Published:Updated:

PUBG-க்கு மாற்றாகுமா FAU-G? அக்ஷய் குமார் அறிமுகப்படுத்திய `தற்சார்பு இந்தியா' கேம்!

FAU-G vs PUBG
FAU-G vs PUBG

இந்த கேமின் வருமானத்தில் 20% ராணுவ வீரர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் 'பாரத் கீ வீர்' டிரஸ்ட்டுக்கு செல்லும் என்பதும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு சீன-இந்திய உறவு என்பது ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு ஜூன் மாத இறுதியில் டிக் டாக் உள்பட 59 சீன ஆப்களை தடைசெய்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் லடாக் எல்லைப் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவிவரும் சூழலில் கூடுதலாக 118 ஆப்களைத் தடைசெய்வதாக நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறது அரசு. இதில் பிரபல மொபைல் கேம்மான PUBG-ன் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

ரசிகர்கள் பலரும் மாற்று கேம்கள் என்ன இருக்கிறதென தேடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஒரு ஷூட்டர் கேம் விரைவில் வரவிருக்கிறதாம். இதுகுறித்து நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டிருக்கிறார். 'Fearless And United Guards' என்பதைச் சுருக்கமாக FAU-G என அழைக்கிறார்கள். இதை பெங்களூரை சேர்ந்த nCore games என்ற இந்திய கேமிங் ஸ்டூடியோ வடிவமைத்துவருகிறது. பிரதமர் 'தற்சார்பு இந்தியா' கொள்கையை நிலைநிறுத்தும் இந்த கேம் பொழுதுபோக்காக மட்டும் இருக்காது. நமது இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் சொல்லிக்கொடுக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் அக்ஷய் குமார். இவரது மேற்பார்வையில்தான் கேம் உருவாகுமாம். இந்த கேமின் வருமானத்தில் 20% ராணுவ வீரர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் 'பாரத் கீ வீர்' டிரஸ்ட்டுக்கு செல்லும் என்பதும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

PUBG உட்பட 118 ஆப்களுக்குத் தடை... பின்னணி என்ன, மீண்டும் வருமா?

இந்த கேம்மில் PUBG போன்று Battle Royale மோடும் இருக்கும் மல்டிபிளேயர் ஷூட்டரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது வெளிவரும் என்பது போன்ற தகவல்கள் எதுவும் இல்லை. PUBG-ன் தடை என்பது இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. டிக் டாக் தடைக்குப் பிறகு இதே போன்று பல இந்திய மாற்றுச் செயலிகள் முன்வைக்கப்பட்டன. இருந்தும் எதுவும் டிக் டாக் அளவுக்கு வைரலாகவில்லை. சொல்லப்போனால் இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் மட்டும்தான் ஓரளவு ஹிட்டாகியிருக்கிறது. அதுவும் இந்தியத் தயாரிப்பு கிடையாது.

பப்ஜி | Pubg
பப்ஜி | Pubg

இப்படிதான் ஜூம்மின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஜியோ மீட் அறிமுகமானது. ஆனால் அது ஜூம் ஆப்பின் அப்பட்டமான காப்பி எனப் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இப்படி வாய்ப்புகள் உருவானாலும் அதை முழுவதுமாக பயன்படுத்தத் தவறிவருகின்றன இந்திய நிறுவனங்கள். PUBG விஷயத்தில் ஏற்கெனவே ஃப்ரீ ஃபயர், COD மொபைல் எனப் பல கேம்ஸ் இருக்கின்றன. இவற்றைத் தாண்டி FAU:G மக்களை ஈர்க்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு