Published:Updated:

மிரட்டும் கேமரா, அசத்தும் டிஸ்ப்ளே... ரியல்மீ X-ன் ப்ளஸ், மைனஸ் என்ன? #VikatanGadgetReview

Realme X

Realme X

ஒரு மாதத்துக்குப் பின்னர் எப்படி இருக்கிறது ரியல்மீ X?

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ரியல்மீ நிறுவனத்துக்கு அதன் புதிய போனான Realme X-ன் வெற்றி பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனுக்கு சந்தையில் வரவேற்பு நன்றாகவே இருக்கிறது. ஒரு மாதத்துக்கு மேலாக ரியல்மீ X போனைப் பயன்படுத்திப் பார்த்தோம். இப்போது போனில் இருக்கும் ப்ளஸ், மைனஸ்கள் என்னவென்று பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

ரியல்மீ X-ன் வெற்றிக்கு அதன் டிஸ்ப்ளேவுக்கு முக்கிய இடமுண்டு. முன்பக்க கேமரா பாப்அப் கேமரா என்பதால், இதில் ஃபுல் வியூ டிஸ்ப்ளேவுக்கான இடம் இருந்தது. அதை AMOLED டிஸ்ப்ளேவாகக் கொடுத்து ஸ்கோர் செய்தது ரியல்மீ. இந்த விலையில் இப்போது சிறப்பான டிஸ்ப்ளே இருக்கும் ஒரு போனில் இதுவும் ஒன்று. எனவே, டிஸ்ப்ளே அசத்தலாக இருக்கிறது. ஃபுல் வியூ டிஸ்ப்ளே என்பதால் வீடியோக்கள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது.

Realme X Display
Realme X Display
பா.காளிமுத்து

அறைக்குள் மட்டுமல்ல சூரிய ஒளியில் இருந்தாலும்கூட டிஸ்ப்ளேவில் இருக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன. ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரில் விரலை வைத்து அன்லாக் செய்யும்போது அந்தப் பகுதியிலிருந்து வெளிவரும் வெளிச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. மற்ற நேரங்களில் என்றால் பரவாயில்லை, இரவிலோ அல்லது தூங்கி எழுந்தவுடனோ அதைப் பார்த்தால் அந்த வெளிச்சம் கண்களைக் கூசச் செய்துவிடுகிறது.

கேமரா

Sony IMX 586 சென்ஸார்தான் இந்த போனின் மெயின் கேமராவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக 5 MP டெப்த் சென்ஸார் கேமராவும் இருக்கிறது. ரியல்மீயின் மென்பொருள் படங்களை சிறப்பாக எடுக்க உதவுகிறது. நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்படும் போட்டோக்களில் நிறங்கள், டீட்டெயில் போன்ற விஷயங்கள் நன்றாகவே இருக்கின்றன.

கூடுதல் நிறங்கள் வேண்டுமென்றால் க்ரோமா பூஸ்ட் மோடு (Chroma Boost mode) பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரங்களில் NightScape மோடைப் பயன்படுத்தி எடுக்கப்படும் போட்டோக்கள் சிறப்பாகக் கிடைக்கின்றன. முன்பக்கம் 16 MP பாப் அப் கேமரா இருக்கிறது. எதிர்பார்ப்பதை விடவும் வேகமாகவே வெளியே வருகிறது இந்த பாப் அப் கேமரா. செல்ஃபி போட்டோக்களும் நன்றாகவே இருக்கின்றன.

பர்ஃபாமன்ஸ்

Realme X Pop-up Camera
Realme X Pop-up Camera
பா.காளிமுத்து

இதில் இருக்கும் Snapdragon 710-யின் பர்ஃபாமன்ஸ் நன்றாகவே இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் எந்தச் சிக்கல்களும் இல்லை. PUBG உட்பட அனைத்து ஹை எண்ட் கேம்களையும் எந்தச் சிக்கல்களும் இல்லாமல் விளையாட முடிகிறது.

வடிவமைப்பு

Realme X Design
Realme X Design
பா.காளிமுத்து

டிசைனைப் பொறுத்தவரையில், ரியல்மீயால் எது முடியுமோ அதைக் கொடுத்திருக்கிறது. இன்னமும் கிளாஸ் பக்கமாக திரும்பவில்லை ரியல்மீ. மொபைல்களில் பிளாஸ்டிக்கை மட்டுமே பயன்படுத்திவருகிறது. ஆனால், பில்டு குவாலிட்டி என்று வரும்போது இந்த போன் பாஸ் செய்துவிடுகிறது. இந்த போனிலும் பின்பக்கம் பிளாஸ்டிக்கால் ஆனதுதான் என்றாலும் கிளாஸ் ஃபினிஷ் தரப்பட்டுள்ளது. இது போனுக்கு ஒரு பிரீமியம் லுக்கைக் கொடுக்கிறது. ஆனால், கைரேகைகள் படிந்துவிடுவது ஒரு குறை, கீறல்களும் எளிதில் விழுந்துவிடுகிறது.

பேட்டரி

Realme X
Realme X
பா.காளிமுத்து

இந்த போனில் இருக்கும் 3,765mAh பேட்டரி ஒரு நாள் பயன்பாட்டுக்குப் போதுமானதாகவே இருக்கிறது. காலையில் ஃபுல் சார்ஜ் செய்துவிட்டு பயன்படுத்தத் தொடங்கினால் இரவு தூங்கப்போகும் முன்னர் குறைந்தபட்சம் 30 சதவிகிதம் சார்ஜ் மீதமிருக்கிறது. VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் சார்ஜ் வேகமாகவே ஏறுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குள் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகி விடுகிறது.

ஆபரேட்டிங் சிஸ்டம்

Realme X Color OS
Realme X Color OS

தனி நிறுவனமாக பிரிந்த பின்னரும் கூட ஓப்போவின் ColorOS -ஐத்தான் இன்னும் அதன் போன்களில் பயன்படுத்தி வருகிறது ரியல்மீ. இந்த போனில் மேம்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயமும் அதுவாகவே இருக்கிறது. குறிப்பாக நோட்டிஃபிகேஷன் பேனல் சிக்கல் இன்னும் தீரவில்லை. குவிந்து கிடக்கும் நோட்டிஃபிகேஷன்களை ஒரே க்ளிக்கில் காலி பண்ணுவதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. மென்பொருள் ஹார்டுவேருடன் இணைந்து நன்றாகவே செயல்பட்டாலும்கூட சில விஷயங்களில் மாற்றம் தேவைப்படுகிறது.

ப்ளஸ்

  • தரமான டிஸ்பிளே

  • பில்டு குவாலிட்டி

  • சிறப்பான கேமரா

மைனஸ்

  • நோட்டிஃபிகேஷன் LED இல்லை

  • பிளாஸ்டிக் பில்டு

இறுதிக் கருத்து

இந்த செக்மென்டில் சமீபத்தில் வந்த சிறந்த போன்களில் இதுவும் ஒன்று. இந்த போனின்  4GB+128GB வேரியன்ட்டின் விலை 16,999 ரூபாய். 8GB+128GB வேரியன்ட்டின் விலை 19,999 ரூபாய். கேமராவும், டிஸ்பிளேவும் இந்த விலையில் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பானதாகவே இருக்கிறது. பிளாஸ்டிக் பில்டு என்றாலும் பரவாயில்லை என்பவர்கள் தாராளமாக வாங்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு