கட்டுரைகள்
Published:Updated:

எங்கள் நிறுவனத்துக்கு விண்வெளியில் கிளைகள் உண்டு!

SpaceX நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
SpaceX நிறுவனம்

பேஸ் எக்ஸிற்காக மட்டும் இவர் வைத்திருக்கும் கனவுகளைக் கேட்டாலே ஹாலிவுட் ஸ்பேஸ் திரில்லர் படங்கள் பரவாயில்லை எனத் தோன்றும். ஆனால், அனைத்தையும் சாதிக்க முடியும் என அவ்வப்போது சாம்பிள் காட்டிக்கொண்டே இருக்கிறார் மஸ்க்.

ளர்ந்த நாடுகள், தன்னை உலகின் நம்பர் ஒன் நாடென நிலைநிறுத்திக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும். அப்படித்தான் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்களது பலத்தை நிரூபிக்க அமெரிக்கா, ரஷ்யா என இரு நாடுகளுமே விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் முதலீட்டைச் செய்தன. இந்த விண்வெளிப் போட்டியை ‘ஸ்பேஸ் ரேஸ்’ என்பார்கள்.

சமீபத்தில்கூட சீனாவும் அமெரிக்காவும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பிவைத்தன. இஸ்ரோவின் சாதனைகளால் நாமும் சத்தமில்லாமல் இதில் முக்கியப் போட்டியாளர்களாக இருக்கிறோம். தற்போது இந்த ரேஸில் புதிதாக ‘ஸ்பேஸ் எக்ஸ் (Space X)’ என்ற தனியார் நிறுவனமும் இணைந்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சடசடவென வளர்ந்துவருகிறது எலான் மஸ்க்கின் இந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம். இந்த நிறுவனம் வைத்திருக்கும் கனவுகளையும், இதுவரை செய்திருக்கும் சாதனைகளையும் விவரிப்பதற்கு முன்பு இந்த நிறுவனம் எப்படி உருவானது என்ற ஒரு குட்டி வரலாற்றைப் பார்ப்போம்.

எங்கள் நிறுவனத்துக்கு விண்வெளியில் கிளைகள் உண்டு!
எங்கள் நிறுவனத்துக்கு விண்வெளியில் கிளைகள் உண்டு!

2002-லேயே Paypal போன்ற தனது இன்டர்நெட் ஸ்டார்ட்-அப்கள் மூலம் நல்ல இடத்திற்கு வளர்ந்திருந்தார் எலான் மஸ்க். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து ரஷ்ய ராக்கெட் ஒன்றை விலைக்கு வாங்கி செவ்வாய்க்குச் சில செடிகளையும் பயிர்களையும் அனுப்பி அதை மீண்டும் பூமிக்கு எடுத்துவந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் எலான் மஸ்க். ஆனால் இதற்காக மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பு சுமுகமாக முடியவில்லை. ‘சரி, நாமே ஒரு விண்வெளி நிறுவனத்தை ஆரம்பித்துவிடுவோம்’ என முடிவெடுத்து அடுத்த சில மாதங்களிலேயே PayPal நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்றார் எலான் மஸ்க்.

“எனக்கு Paypal மூலம் கிடைத்த தொகை 180 மில்லியன் டாலர். அதில் 100 மில்லியன் டாலரை SpaceX நிறுவனத்திலும், 70 மில்லியன் டாலரை டெஸ்லா நிறுவனத்திலும் முதலீடு செய்துவிட்டேன். மீதமுள்ள 10 மில்லியன் டாலரை சோலார் சிட்டி என்ற நிறுவனத்திலும் முதலீடு செய்யப்போகிறேன். இதரச் செலவுகளுக்குக் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று அப்போது கூலாகச் சொன்னார் எலான் மஸ்க். 2002-லேயே தனியார் விண்வெளி ஆராய்ச்சி, மின்சார கார் போன்றவற்றில் பெரு முதலீடுகள் செய்தது அவராக மட்டுமே இருக்கமுடியும்.

ஸ்பேஸ் எக்ஸ் மூலம் 2010-க்குள் தனது செவ்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்திவிட வேண்டும் என்று நினைத்தார் அவர். ஆனால், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு முதல் ராக்கெட்டை ஏவுவதற்கே 2008-ம் ஆண்டு வரை எடுத்துக்கொண்டது ஸ்பேஸ் எக்ஸ். இடைப்பட்ட காலத்தில் ராக்கெட் உற்பத்தியில் தேர்ந்த நிறுவனமாக வளர்ந்தது ஸ்பேஸ் எக்ஸ். 2010-ல் பிரபல Falcon 9 ராக்கெட்டை விண்ணில் ஏவியது அந்த நிறுவனம். ஒன்பது என்ஜின்கள் கொண்ட இந்த ராக்கெட் அரசு அமைப்புகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிக் கொடுத்தது. 2017-ல் மிகவும் பலம் பொருந்திய ஸ்பேஸ் எக்ஸின் அதிநவீன Falcon Heavy ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இது போன்று ரிஸ்க்கான மிஷன்களில் முதலில் ‘Dummy Payload’ ஒன்றை அனுப்புவது வழக்கம். ‘அது போர் பாஸ்!’ என விண்வெளி வீரர் பொம்மையுடன் டெஸ்லா கார் ஒன்றை விண்ணில் ஏவியது இந்த ராக்கெட். இன்னும் நம் சூரியக்குடும்பத்தில் விண்ணில் மிதந்தபடி எங்கோ உலவிக்கொண்டிருக்கிறது இந்தக் கார்.

எங்கள் நிறுவனத்துக்கு விண்வெளியில் கிளைகள் உண்டு!

இந்தப் பத்தாண்டுகளில் 80-க்கும் அதிகமான மிஷன்களுக்கு Falcon ராக்கெட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்ற ராக்கெட்களுக்கும் Falcon ராக்கெட்களுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம் இந்த ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்த முடியும். இதன் சமீபத்திய Block 5 ரக Falcon ராக்கெட்களை நூறு முறை வரை மீண்டும் பயன்படுத்த முடியுமாம். இப்படியான ‘Reusable’ ராக்கெட்களை உருவாக்கியது ஸ்பேஸ் எக்ஸின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகச் சொல்லலாம்.

எங்கள் நிறுவனத்துக்கு விண்வெளியில் கிளைகள் உண்டு!

இப்படித் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் புதுமைகளைப் புகுத்திவரும் ஸ்பேஸ் எக்ஸ், கடந்த வாரம் மற்றுமொரு முக்கிய விண்வெளி மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ‘Dragon 2’ விண்கலம் மூலம் முதல்முறையாக விண்ணுக்கு ரவுண்டு-ட்ரிப் அடித்து வந்திருக்கின்றனர் நாசா விண்வெளி வீரர்கள். மே 31-ம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) விண்வெளி வீரர்கள் பாப் பெஹ்கென் மற்றும் டக் ஹர்லி இந்த விண்கலம் மூலம் சென்றனர். இவர்கள் இருவருமே கடந்த வாரம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 2-ம் தேதி, கடல் நீர் தெறிக்க ‘Dragon 2’ விண்கலம் பூமிக்குத் திரும்பியது. தனியார் நிறுவனம் ஒன்றின் விண்கலத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் செல்வது இதுவே முதல்முறை.

2011-க்குப் பிறகு நாசா தன் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப ரஷ்யாவின் Soyuz ராக்கெட்களையே நம்பியிருந்தது. ஒவ்வொரு பயணத்திற்கும் அதிக தொகையை ரஷ்யாவிற்குத் தந்துகொண்டிருந்தது நாசா. ஸ்பேஸ் எக்ஸ் இந்தத் தொகையைப் பெருமளவில் மிச்சப்படுத்திக்கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் இதுபோன்ற இன்னும் சில மிஷன்களையும் ஸ்பேஸ் எக்ஸுடன் மேற்கொள்ளவிருக்கிறது நாசா.

எலான் மஸ்க்கின் வாழ்நாள் கனவு செவ்வாயில் ஒரு மனித காலனி அமைக்கவேண்டும் என்பதுதான். ‘எப்படியும் நாம் சீக்கிரமே பூமியை காலி செய்யவேண்டியது வரும்’ என்பது அவரது நம்பிக்கை. இதற்காக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்கள் சோதனைக் கட்டத்தில் இருக்கின்றன. 2023-ல் இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்களில் ஒன்றுதான் ஜப்பானின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான யூஸாகு மேஸாவாவையும் அவரின் எட்டு அபிமான கலைஞர்களையும் நிலவுக்குக் கூட்டி செல்லவிருக்கிறது. #dearMoon என அழைக்கப்படும் இந்த மொத்த மிஷனையும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் நேரடி ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டிருக்கிறார் மஸ்க். இதன்மூலம் வீட்டிலிருந்தே நிலவு செல்லும் அனுபவத்தை அனைவருமே பெற முடியும்.

மஸ்க்கின் இன்னொரு கனவுத்திட்டம் ‘ஸ்டார்லிங்க்’. 42,000 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி அவையனைத்தையும் பூமியைச் சுற்றவிட்டு அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் தருவதே ‘ஸ்டார்லிங்க்’ திட்டம். இதுவரை இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 540 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிவிட்டது அந்த நிறுவனம்.

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் 12B பஸ்ஸில் வடபழனி செல்வதுபோல விண்வெளிப் பயணத்தையும் சாதாரணமானதாக மாற்ற வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸின் குறிக்கோள். ‘இது எப்படி சாத்தியம்?’ என்று கேள்வி கேட்ட நம்மை, ‘எப்போது சாத்தியம்?’ எனக் கேள்வி கேட்க வைத்ததுதான் ஸ்பேஸ் எக்ஸின் சாதனை!