Published:Updated:

சாம்சங் ப்ராஸசர், சூப்பர் ஆக்‌ஷன் கேமரா… மோட்டோவை உயிர்ப்பிக்குமா புதிய ஒன் ஆக்‌ஷன்?

மு.ராஜேஷ்

நீண்ட நாள்கள் கழித்து ஓரளவுக்கு நல்ல போனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது மோட்டோரோலா.

Motorola One Action
Motorola One Action

மோட்டோரோலா என்ற ஒரு நிறுவனம் இருப்பதே இன்று பலருக்கு மறந்து போயிருக்கலாம். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் பட்ஜெட் செக்மென்ட்டில் மோட்டோவின் G மற்றும் E- சீரிஸ்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. சீன நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமல்ல மோட்டோரோலா, எல்ஜி போன்ற பெரிய நிறுவனங்களின் விற்பனையும் சரியவே செய்தது.

Motorola One Action
Motorola One Action

இடையில் கூகுளிடம் இருந்து மோட்டோ, லெனோவோ நிறுவனத்துக்குக் கைமாறியதை அதன் ரசிகர்கள் விரும்பவில்லை. அதன் பிறகு மொபைல்களும் சரிவர வெளியாகாததால் விற்பனை தொடர்ந்து சரிவையே சந்தித்தது. இப்போது விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் புதிய போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அந்த வரிசையில் இப்போது புதிதாக மோட்டோ ஒன் ஆக்‌ஷன் என்ற புது ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே

பட்ஜெட் செக்மென்ட்டில் நாட்ச் டிஸ்ப்ளேதான் இப்போது ட்ரெண்ட்டில் இருக்கிறது. அதேபோல ப்ரீமியம் செக்மென்ட்டில் ஃபுல் வியூ டிஸ்ப்ளேக்கள் பிரபலமாக இருந்தாலும், சில போன்களில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவும் இருக்கிறது. டிஸ்ப்ளேவில் நாட்ச்சுக்குப் பதிலாக கேமராவுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டிருக்கும். அதே வகையிலான டிஸ்ப்ளேதான் இந்த மோட்டோ ஒன் ஆக்‌ஷன் போனிலும் இருக்கிறது.

Motorola One Action
Motorola One Action

மற்ற போன்களில் அந்த இடம் சிறியதாகவே இருக்கும். ஆனால் இதில் முன்பக்க கேமராவுக்கான அளவு கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது. 6.3 இன்ச் Full HD+ டிஸ்ப்ளேவின் ரேஷியோ 21:9-க இருக்கிறது. இதை சினிமாவிஷன் டிஸ்ப்ளே என்கிறது மோட்டோ.

மோட்டோ எப்போதும் அதன் போனில் இருக்கும் ஒரு விஷயத்தை ஹைலைட் செய்து காட்டுவது வழக்கம். அதை தொடர்படுத்தும் வகையில்தான் அந்த போனின் பெயரும் இருக்கும். இந்த போனுக்கு ஒன் ஆக்‌ஷன் என்று பெயர் வைக்கக் காரணம் இதன் கேமராதான். இதில் அல்ட்ரா வைடு கேமராவைக் கொடுத்திருக்கிறது. 12MP+16MP+5MP என மூன்று கேமராக்கள் இந்த போனின் பின்புறமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 12MP வைடு கேமராவும், 16MP அல்ட்ரா வைடு கேமராவும்தான் இதில் இருக்கும் முக்கியமான விஷயம் என்கிறது மோட்டோ. இதன் மூலமாக வீடியோக்களை சிறப்பாக எடுக்க முடியும். 12MP முன்பக்க கேமரா இதில் இருக்கிறது.

Motorola One Action
Motorola One Action

சாம்சங்கின் சொந்தத் தயாரிப்பான Exynos ப்ராஸசரை பிற நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்துவது என்பது மிகக் குறைவு. மோட்டோவும் நீண்ட காலமாக குவால்காம் ப்ராஸசரையே பயன்படுத்தி வந்தது. பின்னர் லெனோவோவின் கைக்குச் சென்ற பின்னர் மீடியாடெக் ப்ராஸசரைக் கூடப் பயன்படுத்தியது. இப்போது Exynos பக்கமாகத் திரும்பியிருக்கிறது. மோட்டோ ஒன் ஆக்‌ஷன் போனில் இருப்பது Exynos 9609 ப்ரஸசர். இதன் பர்ஃபாமன்ஸில் எந்தச் சிக்கலும் கிடையாது.

3500mAh பேட்டரி இதில் இருக்கிறது. பொதுவாக மோட்டோ அதன் போன்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொடுக்கும். ஆனால், இதில் அது மிஸ்ஸிங். வழக்கமான 10W சார்ஜர் மட்டுமே இதில் இருக்கிறது. டெனிம் புளூ, பேர்ல் வொயிட் என இரண்டு நிறங்களில் மொபைல் கிடைக்கிறது. 4 GB+128 GB என்ற ஒரே வேரியன்ட் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை 13,999 ரூபாய்.

Motorola One Action
Motorola One Action

இப்போதும் இந்த போனுக்கான போட்டி அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஷியோமி கடந்த சில தினங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்திய Mi A3 போனிலும் இதேபோல ப்யூர் ஆண்ட்ராய்டு வசதியைப் பெற முடியும். ஆனால், அதில் இருப்பது வெறும் HD + டிஸ்ப்ளேதான் என்பது அதன் மிகப்பெரிய மைனஸ். அதேநேரம் இதில் வசதிகள் ஓரளவுக்கு ஓகேவாக இருப்பதால் ப்யூர் ஆண்ட்ராய்டு வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்றதாக இந்த போன் இருக்கும்.