Open AI என்ற நிறுவனத்தின் தயாரிப்புதான் இன்று பிரபலமாகி வரும் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு சாட்போட் (AI Chatbot). இது 2022 நவம்பர் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன், கிரெக் ப்ரோக்மேன், ரீட் ஹாஃப்மேன் உள்ளிட்ட டெக் ஜாம்பவான்களால் 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே `Open AI' நிறுவனம். பின்னர், அது பலரிடம் கைமாறி இன்று சாம் ஆல்ட்மேன் என்பவர் வசமிருக்கிறது.

இந்த ஏஐ சாட்போட், கேள்விகளுக்கு சட்டெனெ பதில் அளிப்பது, கோடிங் செய்வது, பல தகவல்களையும் திரட்டி ஒரு கட்டுரை வடிவில் கொடுப்பது எனப் பல மணி நேர வேலைகளை எளிதாக முடித்து விடுகிறது. இதனால் மக்களிடையே மிக வேகமாக சாட்ஜிடிபி பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தில் இது மாபெரும் மைல்கல் எனப் பலரும் கருதுகின்றனர். இருந்தபோதிலும் இவ்வகை தொழில்நுட்ப பயன்பாடு ஊழியர்களின் வேலையைப் பறிக்கும் என அபாய குரலும் ஒலித்து வருகிறது.
என்னதான் இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சி பல நிறுவனங்களையும் இது போன்ற சாட்போட்களை செய்யத் தூண்டியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS) சாட்ஜிடிபி- க்கு நிகராக ஏஐ சாட்போட் உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

``டிசிஎஸ் நிறுவனம் வணிகத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஏஐ சாட்போட்டை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனத்திடம் உள்ள இன்டெர்னல் கோட், தரவு மற்றும் வளங்களைப் பயன்படுத்த டிசிஎஸ் பார்க்கிறது’’ என நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என். கணபதி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.