Published:Updated:

`ஐபோன்களே தள்ளிதான் நிற்கணும்!' பிக்ஸல் 4-ல் அதிரடி என்ட்ரி கொடுக்கும் சோலி சிப்

மொபைலுக்கு முன்னால் காற்றில் படம் வரைந்தால் போதும் மீதியை சோலி சிப் பார்த்துக்கொள்ளும்.

சோலி (Soli)
சோலி (Soli)

அடுத்து வரப்போகும் Pixel 4 போனுக்கான டீசரை நேற்று வெளியிட்டிருக்கிறது கூகுள். கடந்த சில நாள்களாகவே பிக்ஸல் 4 போனின் வடிவமைப்பு தொடர்பான படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்தன. இந்நிலையில் கூகுள் வெளியிட்டுள்ள டீசரில் காட்டப்பட்டுள்ள ஒரு விஷயத்தால் அதன் மீதுள்ள எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

Pixel 4
Pixel 4

கூகுள் கொண்டுவரப்போகும் அந்த விஷயம் இதுவரை எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத ஒன்றாக இருக்கப்போகிறது. வரும் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் சோலி (Soli) என்ற சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து வருட ஆராய்ச்சி... ரேடார் தொழில்நுட்பம்

பிக்ஸல் 4 போனின் இருக்கப்போகும் இரண்டு குறிப்பிடத்தக்க வசதிகள் என்ன என்ற தகவலை கூகுள் வெளியிட்டிருக்கிறது. ஒன்று மோஷன் சென்ஸிங். மற்றொன்று ஃபேஸ் அன்லாக். இந்த இரண்டு வசதிகளுக்காகவும் சோலி என்ற சிறப்பு சென்ஸார் பயன்படுத்தப்படவுள்ளது. சோலி சிப்பை உருவாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வர கூகுளுக்கு ஐந்தாண்டுக்காலம் ஆகியிருக்கிறது.

பிக்ஸல் 4
பிக்ஸல் 4

புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய கூகுளிடம் இருக்கும் ஒரு பிரிவான Google ATAP (Advanced Technology and Projects group) சோலி சிப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தது. தற்போது ஒருவழியாக அது பயன்பாட்டுக்கும் வரப்போகிறது. சோலி சிப் என்பது ஒருவகை மோஷன் சென்ஸிங் ரேடார்தான். தற்போது ராணுவம், வானிலை, விமானப் போக்குவரத்து எனப் பல இடங்களில் பயன்பாட்டில் இருக்கும் ரேடாரின் சிறிய வடிவம்தான் சோலி. பெரிய ரேடார், பெரிய பொருள்களை அடையாளம் காணப் பயன்படும் என்றால் சோலி சிறிய பொருள்களுக்கானது. மற்றபடி இரண்டும் செயல்பாடும் ஒரே மாதிரியானதுதான்.

பொதுவாக இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை மொபைலில் பயன்படுத்துவதில் பல சவால்கள் இருக்கும். அதன் காரணமாகவே சோலி பயன்பாட்டுக்கு வருவதற்கு இவ்வளவு நாள்கள் ஆகியிருக்கிறது. இந்த வருடத் தொடக்கத்தில் சோலியை மொபைலில் பயன்படுத்த அனுமதி கொடுத்திருந்தது ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (FCC). அதன் தொடர்ச்சியாகவே பிக்ஸல் 4 போனில் இடம்பெறப்போகிறது சோலி சிப்.

ஃபேஸ் அன்லாக்
ஃபேஸ் அன்லாக்

சோலியை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கேட்ஜெட்களில் பயன்படுத்துவதற்கென்றே உருவாக்க முடிவுசெய்திருந்தது கூகுள். இன்றைக்கு வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் என அனைத்தும் அளவில் சிறியதாக மாறிக்கொண்டே வருகிறது.

அதற்குத் தகுந்த வகையில் சோலி 8 மிமீ x 10 மிமீ என்ற அளவில் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் போன்ற சிறிய கேட்ஜெட்களிலும் பயன்படுத்த எளிதானதாக இருக்கும். சென்ஸார் மற்றும் ஆன்டெனா போன்ற அனைத்து விஷயங்களும் அந்தச் சிப்புக்குளேயே இருக்கின்றன. எனவே கூடுதலாக வேறு இடம் எதுவும் தேவைப்படாது.

சோலி சிப்
சோலி சிப்

இந்த சிப் முன்னால் இருக்கும் பொருளின் முப்பரிமாண வடிவத்தை உருவாக்குவதற்காக மின்காந்த அலைகளைப் பயன்படுத்துகிறது. சோலிக்கு முன்னால் ஒரு கை காட்டப்படுகிறது என்றால் அதன் அசைவுகளை அது உணர்ந்து கொள்ளும்.

டிஸ்பிளேவைத் தொடத் தேவையிருக்காது

பிக்ஸல் 4 போனின் போட்டோக்கள் சமீபத்தில் வெளியானபோது அவற்றில் ஒரு விஷயம் விநோதமாகத் தெரிந்தது. ஒரு மொபைலில் பெஸலின் அளவு கீழ்ப்பக்கம்தான் அதிகமாக இருக்கும். ஆனால் பிக்ஸல் 4-ன் மேற்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெஸலின் அளவு அதிகமாக இருந்தது. சோலி சிப் அந்தப் பகுதியில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அலாரத்தை அணைத்து வைப்பது, மியூசிக் பிளேயரில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை மாற்றுவது, மொபைலை சைலைன்டில் போடுவது எனச் சில விஷயங்களை டிஸ்பிளே மீது கை வைக்காமலேயே செய்ய முடியும். மொபைலுக்கு முன்னால் காற்றில் படம் வரைந்தால் போதும் மீதியை சோலி சிப் பார்த்துக்கொள்ளும்.

சோலி சிப்
சோலி சிப்

இது மட்டுமன்றி ஃபேஸ் அன்லாக் வசதிக்கும் சோலி உதவி செய்யப்போகிறது. இப்போது ஒரு மொபைலில் ஃபேஸ் அன்லாக்கைப் பயன்படுத்தவேண்டும் என்றால் முகத்துக்கு நேராகப் பிடித்து பவர்பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின்னர் ஸ்கீரீனை ஸ்வைப் செய்தால் மட்டுமே மொபைலுக்குள் செல்லமுடியும். ஆனால் பிக்ஸல் போனில் இது எதையுமே செய்யத் தேவையிருக்காது. முகத்துக்கு முன்னால் கொண்டு சென்றால் போதுமானது மொபைல் அதுவாகவே அன்லாக் ஆகும். அதற்குக் காரணம் சோலி ஒருவரின் நடவடிக்கையை உணர்ந்து ஃபேஸ் அன்லாக் சென்ஸார்களை முன்கூட்டியே தயார்செய்து விடுவதுதான். இவையெல்லாம் வெறும் தொடக்கம்தான், பிக்ஸல் போன்கள் வளர்ச்சியடைந்ததைப் போல மோஷன் சென்ஸிங்கும் வேறோரு கட்டத்துக்குச் செல்லும் என கூகுள் தெரிவித்துள்ளது.