Published:Updated:

`சென்னையில் இருக்கும்போதே இதை மறக்காம பண்ணிருங்க ஜின்பிங்..!’ நெட்டிசன்களின் கோரிக்கை

ஜின்பிங்
ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் நெட்டிசன்கள் சார்பாக நாங்கள் ஒரு விண்ணப்பம் வைக்கிறோம்!

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னைக்கு வருகை தருகிறார், சீன அதிபர். இந்த இடைப்பட்ட காலத்தில், உலக அளவில் அரசியல் மட்டுமில்லை, டெக்னாலஜியும் மாறிவிட்டது. பெரும் எழுச்சியும் கண்டுவிட்டது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் மோடி-ஜின்பிங் சந்திப்பு, நிச்சயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாக இருக்கப்போகிறது. அவர்களின் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளால் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சென்னையே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

சீன  அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி
சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி
சீனாவில் Facebook, Whatsapp, Twitter, Instagram என நமக்குத் தெரிந்த பிரபல சமூக வலைத்தளங்கள் அனைத்துமே தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தப் பரபரப்பை டிஜிட்டல் உலகிலும் பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களிலும் ஜின்பிங்கின் வருகையைப் பற்றித்தான் பேச்சு. மோடி-ஜின்பிங் சந்திப்பு எதைப் பற்றியது, என்னென்ன ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன, இரு நாடுகளின் உறவுநிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்றெல்லாம் தீவிர விவாதங்கள் ஒருபக்கம் நடக்க, மறுபுறம் #GoBackModi #WelcomeXinping என ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகிவருகின்றன. இதில், மீம்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், திருவிழா போல இருக்கும் இந்த டிஜிட்டல் ஸ்பேஸில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை எதையும் சீனாவில் இருப்பவர்கள் சட்டபூர்வமாகப் பார்க்கவே முடியாது. ஏனென்றால், அங்கு Facebook, Whatsapp, Twitter, Instagram என நமக்குத் தெரிந்த பிரபல சமூக வலைத்தளங்கள் அனைத்துமே தடைசெய்யப்பட்டுள்ளன.

நமக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால், 'கூகுள் பண்ணிக்கலாம்' என்றே பழகிவிட்ட நிலையில், சீனாவில் கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தடை இருக்கிறது. அந்நாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது Baidu எனும் சர்ச் என்ஜின் தளம்.

தடைசெய்யப்பட்ட சமூக வலைதளங்கள் என எடுத்துக்கொண்டால், உலகின் பிரதான தளங்களான Facebook, Whatsapp, Twitter, Instagram, Youtube, Reddit என நீண்டுகொண்டேபோகிறது பட்டியல். Wechat, Sina WeIbo, Tencent QQ என அவர்களின் நாட்டுக்கே உரிய சமூக வலைதளங்ளைப் பயன்படுத்த மட்டுமே சீனர்களுக்கு அனுமதி.

`அப்புறம் யாருக்காக நாம் டீ ஆத்திக்கொண்டிருக்கிறோம்... சீனர்கள் இந்தத் தளங்களுக்குச் செல்லவே முடியாதா' என நீங்கள் கேட்கலாம்.

Social Media
Social Media

முடியும், நாம் இங்கு எந்தவித கவலையுமின்றி சுதந்திரமாகப் பயன்படுத்தும் இந்த ஆப்களை சீன மக்கள் VPN மூலம் பயன்படுத்துகிறார்கள். ஆனால், Twitter-ல் நம்மைப் போல #gobackjinping என VPN-ல் கூட டிரெண்டு செய்வது ஆபத்துதான். ஏனென்றால், 'கருத்து சுதந்திரமா... அப்படினா என்ன?' என்று கேட்கும் சீன அரசாங்கம். சீனாவில் கருத்துச் சுதந்திரம் என்பது உரிமை இல்லை, ஒரு சலுகை. அதுவும் மிகச்சிறிய அளவிலான சலுகை.

ஏன் இவ்வளவு இணையதளங்களுக்கு தடை எனக் கேட்டால், அந்நாட்டின் 1997–ல் அமல்படுத்தப்பட்ட இன்டர்நெட் பாதுகாப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி, நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு, நல்லிணக்கம், வளர்ச்சி எனப் பலவற்றை கருத்தில்கொண்டே இதை அமல்படுத்தியதாகச் சொல்கிறது சீன அரசு.

அப்படியென்றால், சீனா மக்கள் செய்திகளை அறிந்துகொள்வது எப்படி? இன்றைய மோடி-ஜின்பிங் சந்திப்பையே எடுத்துக்கொள்வோம். அவர்களின் சந்திப்பு பற்றிய செய்திகள் உடனுக்குடன் ப்ரேக்கிங் நியூஸாக நம்மை வந்தடையும். சந்திப்பு பற்றிய மீம்கள் அதைவிடவும் விரைவாக நம்மை எட்டும். ஆனால், சீனாவில் அப்படியிருக்காது. ஒற்றைக் கட்சி ஜனநாயக நாடாக இருக்கும் சீனாவைப் பொறுத்தவரை செய்திகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு, அரசுக்கு சாதகமாகவே மக்களிடம் எடுத்துச்செல்கின்றன.

மோடி- ஜின்பிங் என்னவெல்லாம் விவாதிக்கக்கூடும்?- பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்

இதெல்லாம் தெரிந்தால், “நீங்கள்லாம் ரொம்பப் பாவம்டா. உங்களால மீம் போடமுடியலனா என்ன, எங்க ஊருக்கு வர்றாரு உங்க அதிபர். நாங்க நல்லா பாத்துக்கிட மாட்டோமா, உங்களுக்கும் சேர்த்து நாங்க மீம் போடுறோம்” என இந்நேரம் ஒரு புது ஹேஷ்டாக் தொடங்கியிருப்பான் மீம் கிரியேட்டர் தமிழன்.

அதனால், ஜின்பிங்கிடம் நெட்டிசன்கள் சார்பாக ஒரு விண்ணப்பம் வைக்கிறோம். உங்களை வரவேற்பதாக சமூக வலைதளங்களில் எங்கள் மக்கள் செய்த அலப்பறைகளை சீனாவுக்கு செல்லும் முன் சென்னையிலேயே ஏதேனும் வைஃபையில் கனெக்ட் செய்து பார்த்துவிட்டுச் செல்லுங்கள்... மிஸ் செய்துவிடாதீர்கள்!

அடுத்த கட்டுரைக்கு