Published:Updated:

நோட் 7 புரோவுக்கு ஒண்ணு, 7S-க்கு ஒண்ணு... ஷியோமிக்கு செக் வைத்த ரியல்மீ!

மு.ராஜேஷ்

கேமராவிலும் பேட்டரியிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறது ரியல்மீ

Realme 5 Pro
Realme 5 Pro

பட்ஜெட் செக்மென்டில் இரண்டு மொபைல்களை அறிமுகப்படுத்திக் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. கடந்த மாதம் 15-ம் தேதி ரியல்மீ X, 3i ஆகிய மொபைல்கள் வெளியிடப்பட்டன.

Realme 5 Pro
Realme 5 Pro

இந்நிலையில் நேற்று முன்தினம் ரியல்மீ 5, 5 ப்ரோ என மேலும் இரண்டு போன்களை வெளியிட்டிருக்கிறது ரியல்மீ நிறுவனம்.

ஷியோமியின் ஆதிக்கத்தைக் குறைக்கத் திட்டமிடும் ரியல்மீ

இனிமேல் பட்ஜெட் செக்மென்டில் போட்டிபோட யாரும் இல்லை என நினைத்துக்கொண்டிருந்தது ஷியோமி. ஆனால், அதற்கு மாறாகக் கடும் போட்டியாளராக உருவெடுத்திருக்கிறது ரியல்மீ. மிகக் குறுகியகாலத்துக்குள் விற்பனையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. கடந்த சில மாதங்களாக ரியல்மீ விற்பனை ஏறுமுகத்தில்தான் இருக்கிறது.

Realme 5 Pro
Realme 5 Pro

அதுவும் கடந்த மாதம் விற்பனைக்கு வந்த ரியல்மீ X அதன் போட்டியாளரான ரெட்மி K20-யை விடவும் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக போன்கள் வெற்றியடைவதால் புதிய போன்களை வெளியிடுவதில் ஷியோமியை விடவும் ரியல்மீயிடம் வேகம் கொஞ்சம் கூடுதல்தான்

ரியல்மீ 5 ப்ரோ

நேற்று முன் தினம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் கேமராவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதில் இருக்கும் நான்கு கேமராக்களும் வெவ்வேறான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலில் அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இருக்கும் மெயின் கேமராவில் 48 மெகாபிக்சல் சோனி IMX 586 சென்ஸார் இருக்கிறது. மூன்றாவது கேமரா Portrait போட்டோக்களுக்காக தரப்பட்டுள்ளது. நான்காவது இருக்கும் கேமரா Macro போட்டோக்களை சிறப்பாக எடுப்பதற்காக உதவும். 16MP ஃப்ரன்ட் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Realme 5 Pro
Realme 5 Pro

மற்ற ரியல்மீ போன்களுடன் ஒப்பிடுகையில் வடிவமைப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இதுவும் பிளாஸ்டிக்கால் ஆனதுதான். அதுவே கிளாஸ் பேக் போல மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கிரிஸ்டல் கிரீன் மற்றும் ஸ்பார்க்ளிங் ப்ளூ என இரண்டு கலர் ஆப்ஷன்கள் இருக்கின்றன. 6.3 இன்ச் IPS டிஸ்ப்ளே இருக்கிறது. Qualcomm Snapdragon 712 AIE ப்ராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 35 mAh பேட்டரி இருக்கிறது. VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக வேகமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். ரெட்மி நோட் 7 ப்ரோவுக்குப் போட்டியாக இது இருக்கும். எனவே, அதற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4GB+ 64 GB வேரியன்ட் 13,999 ரூபாய், 6GB+ 64 GB வேரியன்ட் 14,999 ரூபாய் மற்றும் 8GB+ 128GB வேரியன்ட் 16,999 ரூபாய் என்ற விலையில் ரியல்மீ 5 ப்ரோ விற்பனைக்கு வருகிறது. ஆனால் 16,999 என்ற இதே விலையில் ரியல்மீ Xன் பேஸ் வேரியன்ட் கிடைக்கிறது. புல் வியூ AMOLED டிஸ்ப்ளே, பாப்அப் கேமரா என அதில் வசதிகள் சற்று கூடுதலாகவே இருக்கிறது. எனவே ரியல்மீ 5 ப்ரோவின் 8GB வேரியன்ட்டுக்கு வரவேற்பு குறைவாகவே இருக்கும்.

ரியல்மீ 5

ரியல்மீ 5 ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு மட்டுமின்றி பேட்டரியிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ரெட்மி 7S போனுக்குப் போட்டியாக இது இருக்கும். ரியல்மீ 5 ப்ரோவில் இருப்பதைப் போலவே இதிலும் நான்கு கேமராக்கள் இருக்கின்றன. ஆனால், ஒரே ஒரு மாற்றம் மட்டும் இருக்கிறது. இதில் 48 MP மெயின் கேமராவுக்குப் பதில் 12MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற விஷயங்களை விடவும் பேட்டரியில் ஸ்கோர் செய்கிறது ரியல்மீ 5. முதல் முறையாக 5000 mAh பேட்டரியை ஒரு மொபைலில் கொடுத்திருக்கிறது ரியல்மீ. Snapdragon 665 AIE ப்ராஸசர் இதில் இருக்கிறது. 3GB+32GB வேரியன்ட் 9,999 ரூபாய்க்கும், 4GB+64GB வேரியன்ட் 10,999 ரூபாய்க்கும் மற்றும் 4GB+128GB வேரியன்ட் 11,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல்கள் விற்பனைக்கு வருவதன் காரணமாக ஷியோமியும் பட்ஜெட் செக்மென்ட்டில் சில மொபைல்களின் விலையை ஆயிரம் ரூபாய் வரைக்கும் குறைத்திருக்கிறது.