Published:Updated:

திருடப்பட்ட 2.2 கோடி பயனாளர்கள் டேட்டா... சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அன்அகாடமி!

அன்அகாடமி
அன்அகாடமி

இதை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இணைய பாதுகாப்பு நிறுவனமான சைபிள் (cyble) தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி இணைய வழி கல்வி அமைப்பான அன்அகாடமியின் 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதில் விப்ரோ, இன்ஃபோஸிஸ், காக்னிசன்ட், கூகுள் மற்றும் அதன் முதலீட்டு நிறுவனமான ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள் மற்றும் தொடர்புகளும் அடங்கும். இந்தத் தகவல்கள் ஜனவரி மாதமே ஊடுருவப்பட்டுள்ளன. ஆனால், சமீபத்தில்தான் (மே 3) இவை டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளன. இதை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இணைய பாதுகாப்பு நிறுவனமான சைபிள் (cyble) தெரிவித்துள்ளது.

Hack
Hack

இவ்வாறு திருடப்பட்ட தரவுகளில் பயனாளர்களின் பெயர்கள், இமெயில் கணக்குகள், கடவுச்சொல், சேர்ந்த தேதி, கடைசியாகக் கணக்கைப் பயன்படுத்திய தேதி, முதல் மற்றும் கடைசி பெயர்கள், கணக்குகளின் நிலை என அனைத்துத் தகவல்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம். தற்போது பயனாளர்களின் விவரங்கள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் அதிகமான தகவல்களை அவர்களால் பெற முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

`அமீரக நாடுகளில் வெறுப்புப் பதிவுகள்..!’ -இந்தியாவுக்கு எதிராக சைபர் வார் நிகழ்த்தும் பாகிஸ்தான்?

இதுகுறித்து அன்அகாடமியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹேமேஷ் சிங்க் கூறுகையில், ``எங்களின் விசாரணைப்படி 1.1 கோடி பயனாளர்களின் தகவல்கள்தான் 2.2 கோடி பயனாளர்கள் என மாற்றிக் கூறப்பட்டு வருகிறது. இதைப்பற்றி நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். இதைக்கொண்டு பயனாளர்களின் நிதி தகவல்கள் மற்றும் இருப்பிடங்களை ஹேக் செய்ய விடமாட்டோம். பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமாகும். இதனால் தனிப்பட்ட விவரங்களில் நாங்கள் எந்த வித சமரசமும் மேற்கொள்ள மாட்டோம். கடவுச்சொல்லை PBKDF2 அல்காரிதம் மற்றும் SHA256 hash செயல்பாட்டைக் கொண்டு பாதுகாத்து வருகிறோம். இதோடு கணக்கில் உள்நுழைய OTP லாகின் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

Unacademy
Unacademy

அன்அகாடமி நிறுவனமானது தற்போது தான் சீரிஸ் எஃப் (series f) சுற்று முதலீடான $110 மில்லியனைப் பெற்றது. இதில் முக்கிய முதலீட்டாளர்களாக ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிகா மற்றும் செக்குயாய்யோ (Sequoia) ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடங்கும். இப்படிக் கூடுதல் முதலீட்டைப் பெற்றவுடன் அதன் தகவல்கள் அதிக அளவில் ஊடுருவப்பட்டுள்ளது பயனாளர்களின் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் இணையத்தின் வழியாகவே படித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல இணைய வழிக் கல்வி நிறுவனமான அன்அகாடமியின் தரவுகள் திருடப்பட்டுள்ளது இணைய தகவல் பாதுகாப்பு குறித்து நிறுவனங்கள் கவனம் கொள்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு