Published:Updated:

5G, கூகுள் கூட்டணி, MR க்ளாஸ்... ஜியோவின் புதிய டெக் திட்டங்கள்! #AGM2020

#AGM2020
#AGM2020

இந்தியாவின் தொழில்நுட்ப முன்னோடியாக பல புதிய திட்டங்களை நேற்று அறிவித்தது ரிலையன்ஸ். நேற்றைய நிகழ்வின் டெக் ஹைலைட்ஸ்தான் இந்த கட்டுரை.

ஒவ்வொரு வருடமும் ரிலையன்ஸ் கடந்த ஆண்டில் சாதித்ததையும், அதன் வருங்கால திட்டங்களையும் வருடாந்திர பொதுகூட்டத்தில் (AGM) தெரிவிப்பார் முகேஷ் அம்பானி. அப்படி 43-வது AGM நிகழ்வு, இந்த முறை மற்ற அனைத்து விழாக்களை போலவும் இணையம் வழி விர்ச்சுவலாகவே நடந்தது. நேற்று நடந்த இந்த விழாவில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.

#AGM2020
#AGM2020

ஜியோ அறிமுகமாகி சில வருடங்களே ஆனாலும், இன்று ரிலையன்ஸ் குழுமத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது ஜியோ. வெறும் டெலிகாம் நிறுவனமாக மட்டுமில்லாமல் இந்தியாவின் மிக முக்கிய டெக் நிறுவனமாகவும் சடசடவென வளர்ந்து நிற்கிறது ரிலையன்ஸ். தொடர்ந்து பெரும் முதலீடுகளையும் பெற்றுவருகிறது. அப்படி இந்தியாவின் தொழில்நுட்ப முன்னோடியாக பல புதிய திட்டங்களை இந்தியாவிற்காக நேற்று அறிவித்தது ஜியோ. மார்க் சக்கர்பெர்க், சுந்தர் பிச்சை என முக்கிய டெக் ஆளுமைகள் பங்குபெற்ற நேற்றைய நிகழ்வின் டெக் ஹைலைட்ஸ்தான் இந்த கட்டுரை.

ஜியோ-கூகுள்
நேற்றைய அறிவிப்புகளில் மிக முக்கியமானதாகவும், யாரும் பெரிதும் எதிர்பார்க்காதவொரு அறிவிப்பாகவும் இருந்தது ஜியோ-கூகுள் கூட்டணி பற்றிய அறிவிப்புதான்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட பல டெக் நிறுவனங்கள் ஜியோவில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 7.7 சதவிகித ஜியோ பங்குகளை கூகுள் வாங்கும். சமீபத்தில் நடந்த 'Google For India' விழாவில்தான் அடுத்த சில வருடங்களில் இந்தியாவில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாக கூகுள் அறிவித்திருந்தது. ஜியோவில் செய்யப்படும் இந்த முதலீடு அதன் ஒரு அங்கம்தானாம். இதுகுறித்து பேசிய கூகுள் CEO சுந்தர் பிச்சை, "நாங்கள் அறிவித்த 75,000 கோடி ரூபாயில் இதுதான் மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய முதலீடு. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான இணைய சேவைகள் சென்று சேர ஜியோவுடன் கைகோக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

Google: `இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு!’- மோடியுடன் கலந்துரையாடிய சுந்தர்பிச்சை
ஜியோ-கூகுள்
ஜியோ-கூகுள்

இதன்மூலம் எதோ ஒரு வகையில் ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் என டெக் உலகின் மும்மூர்த்திகளுடனும் கூட்டணி அமைத்திருக்கிறது ஜியோ. இதிலிருந்தே இந்திய டெக் உலகில் ஜியோவுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது புரியும். இதே பாதையில் சென்றால் உலக அரங்கிலும் முன்னணி டெக் நிறுவனமாக ஜியோ வளரும்.

5G
100% Made in India

இறுதியாக 5G சேவை குறித்து இந்த விழாவில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. "இந்தியாவில் ஜியோவின் 5G சேவைகள் வெகு விரைவில் தொடங்கப்படும். உலகத்தரத்திலான இந்த 5G சேவை தொடக்கப்புள்ளியிலிருந்து இங்கே நம் நாட்டில் வடிவமைக்கப்பட்டது. 100% இந்திய தொழில்நுட்பங்களை மட்டுமே இதற்குப் பயன்படுத்தியிருக்கிறோம். இப்போது அனைத்தும் தயாராக இருக்கிறது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட உடன் சோதனை ஓட்டம் தொடங்கிவிடும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

5G
5G
பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

இதன்படி, 2021-ல் 5G சேவையை நாம் எதிர்பார்க்கலாம். டெலிகாம் நிறுவனங்களின் மோசமான நிதிநிலையைக் கருத்தில் கொண்டு 5G ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் அடுத்த வருடத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு விஷயத்தையும் இங்கே கவனிக்க வேண்டும். உலகமெங்கும் 5G கட்டுமான பணிகளில் வாவே (Huawei), ZTE போன்ற சீன நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்தச் சூழலில்தான் ஜியோவின் 5G நெட்வொர்க் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகியிருக்கிறது என அறிவித்திருக்கிறது ரிலையன்ஸ். 5G-யின் அறிமுகத்திற்கு பிறகு, இந்தியாவில் தொழில்நுட்ப பாய்ச்சல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ டிவி+
12 OTT சேவைகள், ஒரே ஆப்!

தொடர்ந்து பல இணைய சேவைகளை அறிமுகப்படுத்திக்கொண்டு இருக்கிறது ஜியோ. சமீபத்தில்தான் ஜியோமார்ட் என்னும் ஆன்லைன் வர்த்தக சேவை முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டது. ஃபேஸ்புக்குடனான கூட்டணியின் காரணத்தால் அதில் வாட்ஸ்அப்பின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி. மற்ற ஜியோ சேவைகளிலும் ஃபேஸ்புக் மற்றும் அதன் பிற சேவைகளின் பங்களிப்பு இருக்குமாம்.

சமீபத்தில்தான் வீடியோ கான்ஃபரன்சிங் சேவையான 'ஜியோ மீட்' அறிமுகமானது. ஆனால் 'இது ஜூம் போட்டியாளரா இல்லை ஜூம்மின் அப்பட்டமான காப்பியா' என பலரும் கேள்வி எழுப்பினர். அதன்பின் அது சரி செய்யப்பட்டது. ’இந்த சேவை 5 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்து இந்தியாவில் பலரும் பயன்படுத்தும் சேவையாக மாறிவருகிறது’ என இந்த விழாவில் அறிவித்தார் முகேஷ்.

Jio Tv +
Jio Tv +

முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி, ஜியோ டிவி+ சேவையை அறிமுகம் செய்துவைத்தார். கடந்த வருடம்தான் ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ செட்-அப் பாக்ஸ் அறிமுகமானது. அதன்மூலம் பிரபல டிவி சேனல்கள் மற்றும் OTT தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்க்க முடிந்தது. இந்த வருடம் இன்னும் ஒருபடி மேலே சென்று ஜியோ டிவி+ என்ற சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதை ஒரு 'Aggregating' சேவை என சொல்லலாம். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உட்பட 12 OTT சேவைகளில் இருக்கும் கன்டென்ட் இந்த ஒரே ஆப்பில் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனி ஆப் தேவையில்லை. ஒரே லாகின்போதும்.

Apple tv
Apple tv

இது குறித்து தவறான புரிதல் பலருக்கும் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஜியோ டிவி+ க்கு பணம்கட்டிவிட்டால் அனைத்தையும் பார்க்கலாம் என்று அர்த்தம் கிடையாது. முன்பு சொன்னது போல இது வெறும் 'Aggregating Service'தான். ஆப்பிள் டிவி பயன்படுத்தியிருப்பவர்களுக்கு இது புரியும். அனைத்தும் ஒரே இடத்தில் இருக்குமே தவிர ஒவ்வொன்றுக்கும் அதற்கான பணத்தை நாம் தனியாக செலுத்த வேண்டியதாக இருக்கும். ஆனால், 12 சேவைகளின் கன்டென்ட்டும் ஒரே இடத்தில் இருக்கும் என்பதால் ஒரே சர்ச் பாரில் பார்க்க வேண்டிய படத்தை தேடி எளிதில் கண்டுபிடித்துவிடலாம். பார்ப்பதற்கும் எளிதாக இருக்கும். இது குறித்து தெளிவான விளக்கங்கள் எதுவும் ஜியோ தரவில்லை என்றாலும் ஒரு சின்ன டெமோ ஒன்றை கொடுத்தனர். அதை பார்க்கும்போது செயல்பாட்டில் மட்டுமல்ல, பார்க்கவும் ஆப்பிள் டிவி போலத்தான் இருக்கிறது ஜியோ டிவி+. ப்ச்ச்ச்!

ஜியோ க்ளாஸ்
ஜியோவின் 'Mixed Reality க்ளாஸ்!
ஜியோவின் 'Mixed Reality' க்ளாஸ்!
ஜியோவின் 'Mixed Reality' க்ளாஸ்!

இந்த விழாவின் சர்ப்ரைஸ் அறிமுகம் ஜியோ க்ளாஸ்தான். Mixed Reality தொழில்நுட்பத்தில் ஜியோ ஆர்வம் காட்டிவருகிறது என போன விழாக்களைப் பார்த்தாலே புரியும். ஆனால், இப்படி ஒரு தயாரிப்புடன் களம்காணும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 75 கிராம் எடையிலான இந்தக் கண்ணாடி வழியே மற்றவர்களுடன் உரையாட முடியும். மற்றும் பல விஷயங்களை செய்ய முடியும். நடுவில் ஒரு கேமரா இருக்கிறது. இது பற்றிய ஒரு குட்டி டெமோவும் கொடுக்கப்பட்டது. ஆனால் மற்றபடி அதிகம் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

5G போன்கள்

5G Phone
5G Phone

ஜியோ போன் பற்றி இந்நேரம் நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட பேசிக் போன் போன்று இருந்தாலும், குறைந்த விலையில் 4G சேவைகளை எடுத்துவந்தன இந்த ஜியோ போன்கள். பலரும் பயன்படுத்தும் ஒரு போனாகவும் இது அமைந்தது. இந்நிலையில் 5G-க்கும் இப்படியான ஒரு போன் தயாராகி கொண்டிருக்கிறதாம். இதற்கான இயங்குதளம் (Operating System) வடிவமைப்பதில் கூகுளுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் முகேஷ். அதன்படி ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட ஒரு ஓ.எஸ் இந்த போன்களுக்காக சிறப்பாக அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

COVID-க்குப் பிறகு இன்னும் இந்தியா வேகமாக வளரும் என்றும் இந்த விழாவில் நம்பிக்கை தெரிவித்தார் முகேஷ் அம்பானி!

ஜியோவின் இந்த நாளைய டெக் அறிவிப்புகளில் உங்களை கவர்ந்தது எது...? கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு