Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 27

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேம்ஸ்டர்ஸ்

கொரோனாச் சூழலே ஓய்ந்தாலும், வேர்டில் ஃபீவர் ஓயாது போல. நாளொரு வேர்டிலும், பொழுதொரு மாடலுமாக அத்தனை வேர்டில்கள் வரிசை கட்டி நிற்கின்றன

கேம்ஸ்டர்ஸ் - 27

கொரோனாச் சூழலே ஓய்ந்தாலும், வேர்டில் ஃபீவர் ஓயாது போல. நாளொரு வேர்டிலும், பொழுதொரு மாடலுமாக அத்தனை வேர்டில்கள் வரிசை கட்டி நிற்கின்றன

Published:Updated:
கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேம்ஸ்டர்ஸ்

குழந்தைகளுக்கு எது அதிகம் பிடிக்கறதோ, அதுவே கெட்டதுதான் என்கிற பொதுப்புத்தியின் அடிப்படையில்தான் வீடியோ கேம்களை பெற்றோர்கள் வெறுக்கிறார்கள். அப்படியே பக்கத்தைத் திருப்பிடாதீங்க, இதை நான் சொல்லவில்லை. குவான்டம் கணினியியலின் (Quantum computing) தந்தை எனச் சொல்லப்படும் டேவிட் டியூட்ஷ் தான் இவ்வாறு பேசியிருக்கிறார். “குழந்தைகள் உரையாடாமல், விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள் எனப் பலர் புகார் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் பேச நிறைய நேரம் இருக்கிறது. இன்னொன்று கேம் விளையாடிக்கொண்டே பேச முடியும். பெற்றோர்கள் முதலில் குழந்தைகளிடம் போதுமான அளவு உரையாடுவதில்லை. உரையாடல்கள் சுவாரஸ்யமானதாக இருந்தால் குழந்தைகள் நிச்சயம் பேசத்தான் போகிறார்கள். விளையாடிக்கொண்டிருப்பதை நிறுததிவிட்டுக்கூட உங்களின் பேச்சுகளை அவர்கள் கேட்க ஆரம்பிக்கலாம். அதே சமயம், வேண்டா வெறுப்பாக, விளையாடுபவர்களைத் தரதரவென இழுத்துவந்து உரையாடினால், அது வெறுமனே விழலுக்கு இறைத்த நீர்தான்’’ என்கிறார் இயற்பியல் அறிஞரான டேவிட் டியூட்ஷ். அவர் இதைச் சொல்லி 30 வருடங்கள் நெருங்கவிருக்கிறது.

கேம்ஸ்டர்ஸ் - 27

கொரோனாச் சூழலே ஓய்ந்தாலும், வேர்டில் ஃபீவர் ஓயாது போல. நாளொரு வேர்டிலும், பொழுதொரு மாடலுமாக அத்தனை வேர்டில்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஜோஷ் வேர்டில் உருவாக்கிய வேர்டிலை நியூ யார்க் டைம்ஸ் வாங்கிவிட, அதனால என்னங்க, நாங்க இருக்கோம் என்கிற கதையாக, வெவ்வேறு விதமான வேர்டில்களைப் பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. வேர்டில் பற்றிக் குறிப்பிட்ட முதல் வாரத்திலேயே, இது மொழிகள் கடந்து செல்ல வேண்டும் என விருப்பப்பட்டிருந்தோம். அது தற்போது ஏறக்குறைய நடந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. Wordle Unlimited என்னும் தளத்தில் ஐந்து எழுத்து வேர்டிலுடன், நீங்களே உங்களுக்கான கடினமான லெவலையும் தேர்வு செய்துகொள்ளலாம். ஆம், பத்து எழுத்து வேர்டில்கூட விளையாட முடியும். இதென்ன பிரமாதம் என்கிற ரீதியில் கணிதத்துக்கான வேர்டிலை நேர்டில் என்கிற பெயரில் உருவாக்கியிருக்கிறார் ரிச்சர்டு மன். எட்டுக் கட்டங்களுக்குள் ஒரு கணித சமன்பாட்டையே எழுத வேண்டும். வானிலை வார்த்தைகளை மட்டுமே வைத்து ஒன்று, விமான நிலைய கோடுகளை மட்டுமே வைத்து இன்னொன்று எனப் புதிது புதிதாக வேர்டில்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு வேர்டிலை நீங்களே உருவாக்கி, உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களைச் சோதிக்க வைக்கும் ஆப்சன்களும் வந்துவிட்டன.

Simulation Games

நாம் நம் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை அப்படியே விர்ச்சுவலாக ஒரு கேமுக்குள் கொண்டுவருவதுதான் simulation விளையாட்டுகள். ஒரு விளையாட்டை நாம் எதற்காக விளையாடுகிறோம், வெல்வதற்குத்தானே? ஆனால், வெற்றி என்பது போட்டியில் வெல்வது மட்டும் கிடையாது. ஒரு சிறந்த அணியைத் தேர்வு செய்வது, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது போன்ற நிர்வாகம் சார்ந்த விஷயங்களையும் சேர்த்துதான் வெற்றி என்பது இருக்கிறது. நிறைய sports simulation விளையாட்டுகள் இந்த ரகம். வியூகம் வகுப்பதுடன் இந்த கேம்கள் முடிந்துவிடும். இந்த கேம்களைப் பொறுத்தவரையில் அதுதான் வெற்றி. நிஜ சம்பவங்களில் நாம் ஒரு முடிவை எடுத்துப் பார்த்துவிட்டு ரிவர்ஸ் கியர் போட்டு, மீண்டும் ஆரம்பிக்க முடியாது. அத்தகைய சூழல்களுக்கான வரப்பிரசாதம் இந்த விளையாட்டுகள். நிறைய வாகன simulation விளையாட்டுகள் பிளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு நிகழ்வின் முடிவு என்ன, என்னவாக மாறும் போன்றவற்றை எளிமையாக உருவகப்படுத்திப் பார்க்க முடியும். கல்வியில் தற்போது நிறைய விஷயங்களுக்கு simulation பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாரம் கொஞ்சம் simulation கேம்ஸ் பக்கம் போவோம்.

கேம்ஸ்டர்ஸ் - 27

Plague Inc

உள்ளதிலேயே சற்று குரூரமான சிமுலேட்டர் விளையாட்டு இதுதான். ஒரு வைரஸைக் கண்டுபிடித்து உலகில் உள்ள அனைவரும் அழிக்க வேண்டும். இதுதான் இந்த கேமின் ஒன்லைன். 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வெற்றிநடை போட்டுவருகிறது இந்த கேம். ஆனால், விதிவசத்தால், கொரோனோ வந்தபோது சற்றே திக்குமுக்காடிப் போய்விட்டனர் இந்த கேமைக் கண்டுபிடித்தவர்கள். உலகில் பத்துக் கோடி நபர்களுக்கு மேல், உலகிலுள்ள உயிரினங்களை எப்படி அழிப்பது என simulation-ல் விளையாடிக்கொண்டிருக்க, அதையே நிஜமான வேலையாகப் பார்த்து ஆரம்பித்தது கொரோனா. பிளேக் விளையாட்டைக் கண்டுபிடித்த மினிக்ளிப் நிறுவனம், இந்த விளையாட்டிலேயே அடுத்த அப்டேட்டை வெளியிட்டார்கள். அதுதான் cure. கொரோனாச் சூழல் அடங்கும் வரையில், cure பகுதியை எல்லோருமே இலவசமாக விளையாட முடியும். லாக்டௌன் நடைமுறை, மாஸ்க் அணிவது, மருந்துகளைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பிவைப்பது, தடுப்பூசி கண்டுபிடிப்பது என எல்லாவற்றையும் simulate செய்ய வேண்டும்.

பேஷன்ட் ஜீரோ யார், என்ன வேகத்தில் இந்த வைரஸ் பரவுகிறது போன்றவற்றையும் நாம்தான் கண்டுபிடிக்க முடியும். நாடு இருக்குற நிலைமைல ஒரு விளையாட்டை எவனாவது சீரியஸா எடுத்துக்குவானா என்கிறீர்களா? உலக சுகாதார மையத்தின் அனுபவமிக்க அதிகாரிகளின் துணையுடன்தான் இந்த கேமையே உருவாக்கியிருக்கிறார்கள். “இந்தக் கொரோனாவை விரட்ட நம் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. ஒரு சுவாரஸ்யமான விளையாட்டின் மூலம், மக்களைப் பொய்ச் செய்திகளிலிருந்து காப்பாற்ற முடியும் என்றால் அதையும் செய்யத்தான் வேண்டும்’’ என்கிறார் உலக சுகாதார மையத்தின் ஆண்டி பேட்டின்சன்.

கேம்ஸ்டர்ஸ் - 27

Rollercoaster Tycoon Touch

இந்த சிமுலேட்டரின்படி நாம் ஒரு தீம் பார்க்கை உருவாக்க வேண்டும். தீம் பார்க் பிடிக்காதோர் என யாராவது உண்டா? விதவிதமான ராட்சத விளையாட்டு பொம்மைகளை அடுக்குவது, அதற்கான இடத்தைத் தருவது எனப் பல விஷயங்கள் இந்த rollercoaster tycoon touch-ல் உண்டு.

கேம்ஸ்டர்ஸ் - 27

Pocket City free

இது நகராட்சித் தேர்தல் காலம். தேர்தலில் சீட் கிடைக்காதவர்களும், வருங்கால அரசியல்வாதிகளும் இந்த விளையாட்டை விளையாடிப் பார்க்கலாம். நாம் ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும். நாம்தான் அதன் மேயர். வீடுகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் என எல்லாவற்றையும் நாம்தான் உருவாக்க வேண்டும். பேரிடர் சமயங்களில் நாம் நம் நகரத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்கிற சோதனைகளும் உண்டு. pocket city free கேமில் எந்தவொரு விஷயத்துக்கும் பணம் செலவு செய்யத் தேவையில்லை. நேர விரயம் மட்டும் தான். அதே சமயம், இதன் இன்னொரு வெர்சனை விளையாட பணம் செலுத்த வேண்டும். ஆனால், விளையாடிப் பார்க்க Pocket City free வெர்ஷனே போதுமானது.

கேம்ஸ்டர்ஸ் - 27

BitLife - Life Simulator

பெயருக்கு ஏற்றாற்போலவே bitlife என்பது ஒரு life simulator விளையாட்டு. இந்த விளையாட்டில் நாமொரு குழந்தையாகப் பிறப்பது முதல், வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துக்கும் சில கேள்விகள் கேட்கப்படும். நம் பதில்களுக்கு ஏற்றாற்போல, நாம் சில காலம் பேரன் பேத்திகளுடன் வாழலாம் அல்லது பாதியிலேயே முடித்தும் கொள்ளலாம். சரி, அடுத்த லெவலுக்கு எப்படிப் போவது என்கிறீர்களா. வாழ்ந்த வாழ்விற்குச் சான்றாக பிறந்திருக்கும் குழந்தைகளின் விர்ச்சுவல் உடலுக்குள் புகுந்து விளையாட்டைத் தொடர வேண்டும். வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த கேம் மட்டும் 16+. பிட்லைஃப் விளையாட்டு பயங்கர ஹிட்டாக, அடுத்ததாக doglife, catlife என்றெல்லாம் வெளியிட்டு மிருகங்களின் வாழ்க்கையையும் வாழ்ந்து பாருங்கள் எனக் கிளம்பியிருக்கிறார்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 27

Cooking Simulator Mobile

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ரெசிப்பிகளை வைத்து நாமே இதில் விதவிதமான உணவுகளைச் செய்து பார்க்கலாம். நாம் செய்யும் சிறப்பான சம்பவங்களுக்குப் பின்னர், நமக்கு இன்னும் புதுவிதமான ரெசிப்பிகள் காண்பிக்கப்படும். அதே சமயம் குறிப்பிட்ட நேரத்துக்குள் இவற்றைச் செய்ய வேண்டும். உங்களில் யார் அடுத்த செஃப் தாமு என்பதை இந்த விளையாட்டில் உருவகப்படுத்தி விர்ச்சுவலாக ருசிக்கலாம்.

RFS - Real Flight Simulator

இந்த விளையாட்டில் நாமொரு விமான ஓட்டி. புயல், மழை மோசமான வானிலை எனப் பல்வேறு இடர்களுக்கு இடையே விமானத்தை ஓட்ட வேண்டும். அதே சமயம் ரன்வேயில் விமானத்தை உருட்டுவது, சரியான இடத்தில் பார்க் செய்வது போன்ற சிக்கலான விதிகளும் உண்டு.

Oil Tanker transport

RFS-ல் விமானங்களைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா. இதில் தண்ணி லாரிகளை ஓட்ட வேண்டும். தலைப்பு எண்ணெய் என்று இருக்கின்றதே என்கிறீர்களா. கேம் கண்டுபிடித்தவர்கள் ஊரில் அதிகமாக எண்ணெய் லாரிகள் தான் போகும்போல. நாம் தண்ணீர் என்றே கற்பனை செய்துகொள்வோம். ஒரு இடத்தில் சிந்தாமல் சிதறாமல் லாரிகளை ஓட்டிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான் இந்த கேம்.

- Downloading...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism