்குப் பின்னர் பேட்டர்ன் லாக் அல்லது பாஸ்வேர்டை பயன்படுத்துவது குறைந்துபோனது. தொடக்கத்தில் மொபைலின் முன்பகுதியிலோ, பின்பக்கமாகவோ கொடுக்கப்பட்டு வந்த இந்த சென்ஸார்கள் அண்மைக்காலமாக டிஸ்ப்ளேவுக்கு உள்ளேயே இடம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் எனப்படும் இவற்றை ஹேக் செய்ய முடியும் என்பதைப் பலர் நிரூபித்திருக்கிறார்கள். அதில் சாம்சங் உட்பட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் அடக்கம், தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது நோக்கியா ஸ்மார்ட்போன் ஒன்று.

சாஃப்ட்வேர் அப்டேட்டால் வந்த சிக்கல்

நோக்கியா ரசிகர்கள் கடந்த வருடம் முதலே எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு மொபைல்தான் Nokia 9 PureView. சில நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது, கூடியவிரைவில் இந்தியாவில் இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது HMD குளோபல் நிறுவனம். இதுவரை எந்த போனிலும் இல்லாத அளவுக்கு ஐந்து கேமராக்கள் இதில் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் நோக்கியா 9 ஸ்மார்ட்போனுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலமாக மொபைலின் செயல்திறன் மேம்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை அப்டேட் செய்த பிறகுதான் பலருக்கு போனில் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்தன.

அதிலும் ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரைப் பயன்படுத்துவதில் இருந்த பிரச்னைதான் பலருக்கும் பொதுவாக ஒன்றாக இருந்தது. எனவே, இந்த விஷயம் கடந்த சில நாள்களாகவே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டும் வந்தது. அப்போதுதான் @decodedpixel என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் சூயிங்கம் அடங்கிய பாக்கெட்டின் முன்பகுதியை டிஸ்ப்ளேவில் வைத்தால் அன்லாக் ஆவது காட்டப்பட்டிருந்தது.அது மட்டுமன்றி வேறு ஒருவரின் விரலை வைத்தாலும் மொபைல் அன்லாக் ஆனது. சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரச்னைக்கான காரணம் என்ன?

சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட கேலக்ஸி S10 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரைப் பயன்படுத்தியிருந்தது. அதுதவிர மற்ற மொபைல்களில் இருக்கக் கூடியவை ஆப்டிக்கல் சென்ஸார் வகையைச் சேர்ந்தவைதாம். மொபைலின் ஸ்க்ரீனுக்கு அடியில் டிஸ்ப்ளேவுடன் இந்த சென்ஸார் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒரு கேமராவைப் போல செயல்படும். விரலை வைக்கும்போது அதில் இருக்கும் ரேகைளை தெளிவாகப் பதிவு செய்துகொள்ளும். அடுத்தமுறை விரலை வைக்கும் போது அதனுடன் ஒப்பிட்டு மொபலை அன்லாக் செய்யும். இதை ஒரு போலியான ஒரு விரல் மூலமாக ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹார்டுவேர் எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அது சரியாக வேலை செய்வதற்கு மென்பொருளின் உதவியும் தேவைப்படும். கொடுக்கப்பட்ட அப்டேட்டில் உள்ள சிறிய குறைபாடுதான் நோக்கியா 9 -ல் இருக்கும் சென்ஸாரின் மோசமான செயல்பாட்டுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார்கள் அனைத்தும் ஹேக் செய்யும் வகையில்தான் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இதற்கு முன்பே பல்வேறு வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. மற்ற மொபைல்களை இதைப் போல அன்லாக் செய்வதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனால் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் எந்தச் சிரமமும் இல்லாமல் வெறும் சூயிங்கம் பாக்கெட் மூலமாகவே அன்லாக் ஆனதுதான் பிரச்னை.

மேலும் இது அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் மற்ற மொபைல்களை வைத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் பேட்டர்ன் அல்லது பின் நம்பர் லாக்குக்கு மாறுவதுதான் நோக்கியா 9 போனில் உள்ள தகவல்களைப் பாதுகாக்க அதைப் பயன்படுத்துபவர்களின் கையில் இருக்கும் ஒரே வழி. இந்தப் பிரச்னையைப் பற்றி விசாரித்துவருவதாக தற்போது நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமையை கையில் வைத்திருக்கும் HMD  நிறுவனம் தெரிவித்துள்ளது. தவிர இது மென்பொருளில் உள்ள சிறிய குறைபாடுதான் என்பதால் அதைச் சரி செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் கூடிய விரைவில் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு