ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு நிறுவனத்தின் நிதிநிலைமையை அதிகரிக்க எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதில் ஒன்று ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிப்பது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், துறைசார்ந்த முக்கிய நபர்கள் தங்களுடைய கணக்குகளை அதிகாரபூர்வமானது என அறிவிக்கும் வகையில் பெயருக்குப் பக்கத்தில் இந்த ப்ளு டிக் இருக்கும்.

இந்த ப்ளூ டிக்கை அவர்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதே சமயம் பணம் செலுத்தாத பயனாளர்களுக்கு அவர்களின் ப்ளூ டிக் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, கட்டணம் செலுத்த ஏப்ரல் 20-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய், ஆலியா பட், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, நயன்தாரா, ரோகித் சர்மா, விராட் கோலி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருந்தன.

இவை பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பின. இந்நிலையில் நேற்று கட்டணம் செலுத்ததாத, அதேசமயம் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்ககள் போன்ற குறிப்பிட்ட ட்விட்டர் பயனாளர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்டவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து ஒருவித தெளிவின்மையும் வெளிப்படுவதால் ட்விட்டர் பயனாளர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.