டெல்லி கலவரத்தில் 1,100 பேரின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டது எப்படி?

கலவரத்தில் ஈடுபட்ட 1,100 பேரின் அடையாளங்களைக் காவல்துறை கண்டறிந்துள்ளது. அவற்றில் 300 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
நீண்ட நாள்களுக்குப் பின், மனிதத் தன்மையற்ற நிகழ்வை இந்தியா கண்டுள்ளது. டெல்லியில் சி.எ.ஏ-வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் திரண்ட மக்கள், இரு குழுக்களாக மோதிக் கொண்டதில் 53 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் பணியில் Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1,100-க்கும் மேற்பட்டோரின் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர் டெல்லி காவல்துறையினர்.

கடந்த புதன் அன்று, நாடாளுமன்றத்தில் டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தின்போது இந்தத் தகவல்களை அமித் ஷா (Amit shah) பகிர்ந்தார். ``கலவரத்தில் ஈடுபட்ட 1,100 பேரின் அடையாளங்களை, காவல்துறை கண்டறிந்துள்ளது. அவற்றில் 300 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்று. சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களின் தகவல்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். கேமராவுக்கு எந்த மதம் என்றெல்லாம் தெரியாது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
கண்டறிந்தது எப்படி?
சிசிடிவி காட்சிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட காணொளிகள் மூலம் கலவரத்தில் இருந்தவர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்படும். பின்னர் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை அரசின் தகவல்தளங்களான, ஆதார், வாக்காளர் பட்டியல், ஓட்டுநர் உரிமப் பட்டியல் ஆகியவற்றின் உதவியுடன் பொருந்தும் புகைப்படங்களைக் கொண்டு குறிப்பிட்ட நபர்களின் தகவல்கள் திரட்டப்படும்.

இது எந்தளவுக்குத் துல்லியமாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் நபர்களை மாற்றி அடையாளம் காட்டினால் என்ற கேள்வியும் எழுகிறது. ``ஒருவர் எந்த அடையாளத்தை மாற்றினாலும், கண் மற்றும் தாடையை மாற்ற முடியாது. அவை அப்படியேதான் இருக்கும். இவைதான் குற்றம் செய்தவர்களைக் கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்" எனக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.