Published:Updated:

சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் 20 நிறுவனங்கள்... அமெரிக்காவின் பட்டியல்!

Huawei
Huawei

சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் இந்தப் பட்டியல் அமெரிக்க அரசு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கப் பாதுகாப்பு தலைமை அலுவலகமான பென்டகன், சீனாவின் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் கருதப்படும் 20 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற வாவே (Huawei) மற்றும் ஹிக் விஷன் டிஜிட்டல் டெக்னாலஜி நிறுவனங்களும் அடங்கும்.

சில நாள்களுக்கு முன் அமெரிக்கச் சட்ட வல்லுநர்களுக்கு, "அமெரிக்காவில் செயல்படும் சீன கம்யூனிச ராணுவ நிறுவனங்கள்" என்று தலைப்பிடப்பட்ட கடிதத்தை பென்டகன் அனுப்பியுள்ளது.

China
China

இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜோனாதன் ஹாஃப்மேன் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "சீனா ராணுவத்தின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கருதப்படும் 20 நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளோம். இந்தப் பட்டியல், 1999 நிதியாண்டு அமலுக்கு வந்த பாதுகாப்புக் கொள்கை சட்டத்தில் (Defense Authorization Act) கோரப்பட்டதன் காரணமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவின் அரசாங்கம், ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையால் கட்டுப்படுத்தப்படும் அல்லது இணைந்து செயல்படும் நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பட்டியல் அமெரிக்க அரசு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம். இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களுடன் வணிக ரீதியில் இணைந்து செயல்படலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கு இது ஒரு கருவியாக அமையும்" என்று தெரிவித்திருக்கிறார்.

திடீரென இந்தப் பட்டியலை அமெரிக்கா ஏன் வெளியிட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த இரு வல்லரசுகளுக்கிடையிலான உறவு என்பது தொடர்ந்து மோசமடைந்துதான் வந்தது. அமெரிக்கத் தேர்தல் பிரசாரம் வரை சீனாவின் தலையீடு இருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்தக் காரணங்களால்தான் இந்தப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனா, தன் நாட்டில் செயல்பட்டுவரும் நம்பகத்தன்மையற்ற பிற நாட்டு நிறுவனங்களின் பட்டியலைத் தயாரிப்பதாக அச்சுறுத்தியது. ஆனால் இதுவரை அவ்வாறு செய்யவில்லை. சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பட்டியல், 1999-ன் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பு கருதிக் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், எந்தவொரு நிர்வாகமும் அதற்குத் தேவையான அறிக்கைகளை வெளியிடவில்லை. அந்த நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை விதிக்க 1977-ம் ஆண்டின் சர்வதேச அவசரப் பொருளாதாரச் சட்டத்தின் கீழ் அதிபர் ட்ரம்பிற்கு அதிகாரம் உள்ளது.

Trump
Trump
Alex Brandon | AP

சீனாவின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களும், சீனாவின் அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களை மேற்பார்வையிடும் அமைச்சகமும் இது குறித்து பதிலளிக்கவில்லை. இது குறித்து பிரபல நிறுவனமான ஹிக் விஷன் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் இந்தப் பட்டியல் முற்றிலும் ஆதாரமற்றது எனவும், தங்கள் நிறுவனம் எப்போதும் சுயாதீனமாக இயங்கும் நிறுவனமாகவே இருக்குமெனவும், இது குறித்த அமெரிக்க அரசின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் நிறுவனம் குறித்த தவறான புரிதல்களைச் சரிசெய்ய அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் கூறினார்.

மேலும் 21 ஆண்டு பழைமையான சட்டத்தில் என்றும் பயன்படுத்தப்படாத விதிமுறையைத் திடீரெனத் தவறாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை ஹிக் விஷன் கடுமையாக விமர்சிக்கவும் செய்திருக்கிறது. "ஹிக் விஷன் ஒரு சீன ராணுவ நிறுவனம் அல்ல. ஹிக்விஷன் ஒருபோதும் ராணுவப் பயன்பாடுகளுக்கான எந்தவோர் ஆராய்ச்சி வேலைகளிலும் ஈடுபடவில்லை" என்றும் ஹிக் விஷனின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

Hik Vision
Hik Vision
India-China FaceOff:`இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ரஷ்யா!’ -தீர்வு கிடைக்குமா?

இந்தப் பட்டியலில் வாவே மற்றும் ஹிக் விஷன் தவிர, சீனா ரயில்வே கட்டுமான நிறுவனம், சீனா தொலைத்தொடர்பு நிறுவனம், சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் மற்றும் பாண்டா எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

"பென்டகன் இன்று வெளியிட்டுள்ள பட்டியல் ஒரு சிறிய தொடக்கமாகும். ஆனால், சீன அரசாங்கத்தை ஆதரிக்கும், சீன அரசால் வழிநடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்க இது மட்டும் போதாது" என்று குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ரூபியோ ஓர் அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

Huawei Phones
Huawei Phones

இந்தியாவிலும் இதுபோன்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு சீன நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கா வெளியிட்ட பட்டியலில் உள்ள நிறுவனங்கள்:

  • Aviation Industry Corporation of China - சீனாவின் விமானத் தொழில் கழகம்

  • China Aerospace Science and Technology Corporation - சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்

  • China Aerospace Science and Industry Corporation - சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகம்

  • China Electronics Technology Group Corporation - சீனா எலெக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷன்

  • China South Industries Group Corporation - சீனா சவுத் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்

  • China Shipbuilding Industry Corporation - சீனா கப்பல் கட்டும் தொழில் கழகம்

  • China State Shipbuilding Corporation - சீனா மாநில கப்பல் கட்டுமானக் கழகம்

  • China North Industries Group Corporation - சீனா நார்த் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்

  • Huawei Technologies Co. - வாவே டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன்.

  • Hangzhou Hikvision Digital Technology - ஹாங்க்சோ ஹிக்விஷன் டிஜிட்டல் டெக்னாலஜி கார்ப்பரேஷன்.

  • Inspur Group; Aero Engine Corporation of China - இன்ஸ்பூர் குழு; சீனாவின் ஏரோ என்ஜின் கார்ப்பரேஷன்

  • China Railway Construction Corporation - சீனா ரயில்வே கட்டுமானக் கழகம்

  • CRRC Corp.; Panda Electronics Group - சி.ஆர்.ஆர்.சி கார்ப் .; பாண்டா எலெக்ட்ரானிக்ஸ் குழு

  • Dawning Information Industry - டானிங் தகவல் தொழில் நிறுவனம்.

  • China Mobile Communications Group - சீனா மொபைல் கம்யூனிகேஷன்ஸ் குழு

  • China General Nuclear Power Corp. - சீனா ஜெனரல் நியூக்ளியர் பவர் கார்ப்.

  • China National Nuclear Power Corp. - சீனா தேசிய அணுசக்தி கார்ப்பரேஷன்.

  • China Telecommunications Corp. - சீனா தொலைத்தொடர்பு கார்ப்பரேஷன்.

அடுத்த கட்டுரைக்கு