108 MP கேமரா சென்ஸார், 6K வீடியோ... ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கின் புது அத்தியாயம்!
மொபைல் போட்டோகிராபியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது சாம்சங்கின் இந்த கேமரா சென்ஸார்.

சில நாள்களுக்கு முன்னால் ஸ்மார்ட்போன் கேமரா தொடர்பாக சாம்சங் வெளியிட்ட ஒரு தகவல்தான் மொபைல் போன் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக்.

போனில் பயன்படுத்தும் வகையிலான 108 MP கேமரா சென்ஸாரை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். மொபைலில் 108 MP என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
கைகோத்த சாம்சங் மற்றும் ஷியோமி
ஸ்மார்ட்போன் கேமராக்களின் திறன் வேகமாக அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்போதெல்லாம் ஒரு கேமராவைக் கொண்ட மொபைல்கள் வெளியாவது குறைவுதான். சில மொபைல்களில் ஐந்து கேமராக்கள் கூட இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக புதிய விஷயங்களை மொபைலில் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அதுபோல ஷியோமி நிறுவனம் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தனது மொபைலில் 108 Mp கேமராவைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்தது. ஷியோமியிடமிருந்து அறிவிப்பு வெளியான சில நாள்கள் கழித்து சாம்சங் இந்த சென்ஸார் தொடர்பான தகவல்களை வெளியிட்டது. Samsung ISOCELL Bright HMX என்ற இந்த சென்ஸாரை ஷியோமியுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறது சாம்சங். இதை உருவாக்கியதில் ஷியோமியின் பங்கு அதிகம் இருக்கிறது. ஆகவே 108 மெகாபிக்ஸல் கேமராவைக் கொண்ட முதலில் அறிமுகப்படுத்தப் போவது ஷியோமிதான்.
பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான சில பொருள்களை வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். புராஸசர், கேமரா, டிஸ்ப்ளே என ஒரு போனுக்கு தேவையான பல பொருள்கள் வெளியிலிருந்தே வாங்கப்படுகின்றன. இது செலவை வெகுவாகக் குறைப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. மொபைல் கேமரா சென்ஸாரில் தற்போது போட்டி சோனிக்கும், சாம்சங்குக்கும்தான்.

கடந்த வருடம் Sony's IMX586 என்ற சென்ஸாரை அறிமுகம் செய்தது சோனி. அதன் பிறகே கேமரா செக்மென்ட் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதுவரை 12 MP என்ற அளவிலிருந்த ஸ்மார்ட்போன் கேமராக்கள் 48 MP என்ற நிலைக்கு விரைவாகவே மாறிக்கொண்டன. அதுவும் ஷியோமி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கூட அந்த சென்ஸாரைப் பயன்படுத்தியது. நிலைமை இப்படியிருக்க சாம்சங்கும் தன் பங்குக்கு Samsung GM1 48 MP கேமரா சென்ஸாரை வெளியிட்டது. சோனியின் சென்ஸாரை விட விலை குறைவாக இருந்தாலும் கூட அது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. சோனியின் கேமரா சென்ஸாரைத்தான் இப்போது வெளியாகும் 48 MP கேமரா ஸ்மார்ட்போன்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 108 MP சென்ஸார் சாம்சங்கின் நிலையை மாற்றும் வாய்ப்புகள் அதிகம்.
108 மெகா பிக்சல்... 6K வீடியோ ரெக்கார்டிங்
ஸ்மார்ட்போனோ, DSLR கேமராவோ வெளியே தெரிவதெல்லாம் ஒரு விஷயம் கிடையாது. உள்ளே இருக்கும் சென்ஸார்தான் இங்கே அனைத்தையும் முடிவு செய்யும். ஒரு போட்டோவின் தரத்தை நிர்ணயிப்பது உள்ளே இருக்கும் சென்ஸார்தான். துல்லியமான போட்டோக்களை எடுப்பதற்குத் தகுந்த வகையில் சென்ஸாரின் அளவு இருக்க வேண்டியது அவசியம். Samsung ISOCELL Bright HMX-ல் இருக்கும் இமேஜ் சென்ஸாரின் அளவு 1/1.33 இன்ச். இந்த அளவு பெரிய சென்ஸார் மொபைலுக்கு வருவது இதுவே முதல்முறை.

"வெறும் கருத்து வடிவமாக இருந்த போதிலிருந்தே நாங்களும் சாம்சங்கும் இணைந்து இந்த சென்ஸாரை உருவாக்க முயற்சி செய்து வந்தோம். இறுதியாக அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. DSLR கேமராக்களில் மட்டுமே கிடைத்து வந்த பிக்சல் ரெசொல்யூஷனை மொபைலுக்குக் கொண்டு வந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்" என ஷியோமியின் இணை நிறுவனரும் தலைவருமான லின் பின் தெரிவித்திருக்கிறார். மேலும் வாடிக்கையாளர்களுக்குப் புதிய வசதிகளை வழங்க சாம்சங்குடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார். இப்போது சில ஸ்மார்ட்போன்களில் 4K தரத்தில் வீடியோவை ரெக்கார்டிங் செய்ய முடியும். ஆனால், இந்த கேமரா சென்ஸார் மூலமாக 6K தரத்தில் வீடியோ எடுக்கலாம்.
ரியல்மீ அடுத்த வாரம் 64 MP கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. அடுத்ததாக ஷியோமி நிறுவனமும் அதற்குத் தயாராகி விட்டது. இந்த மாத இறுதியில் ISOCELL Bright HMX சென்ஸாரின் தயாரிப்பு தொடங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சாம்சங்.

எனவே, கூடிய விரைவில் ஷியோமியின் எதாவது ஒரு புதிய ஸ்மார்ட்போனில் 108MP கேமராவை எதிர்பார்க்கலாம். சாம்சங் அடுத்த வருடம் வெளியிடவுள்ள கேலக்ஸி S11 சீரிஸில் இந்த சென்ஸாரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.