Published:Updated:

ரூ.75,000 கோடி முதலீடு, CBSE-யுடன் கூட்டணி... இந்தியாவுக்கான கூகுளின் புதிய திட்டங்கள்!

 சுந்தர் பிச்சை | Sundar Pichai
சுந்தர் பிச்சை | Sundar Pichai

'Google for India Digitization Fund' என 75,000 கோடி ரூபாயை இந்தியாவுக்காக ஒதுக்கியிருக்கியிருக்கிறது கூகுள். 5-7 வருடங்களில் பல்வேறு வடிவங்களில் இந்தத் தொகையை இந்தியாவில் முதலீடு செய்யும் கூகுள்.

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் ஒவ்வொரு வருடமும் 'Google for India' என்ற ஈவென்ட் மூலம் இந்தியாவுக்காக வைத்திருக்கும் சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அப்படி ஆறாவது முறையாக இன்று 'Google for India' விழா நடந்தது. கூகுள் CEO சுந்தர் பிச்சை, மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கலந்துகொண்ட இந்த ஈவென்ட் இம்முறை மொத்தமாக ஆன்லைனில் நடந்துமுடிந்தது.

கூகுள் | Google
கூகுள் | Google
AP | Patrick Semansky

முதலில் அறிமுக உரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்தார் கூகுளின் இந்தியத் தலைவர் சஞ்சய் குப்தா. இந்தியாவில் COVID-19 சூழலில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்று சேர்வது தொடங்கி பல வழிகளில் கூகுள் எவ்வாறு மக்களுக்கு உதவி வருகிறது என எடுத்துக் கூறினார். கூகுள் பே மூலம் மட்டும் 120 கோடி ரூபாய் நிதி PM Cares-க்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். ICMR உதவியுடன் 300 நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட 600 COVID டெஸ்டிங் சென்டர்களை மக்களுக்கு ஒழுங்கான முறையில் கூகுள் சர்ச் மற்றும் மேப்ஸ் வழி கொண்டு சேர்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவருக்கு அடுத்து ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் CEO சுந்தர் பிச்சை பேசினார். "டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியாவை மாற்றுவதே கூகுளின் இலக்கு. இந்தியாவுக்கென தொடங்கப்பட்ட பல திட்டங்கள் உலகமெங்கும் பல மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளன. 'Google for India Digitization Fund' என 75,000 கோடி ரூபாயை இந்தியாவுக்காக ஒதுக்கியிருக்கிறோம். 5 - 7 வருடங்களில் பல்வேறு வடிவங்களில் இந்தத் தொகையை இந்தியாவில் முதலீடு செய்வோம்.

இந்தியாவின் டிஜிட்டல் வருங்காலம் குறித்து எங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் CEO சுந்தர் பிச்சை
Sundar pichai
Sundar pichai

இந்த நிதி நான்கு விஷயங்களுக்குப் பயன்படும்.

1. அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது.

2. இந்தியாவுக்கென இருக்கும் சிறப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நிறுவுவது.

3. இந்திய பிசினஸ்களின் டிஜிட்டல் மாற்றத்துக்கு பக்கபலமாக இருப்பது.

4. சமூக நலனில், அதாவது கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் AI மற்றும் பிற தொழில்நுட்பங்களின் உதவியைக் கூட்டுவது.

இந்த முயற்சியில் பிரதமர் மோடியுடனும் இந்திய அரசுடனும் இந்தியாவின் பல விதமான தொழில்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்" என்றார்.

இதற்கு முன்னதாக இதுகுறித்து பிரதமர் மோடியுடன் கலந்துபேசியிருக்கிறார் சுந்தர் பிச்சை. இதுகுறித்து ட்விட்டரில் மோடி, "புதிய வேலை கலாசாரம், தகவல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு எனச் சுந்தருடன் பல விஷயங்கள் குறித்துப் பேசினேன். கூகுளின் இந்தப் புதிய முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கின்றன" எனப் பதிவிட்டார்.

Google Search பிரபாகர் ராகவன்... யார் இந்த இன்னொரு கூகுள் தமிழர்?

அடுத்து சீசர் சென்குப்தா (Vice President, Payments and Next Billion Users, Google) பேசினார். "2008-ல் ஒரே ஒரு நிறுவனம் மட்டும்தான் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. 1 டெலிகாம் நிறுவனம் மட்டுமே சப்போர்ட் கொடுத்திருந்தது. இப்போது 2020-ல் 200 கோடிக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. 1,300 நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு போன்களைத் தயாரிக்கின்றனர். அதில் பெரும்பாலான நிறுவனங்கள் அதை இந்தியாவிலேயே செய்கின்றன. இன்று அதிக ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாதான் இரண்டாவது. இந்த வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவோம்" என்றார் அவர்.

மேலும் தொழில்கள் எப்படி இன்றைய டிஜிட்டல் உலகுக்கு ஏற்றவாறு கூகுளின் உதவியுடன் மாறிவருகின்றன என்றும் எடுத்துக் கூறினார் அவர். "இந்தியாவில் இன்று 2.6 கோடி சிறு குறு தொழில்களைக் கூகுள் சர்ச், மேப்ஸ் மற்றும் பிற கூகுள் சேவைகளில் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களுக்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கும் 15 கோடி தொடர்புகளை ஏற்படுத்தி தருகிறது கூகுள்.

Google Business
Google Business

8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட கூகுள் பே பிசினஸ் சேவையை இன்று 30 லட்சம் வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர், எளிய முறையில் டிஜிட்டல் பேமன்ட்களை பெற்றுக்கொள்கின்றனர். தூர்தர்சனில் சிறு குறு நிறுவனங்கள் தங்கள் தொழிலை எப்படி டிஜிட்டலுக்கு எடுத்துச்செல்லலாம் என்று ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பி வருகிறோம்" என்றார்.

அடுத்து கல்வியில் கூகுள் என்னவெல்லாம் செய்துவருகிறது, செய்யப்போகிறது என சப்னா சத்தா (Senior Country Marketing Director, Google India) பேசினார். "இன்று COVID-19 பொது முடக்கங்களால் இந்தியாவில் 32 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது அவசர தேவையைப் பூர்த்திசெய்வதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது கூகுள். இதற்காக 'Teach from home' என்ற தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தோம். இதன்மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எங்கிருந்தும் படமெடுப்பது எளிமையாக்கப்பட்டது. கூகுள் மீட்டிலும் பல மாற்றங்கள் கொண்டுவந்திருக்கிறோம். செப்டம்பர் வரை சேவையை இலவசமாகவும் வழங்கி வருகிறோம்.

Teach from Home | Google
Teach from Home | Google

அடுத்தகட்டமாக CBSE-யுடன் இணைகிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 22,000 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஆசிரியர்களை டிஜிட்டல் கல்விக்கு ஏற்றவாறு பயிற்றுவிக்கவுள்ளோம். மாணவர்களுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் கல்வி இரண்டையும் ஒன்றிணைத்து எப்படி ஒரு நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த முடியும் என அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோக தனியாக எங்களது 'Distancing Learning Funds'-லிருந்து 7 கோடி ரூபாய் நிதியை இந்தியாவுக்காக வழங்கவுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இருவரும் கூகுளின் இந்த முயற்சிகளும் முதலீடுகளும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு