Published:Updated:

`இனி அனைத்து ஸ்மார்ட் போனிலும் கட்டாயம்’ -'ஆரோக்கிய சேது' செயலி தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'ஆரோக்கிய சேது' செயலி இனி அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதில், டெக்னாலஜியின் பங்கு மிக முக்கியமானது. அரசு அறிவிக்கும் தகவல்களையும் மருத்துவர்கள் கூறும் உடல்நல ஆலோசனைகளையும் இந்த ஊரடங்கில் நம்மிடம் எளிதில் கொண்டுவந்து சேர்க்கிறது.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

கொரோனா பரவலைத் தடுக்க, இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'National Disaster Management Authority'-ன் மூலம் வெளியிடப்பட்ட செயலிதான், 'ஆரோக்கிய சேது'. தற்போது, இந்தியாவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தச் செயலி, மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்தது.

இந்தச் செயலி, GPS மற்றும் Bluetooth-ன் சேவையைக் கொண்டு செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது. எவ்வளவு அதிகமான மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு, இனி புதிதாக உருவாக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

தற்போது, அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தயாரிப்பை நிறுத்திவைத்திருக்கும் நிலையில், மீண்டும் தயாரிப்பை தொடங்கும்போது இந்த அறிவிப்பைக்கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இன்றியமையாத ஓர் கருவியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இச்செயலியின் பயன்பாடு, வருங்காலத்தில் இ-பாஸாக (e-pass) ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க உதவும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 பரவுவதைத் தடுக்க ஆரோக்கிய சேது ஆப்பை பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இந்த வார தொடக்கத்தில், அனைத்து மாநில முதல்வர்களுடனான சந்திப்பில், 'ஆரோக்கிய சேது' செயலியைப் பிரபலப்படுத்துவது பற்றி ஆலோசனையும் மேற்கொண்டார் பிரதமர்.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

மேலும், பதிவிறக்கங்களை அதிகப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படி முதல்வர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் எவ்வாறு இதுபோன்ற செயலிகளின் உதவியோடு வெற்றிபெற்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் முதல்நிலை முதல், கடைநிலை ஊழியர்கள் வரை இச்செயலியைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

`கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால்..!’ - மத்திய அரசின் `ஆரோக்கிய சேது' செயலி

அலுவலகத்துக்கு வருமுன், செயலியில் 'safe' (பாதுகாப்பு) அல்லது 'low risk' (குறைந்த ஆபத்து) என்பதை காட்டுவதை உறுதி செய்த பின்னரே அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்செயலியின் பயன்பாடு இருப்பிடத் தரவு உள்ளிட்ட சில பயனர்களின் தரவை YouTube க்கு அம்பலப்படுத்தியது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் எழுதியபோது, பாதுகாப்பு குறைந்த அம்சம் வெளிவந்தது. இருப்பினும், அக்குறைப்பாடு தற்போது சரிசெய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு