Election bannerElection banner
Published:Updated:

ராகுல் காந்தி ட்வீட், பிரெஞ்ச் ஹேக்கர், ப்ரைவஸி சிக்கல்... தொடரும் ஆரோக்கிய சேது சர்ச்சைகள்!#FullAnalysis

தொடரும் ஆரோக்கிய சேது பஞ்சாயத்துகள்!
தொடரும் ஆரோக்கிய சேது பஞ்சாயத்துகள்!

நிச்சயம் இந்த டெக்னாலஜி யுகத்தில் தொழில்நுட்பம் கொண்டு நல்லதொரு தீர்வைக் கண்டுபிடிக்க முயல்வது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அது சரியான முறையில் செய்யப்படவேண்டும். ஆரோக்கிய சேது குறித்து அதில்தான் பல குழப்பங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் கையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முதற்கட்டமாக மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டியது அவசியம் என நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அதற்கு முன்பு யாரையெல்லாம் சந்தித்தார், யாரிடமிருந்து அவருக்குத் தொற்று பரவியது, அவரால் யாருக்கெல்லாம் தொற்று பரவியிருக்கலாம் என்பதைக் கண்டறியும் 'கான்டாக்ட் டிரேஸிங்' பணிகளை தொடங்கியது அரசு தரப்பு.

`கான்டாக்ட் டிரேஸிங்'
தனிமைப்படுத்துதல் மற்றும் டெஸ்டிங் அளவிற்கு இதுவும் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கியப் பங்காற்றி வருகிறது

ஒவ்வொரு நாட்டிலும் இந்த கான்டாக்ட் டிரேஸிங் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பல நாடுகளைப் போல நம் அரசும் டெக்னாலஜியின் துணையை நாடியது. அதன்படி ஏப்ரல் 2-ஆம் தேதி 'ஆரோக்கிய சேது' செயலியை வெளியிட்டது அரசு. பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, செயலி வெளியிடப்பட்ட 13 நாள்களிலேயே 5 கோடி பயனர்கள் இதைத் தரவிறக்கம் செய்தனர். தற்போது வரை செயலியை 9 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர்.

இந்தச் செயலியின் மூலம் கான்டாக்ட் டிரேஸிங் மட்டுமல்லாமல், கொரோனாவிற்கான அறிகுறிகள் இருக்கிறதா என சுய பரிசோதனை செய்து கொள்வது, கொரோனா பாதித்த நபருக்கு அருகில் சென்றோமோ எனக் கண்காணிப்பது, தற்போது வரை இந்தியாவில் எத்தனை பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் தருவது எனக் கொரோனா குறித்த அனைத்திற்கும் ஆல்ரவுண்டராக இந்தச் செயலியை உருவாக்கியிருந்தது மத்திய அரசு. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பலரும் இதைக் கண்டிப்பாகத் தரவிறக்கம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது அரசு.

ஆரோக்கிய சேது
ஆரோக்கிய சேது

இது நல்ல விஷயம்தானே என்கிறீர்களா... ஆம் நிச்சயம் இந்த டெக்னாலஜி யுகத்தில் தொழில்நுட்பம் கொண்டு நல்லதொரு தீர்வைக் கண்டுபிடிக்க முயல்வது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அது சரியான முறையில் செய்யப்படவேண்டும். ஆரோக்கிய சேது குறித்து அதில்தான் பல குழப்பங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

ராகுல் காந்தி சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்டில் "இது தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட மேம்பட்ட கண்காணிப்பு அமைப்பு. இதை ஒழுங்காக நிர்வகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் தகவல் பாதுகாப்பு மற்றும் பிரைவசி குறித்த சந்தேகங்கள் எழுகின்றன. தொழில்நுட்பம் மக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர இப்படி குடிமக்களை மறைமுகமாக அவர்களுக்கே தெரியாமல் கண்காணிக்கப் பயன்படக்கூடாது" என்று தெரிவித்திருந்தார். இது குறித்து விரிவாகக் கீழ்க்காணும் கட்டுரையில் படியுங்கள்!

`ஆரோக்கிய சேது; சந்தேகம் எழுப்பும் ராகுல்...விளக்கமளித்த மத்திய அமைச்சர்!’ - ட்விட்டர் போர்

ஆரோக்கிய சேதுவில் அப்படியென்ன பிரைவசி மீறல் இருக்கிறது?

ஆரோக்கிய சேது செயலி வெளியிடப்பட்டதிலிருந்தே, அது சேகரிக்கும் தகவல்கள், அந்தத் தகவல்கள் சேமிக்கப்படும் முறைகள், அந்தத் தகவல்கள் எந்த எல்லை வரை பயன்படுத்தப்படும், எவ்வளவு நாள்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பவை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆரோக்கிய சேது செயலியானது, நாம் எந்தெந்த இடங்களுக்குச் செல்கிறோம் என்பதை GPS மற்றும் Bluetooth உதவியுடன் பெறுகின்றன. செயலியில் சுயபரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. செயலியில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுதான் அந்த சுயபரிசோதனை முறை.

இந்த சுய பரிசோதனை முறையிலோ அல்லது நாம் கொரோனா பாதித்த நபருடனோ தொடர்பிலிருந்து நமக்குக் கொரோனா பாதிப்பு இருக்கிறது என உறுதியாகும் வரை நம் லோகேஷன் டேட்டாவானது நமது மொபைலிலேயே சேமிக்கப்பட்டு வரும், நமக்குக் கொரோனா இருப்பது உறுதியானால் அந்தத் தகவல்கள் யாவும் National Information Centre-ன் கிளவுட் சர்வரில் பதிவேற்றப்படும் எனச் செயலியின் செயல்முறை பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் பாதுகாப்பிற்கான முறையான சட்டங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் நம்மிடம் பெறும் தகவல்களை எதிர்காலத்தில் நமக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் எந்தெந்த துறைகள் நம்மிடம் இருந்து பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தும் என்பதும் செயலியில் குறிப்பிடப்படவில்லை.

இதுபோன்ற பொதுவான நடைமுறைகள் பற்றி மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு எந்தெந்த தகவல்கள் சேகரிக்கப்படும், எந்தெந்த தகவல்கள் சேகரிக்கப்படாது, கிளவுட் சர்வரில் தகவல்களைச் சேகரிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றித் தெளிவாகக் கூறப்படவில்லை. மேலும் தகவல் பாதுகாப்பிற்கான முறையான சட்டங்கள் இந்தியாவில் இல்லை, இதனால் நம்மிடம் பெறும் தகவல்களை எதிர்காலத்தில் நமக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் எந்தெந்த துறைகள் நம்மிடம் இருந்து பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தும் என்பதும் செயலியில் குறிப்பிடப்படவில்லை. கொரோனாவைத் தடுப்பதற்காக மட்டுமே இந்தச் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறதெனில், சுகாதாரத் துறை மட்டுமே இதில் பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தும் என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அப்படி எந்தக் குறிப்பும் செயலியின் தனியுரிமைக் கொள்கையில் இல்லை. இதுபோன்ற பல தகவல் குறைபாடுகள்தான், அரசு செயலியில் சேகரிக்கப்படும் தகவல்களை எப்படிப் பயன்படுத்தும் என்ற கேள்வியை எழுப்புகின்றன.

ஆரோக்கிய சேது!
ஆரோக்கிய சேது!
’ஆரோக்கிய சேது செயலி GPS தகவல்களைக் கேட்பதற்கான காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்ட எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதுதான். அதன் மூலம் புதிய இடத்தில் அதிகமாக நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.’
அர்னப் குமார், நிதி ஆயோக் Frontier Technologies திட்ட இயக்குநர்

’ஆரோக்கிய சேது செயலி GPS தகவல்களைக் கேட்பதற்கான காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்ட எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதுதான். அதன் மூலம் புதிய இடத்தில் அதிகமாக நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இதன் மூலம் தனிப்பட்ட நபர்கள் இருப்பிடம் குறித்த தகவல்களைச் சேகரிக்கவில்லை, குழுவாகத்தான் இருப்பிடம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன’ எனத் தெரிவித்திருக்கிறார் நிதி ஆயோக்கின் Frontier Technologies-ன் திட்ட இயக்குநரான அர்னப் குமார் (Arnab Kumar). ஆரோக்கிய சேது செயலியில் இருக்கும் பிரச்னைகள் குறித்த அறிக்கை ஒன்றை, இந்தியாவின் Internet Freedom Foundation (IFF) அமைப்பு வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து இணையம் மற்றும் டேட்டா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குரல் எழுப்பிவரும் இந்த அமைப்பு வெளியிட்ட அந்த அறிக்கையில், கொரோனாவை மையமாகக் கொண்டு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் இருக்கும் பிரைவசி பிரச்னைகள் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. அறிக்கையைப் படிக்க.

ஆரோக்கிய சேது v பிரெஞ்சு ஹேக்கர்!
செயலியில் தொழில்நுட்பக் கோளாறு இருக்கிறதா?

ப்ரைவஸி சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டாலும், ஆரோக்கிய சேது செயலியில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக இதுவரை யாரும் குற்றம் சுமத்தவில்லை. ஆனால், சில நாள்களுக்கு முன் எலியட் ஆல்டர்சன் (Elliot Alderson) என்ற புனைபெயருடன் இயங்கும் பிரெஞ்சு எதிக்கல் ஹேக்கர், ஆரோக்கிய சேதுவில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதாகவும், 9 கோடி பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பில்லாமல்தான் இருக்கிறது. தன்னைத் தொடர்பு கொண்டால் அது குறித்து தகவல்களை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இவர்தான் ஆதாரில் இருக்கும் கோளாறுகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஆரோக்கிய சேதுவை நிர்வகிக்கும் National Informatics Centre அவரைத் தொடர்பு கொண்டதாகவும், செயலியில் இருக்கும் குறைபாடுகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் அவரே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதில் தரும் வகையில் நேற்று ஆரோக்கிய சேது செயலியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து தகவல் பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டது.

அதில் இருப்பிடம் பற்றிப் பெறப்படும் தகவல்கள் யாவும் செயலியில் முன்னர் குறிப்பிட்டிருந்தது போலவே குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே பெறப்படும். செயலியில் பெறப்படும் தகவல்கள் யாவும் பாதுகாப்பாகவே உள்ளன. எந்த விதமான தகவல் திருட்டும் செயலியின் மூலம் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சேது விளக்கம்!
ஆரோக்கிய சேது விளக்கம்!

ஆரோக்கிய சேதுவின் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக 'எந்த விதமான டெக்னிகல் குறைபாடுகளும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறீர்கள், பார்க்கலாம்' எனச் சவால் விடும் தொனியில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் எலியட் ஆல்டர்சன். அதனைத் தொடர்ந்து, ’ஆரோக்கிய சேதுவில் இருக்கும் குறைபாடுகளை வெளிப்படையாகத் தெரியப்படுத்துகிறேன்’ என்னும் நோக்கில் பல ட்விட்டர் பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார்.

'பிரதமர் அலுவலகத்தை சுற்றி இத்தனை பேருக்குப் பாதிப்பு!'

நேற்று கோளாறுகளைச் சுட்டிக்காட்டும் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் அந்த ஹேக்கர். மிகவும் டெக்னிக்கலாக விஷயம் என்னவென்று சுருக்கமாகப் பார்க்கவேண்டும் என்றால், ஏப்ரல் 4-ம் தேதி ஆரோக்கிய சேதுவின் முதல் வெர்ஷன் வெளியிடப்பட்டது. அதை டெஸ்ட் செய்து பார்த்த அவர், எளிதாக ஒரு நபரின் போனில் இருக்கும் ஆரோக்கிய சேது செயலியின் லோக்கல் டேட்டாபேஸ்ஸை எளிதாகப் பார்க்கமுடிந்தது எனத் தெரிவித்திருக்கிறார். இருப்பிடம் தொடங்கி அனைத்து தகவலும் அங்குதான் பதிவாகும். இது அடுத்த வெர்ஷனில் சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வெர்ஷனில் (v1.1.1) இருக்கும் மற்றொரு ஓட்டையையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

ஆரோக்கிய சேது செயல்பாடு!
ஆரோக்கிய சேது செயல்பாடு!

ஆரோக்கிய சேது செயலியில் உங்கள் இருப்பிடத்திலிருந்து குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், யாரெல்லாம் அறிகுறிகளுடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் ஆரோக்கிய சேது பயன்படுத்துகிறார்கள் எனப் பார்க்கமுடியும். இதற்கு 500 m, 1 Km, 2 Km, 5 Km, 10 Km என்ற ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்வு செய்ய முடியும். இது எப்படி வேலை செய்கிறது எனப் பார்த்து உள்நுழைந்த எலியட் ஆல்டர்சன் இதில் ஒரு ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.

அதை வைத்து நீங்கள் தேவைப்படும் லொகேஷனைக் கொடுத்து அதைச் சுற்றி தேவையான தூரத்தைக் கொடுத்து அந்தச் சுற்றளவு பகுதியில் என்ன நிலவரம் என்று உங்களால் தகவலைப் பெறமுடியும். அப்படி பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், பாராளுமன்றம், இந்திய ராணுவ தலைமையகம் ஆகிய முக்கிய இடங்களைச் சுற்றிய 500 மீட்டர்களில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், யாருக்கெல்லாம் அறிகுறிகள் இருக்கிறது என்ற தகவலைப் பெற்றிருக்கிறார் அவர்.

ஆரோக்கிய சேதுவிலிருந்து பெறப்பட்ட தகவல்!
ஆரோக்கிய சேதுவிலிருந்து பெறப்பட்ட தகவல்!
`கொரோனா பெயரில் ஹேக்கிங்!’ - தடுக்கக் கைகோக்கும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்

'ஹேக்கிங்கோ, தனியுரிமை மீறலோ எதுவுமே இல்லை'

இதற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறது ஆரோக்கிய சேது டீம். "ஆரோக்கிய சேது செயலியில் ஹேக்கிங்கோ, தனியுரிமைக் கொள்கை மீறலோ எதுவுமே நடக்கவில்லை. லொகேஷன் தகவலை மட்டும் மாற்றிக் கொடுத்து அதை ஹேக் என்று சிலர் சொல்கிறார்கள். அதைக் குறிப்பிட்ட அந்த லொகேஷனில் இருக்கும் எவராலும் பார்க்க முடியும். அது ஏற்கெனவே பொதுவெளியில் இருக்கும் டேட்டாதான். அதை ஹேக் செய்துவிட்டேன் எனக் கூறுவது கத்துக்குட்டியின் வேலையாகவே பார்க்கமுடிகிறது" என்று தெரிவித்திருக்கிறது அந்தக் குழு. மேலும் ஆப்பில் குறிப்பிட்டிருக்கும் 500 m, 1 Km, 2 Km, 5 Km, 10 Km ஆகிய அளவீடுகளுக்கு மட்டுமே டேட்டாவை உங்களால் எடுக்க முடியும். வேறு என்ன கொடுத்தாலும் 1 Km சுற்றளவுக்கான டேட்டாதான் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இதற்கு அந்த ஹேக்கர், "எனக்கு கத்துக்குட்டியின் அர்த்தம் நன்றாகத் தெரியும். இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து இந்திய அரசின் இணையதளங்களில் இருக்கும் பிரச்னைகளைக் கண்டறிந்து எடுத்துக்கூறி வருகிறேன். அரசுதான் உண்மையில் கத்துக்குட்டி" எனத் தெரிவித்துள்ளார்.

Triangulation சிக்கல்:

இந்த விஷயத்தில் அரசு தரப்பில் சொல்லப்படுவது ஓரளவுக்குச் சரிதான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் யார்வேண்டுமானாலும் அந்த இடத்தைச் சுற்றி யாரெல்லாம் பாதித்திருக்கிறார்கள் என நிச்சயம் பார்க்கமுடியும். அது பொதுவெளியில் இருக்கும் டேட்டாதான். ஆனால் இப்படி அதை யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்ற சூழல் ஆபத்தானது. அதை வைத்தே நீங்கள் சந்தேகிக்கும் நபருக்குக் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதற்கு Triangulation என்ற முறையைப் பின்பற்ற முடியும். அந்தக் கணிப்புகளை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் நபருக்குக் கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறிய முடியும். இது எல்லா நேரங்களிலும் சரிப்பட்டுவராது என்றாலும், ஒரு பகுதியில் மிகவும் குறைந்த அளவிலான பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருந்தால் யாருக்கு இருக்கிறது என்பதை இதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர். இதற்கு நீங்கள் அந்தப் பகுதியில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்தும் இதை உங்களால் செய்ய முடியும்.

Triangulation
Triangulation
Wired

இந்த 'Triangulation' முறை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்:

https://www.wired.com/story/india-covid-19-contract-tracing-app-patient-location-privacy/

#OpenSourceAarogyaSetu
இணையச் செயற்பாட்டளர்களின் குரல்!

உலகில் பல நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. அந்த நாடுகளிலும் 'கான்டக்ட் ட்ரேஸிங்'கிற்குப் பெருமளவில் தொழில்நுட்பத்தையே நம்பியிருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் அப்படியும் தனிநபர் பிரைவசி விதிமுறைகளை மீறவில்லை. நாடுகள் பலவும் கான்டக்ட் ட்ரேஸிங்'கிற்குப் பயன்படுத்தும் செயலியின் சோர்ஸ் கோடை (Source Code) வெளிப்படையாக வெளியிட்டிருக்கின்றன. அவ்வாறு ஆரோக்கிய சேது செயலியின் சோர்ஸ் கோடையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்பதே இங்கிருக்கும் இணையச் செயற்பாட்டாளர்களின் கோரிக்கை. #OpenSourceAarogyaSetu என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் டிரெண்ட்டானது. அப்படிச் செய்யும்போதுதான் டேட்டா எப்படிக் கையாளப்படுகிறது என்ற வெளிப்படைத்தன்மை இருக்கும் என்பதே அவர்களின் கோரிக்கை. ஆனால், ’சோர்ஸ் கோடை வெளியிடுவதில் கவனத்தைச் செலுத்துவதை விடச் செயலியை இன்னும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்’ என அர்னப் குமார் தெரிவித்திருக்கிறார்.

#OpenSourceAarogyaSetu
#OpenSourceAarogyaSetu

இத்தனை கோடி மக்களிடமிருந்து என்னென்ன தகவல்கள் பெறப்படுகின்றன, அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன, என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் அந்த மக்களுக்குத் தரப்படவேண்டியது அவசியம். அதுவும் கட்டாயம் பதிவிறக்க வேண்டும் என்று சொல்லும் சூழலில் வெளிப்படைத்தன்மை அவசியம். அது அவர்களது உரிமையும் கூட! அந்த வெளிப்படைத்தன்மை இல்லாததால்தான் திடீரென ஒரு ஹேக்கர் சொல்வதைக் கேட்டு சந்தேகம் கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

இன்னும் ஆரோக்கிய சேதுவை முழுமையாக நிர்வகிப்பது யார், மேலே குறிப்பிட்ட விளக்கங்கள் கொடுத்தது யார் எனப் பல கேள்விகளுக்குத் தெளிவான விடையில்லை!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு