
எளிதாகப் புரிந்துகொள்ளவே திருக்குறளைக் குறிப்பிட்டோம். உண்மையில், திருக்குறளின் நுட்பத்தை AI கற்றுக்கொள்ள 1330 குறள்கள் போதுமானதாக இருக்காது.
கடந்த சில வாரங்களாகவே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள்தான் நிரம்பி வழிகின்றன. தங்கள் புகைப்படங்களை வைத்து AI உருவாக்கித் தரும் ஓவியங்களைப் பலரும் தங்களது முகப்புப் படமாக மாற்றியிருந்ததைக்கூடப் பார்க்க முடிந்தது. இந்தத் தொழில்நுட்பத்தின் பின்னணி என்ன?
கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் இணையப் புரட்சியின் பின்னணியில் சத்தமில்லாமல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களும் பெரும் வீச்சைக் கண்டிருக்கின்றன. இன்று கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலுமே ஏதோ ஒரு வகையில் AI தொழில்நுட்பங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கிறது AI. பலரும் மொபைலில் பாதுகாப்புக்கு ஃபேஸ் அன்லாக் வசதியைப் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதைச் சாத்தியப்படுத்தியது AI தான். உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப பரிந்துரைகளை யூடியூப், நெட்ப்ளிக்ஸ் போன்ற தளங்கள் வழங்குவது AI உதவியுடன்தான். கூகுள் மேப்ஸில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது வழியில் எவ்வளவு ட்ராஃபிக் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல்வது AI தான். உணவு டெலிவரி செயலிகள், வங்கி சேவைகள் என இப்படி AI பயன்பாடுகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இப்படி தூணிலும் துரும்பிலும் இருந்தாலும், இப்போது உலகமெங்கும் செயற்கை நுண்ணறிவு மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அதற்குக் காரணம் படைப்பாளியாகவும் AI அவதாரம் எடுத்திருப்பதுதான். இதை Generative AI என்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் விஷயங்களை வைத்துப் புதிதாக ஒன்றை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவை இப்படி அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு, 1330 திருக்குறள்களையும் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் கொடுத்துப் புதிதாக ஒரு குறள் எழுதச் செய்தால் அது Generative AI. இதற்கு ஒவ்வொரு குறளின் பொருளையும், அது இடம்பெற்ற அதிகாரத்தையும் பகுப்பாய்வு செய்து, ‘குறள் எப்படி எழுதுவது’ என்பதைக் கற்றுக்கொண்டாக வேண்டும் இந்த AI. இப்படி கணினியைத் தானாகக் கற்றுக்கொள்ள வைக்கும் முறையை Machine Learning என அழைப்பார்கள். எவ்வளவு அதிகமாகத் தரவுகள் இருக்கிறதோ அவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் AI ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும். இந்தத் தரவுகளை Training Data என்பார்கள்.

எளிதாகப் புரிந்துகொள்ளவே திருக்குறளைக் குறிப்பிட்டோம். உண்மையில், திருக்குறளின் நுட்பத்தை AI கற்றுக்கொள்ள 1330 குறள்கள் போதுமானதாக இருக்காது. ஆனால், இப்போது புழக்கத்தில் இருக்கும் படங்கள் மற்றும் ஓவியங்களை உருவாக்கும் Generative AI மாடல்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. ஏற்கெனவே கோடிக்கணக்கில் படங்களும் ஓவியங்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் Lensa, Dawn AI போன்ற செயலிகள் இப்படியான Generative AI மாடல்களையே பயன்படுத்துகின்றன. Lensa-வின் ‘Magic Avatar' வசதி Stable Diffusion என்ற Generative AI மாடலைப் பயன்படுத்துகிறது. இந்த மாடலுக்கு இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 500 கோடிப் படங்கள், ஓவியங்கள், கார்ட்டூன்கள் அவற்றுக் கான குறிப்புகளுடன் Training Data-வாகக் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. அவற்றை வைத்தே புதிதாக எப்படி படங்கள் மற்றும் ஓவியங்களை உருவாக்குவது என்பதை இது கற்றுக்கொண்டுள்ளது.
நம் படங்களை ஓவியங்களாக மாற்றுவது மட்டுமல்ல, வெறும் எழுத்தில் என்ன வேண்டும் என்பதை விளக்கினால் போதும், ஓர் அழகிய ஓவியத்தை உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன. எவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் வார்த்தைகளில் விவரிக்கிறோமா அவ்வளவு சிறப்பாக வருகின்றன இந்த AI ஓவியங்கள்.

எழுத்தை மையமாகக் கொண்ட Generative AI மாடல்களும் உண்டு. இவை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என அனைத்தும் எழுதுகின்றன. Open AI நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ChatGPT-யை எடுத்துக்கொள்வோம். இது ஒரு AI சாட்-பாட். அலுவலகத்துக்கு விடுப்புக் கடிதம் முதல் சிக்கலான புரோக்ராம் கோடிங் வரை இதனிடம் எதைக் கேட்டாலும் எழுதித்தருகிறது. கோவா போகத் திட்டம் போட்டுத்தருகிறது. சீரியலுக்கு வசனங்களுடன் காட்சி எழுதித் தருகிறது. ‘மங்காத்தா 2’-ன் கதைக்கரு எப்படி இருக்கலாம் என ஐடியாகூடக் கொடுக்கிறது. 2021 வரை இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளை Training Data-வாகக் கொண்டு செயல்படும் AI மாடல் இது. இசையமைப்பது பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்றாலும், AIVA என்ற AI சேவையைக் கொண்டு உங்களால் இசையை கம்போஸ் செய்யமுடியும். இவ்வளவு ஏன், சோதனை முயற்சியாக அமெரிக்காவில் நீதிமன்றத்தில் ஒருவருக்கு வழக்கறிஞராக சட்ட உதவி செய்யப்போகிறது AI.

இது Generative AI-ன் தொடக்கப்புள்ளிதான். இன்னும் பெரிய முன்னேற்றங்களை வரும் ஆண்டுகளில் நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், அதற்குள்ளாகவே ஏகப்பட்ட சர்ச்சைகள் Generative AI தொழில்நுட்பத்தைச் சூழத்தொடங்கிவிட்டன. ஏற்கெனவே பல்வேறு கலைஞர்களால் வரையப்பட்ட ஓவியங்களை மையமாகக் கொண்டே புதிய ஓவியத்தை உருவாக்குகிறது AI. இதனால் புதிய ஓவியங்களின் காப்புரிமை யாரைச் சேரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல கலைஞர்களும் ‘எங்கள் ஸ்டைலை அப்படியே காப்பி அடிக்கிறது AI' எனக் குற்றம் சாட்டிவருகின்றனர். எங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் படைப்புகள் இந்த AI-க்கு Training Data-வாகக் கொடுக்கப்பட்டி ருக்கின்றன எனவும் குமுறுகின்றனர். உலகமெங்கும் இருக்கும் கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் ArtStation, DeviantArt போன்ற தளங்களில் No to AI எனப் படங்களையும் கார்ட்டூன்களையும் பதிவேற்றி எதிர்ப்பைப் பதிவுசெய்யத் தொடங்கியுள்ளனர்.

AI உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தை வைத்து, அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்த ஓவியப்போட்டியில் ஜேசன் ஆலன் என்பவர் வென்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இப்படி காப்புரிமைப் பிரச்னை ஒருபுறம் என்றால், மனிதனுக்கேயான பாரபட்சம், முன்முடிவு, வக்கிரம், வன்மம் என அனைத்தும் இந்த AI-களுக்கும் கடத்தப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பெண்களைக் கவர்ச்சிப் பொருள்களாக அதன் ஓவியங்களில் காட்சிப்படுத்துகிறது என Lensa செயலியைப் பல பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மனிதர்களின் படைப்பிலிருந்து கற்றுக் கொண்டதையே இந்த AI மாடல்கள் செய்கின்றன. அதற்கெனத் தனியாக சார்போ பாரபட்சமோ எதுவும் கிடையாது என, இதுபோன்ற சர்ச்சைகளுக்குத் தீர்வு சொல்லாமல் நழுவுகின்றன AI நிறுவனங்கள்.இப்படியான பிரச்னைகள் ஒரு பக்கம் என்றால், இதுபோன்ற AI மாடல்களால் ‘ஹோம்வொர்க்' என்ற ஒன்றே இல்லாமல் போகும் எனக் கவலை தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள். மிகவும் சிக்கலான விஷயங்களையும் மிகவும் எளிதாக விளக்கச்சொன்னால் விளக்குகிறது இந்த AI. இதனால், கற்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு AI வரப்பிரசாதம்தான். அதே சமயம், ஆராய்ச்சிக் கட்டுரைகளையே எழுதித் தந்துவிடும் இந்த AI மாடல்கள் பள்ளி, கல்லூரி ஹோம்வொர்க்கை முடித்துத்தரச் சொன்னால் செய்யாதா என்ன? இதைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறுக்குவழியாகப் பயன்படுத்தக்கூடும் என்பதே கல்வியாளர்களின் கவலை. ஏற்கெனவே நியூயார்க்கில் சில கல்வி நிறுவனங்கள் ChatGPT பயன்பாட்டைத் தடைசெய்துள்ளன. ‘இப்படி AI அனைத்தையும் செய்துவிட்டால் மாணவர்கள் எப்படிக் கற்றுக்கொள்வார்கள்?' எனக் கேள்வி எழுப்புகின்றன இந்தக் கல்வி நிலையங்கள். இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி ‘Good Bye Homework' என ட்வீட் செய்திருந்தார் எலான் மஸ்க்.

இந்த AI மாடல்களால் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும், ஆயிரம் ஆபத்துகளும் இருக்கின்றன. இதுபோன்ற முன்னேற்றங் களைப் பார்க்கும்போது, பலரது வேலைகளை AI பறித்துவிடும் என்ற கவலை இன்னும் மேலோங்கியிருக்கிறது. எந்தெந்த வேலைகளுக்கு ஆபத்து இருக்கும் என்பதை இப்போதே பட்டியலிட்டு எச்சரிக்க ஆரம்பித்துவிட்டன சில நிறுவனங்கள்.
‘ஹாலிவுட் படங்களில் வருவதுபோல மொத்தமாக மனித இனத்தையும் செயற்கை நுண்ணறிவு ஓரங்கட்டிவிடுமோ?' என்ற சந்தேகம்கூட சிலருக்கு எழுந்திருக்கிறது. இதை ChatGPT-யிடமே கேட்டோம். `செயற்கை நுண்ணறிவு என்பது ஆற்றல் மிகுந்த, மாற்றங்கள் பலவற்றை நிகழ்த்தப்போகும் தொழில்நுட்பம் என்பது உண்மைதான். ஆனால், AI மனிதனால் உருவாக்கப்பட்டு மனிதனால் கட்டுப்படுத்தப்படும் தொழில்நுட்பம். அதற்கெனத் தனியாக விருப்புவெறுப்புகள் எதுவும் கிடையாது. அதனால் படங்களில் காட்டுவதுபோல AI உலகைக் கைப்பற்ற வாய்ப்புகள் மிகவும் குறைவு. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் அதை எப்படி மனிதர்கள் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. என்றாலும், கொஞ்சம் கவனத்துடன் அதை அணுகுவது நல்லது' என்பதே அதன் பதில்!

அட்டையில் இடம்பெற்றிருக்கும் ரஜினியின் படமும் Midjourney என்னும் Generative AI உதவியுடன் உருவாக்கப்பட்டதுதான். ‘இடைக்கால தமிழ் மன்னராக ரஜினி இருந்தால் எப்படி இருக்கும்?' என AI-யிடம் கேட்டு வாங்கிய ஓவியத்தைக் கொஞ்சம் மெருகேற்றிக் கூடுதல் அழகுடன் அட்டைப்படமாக மாற்றியிருக்கிறோம்.