Published:Updated:

`உங்கள் பொருள்மீது உங்களுக்கு உரிமை இருக்கிறதா?'- ஆப்பிள் எதிர்க்கும் #RightToRepair போராட்ட பின்னணி

ரைட் டு ரிப்பேர்
ரைட் டு ரிப்பேர்

நுகர்வோர்களாகிய நாமே நம் பொருள்களைப் பழுது பார்த்துக் கொள்வதற்கான உரிமை வேண்டும். ஆனால், இதை உற்பத்தியாளர்கள் அவ்வளவு எளிதாக வைக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு சின்ன கேள்வியோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். இந்தியா முழுக்க லாக்டெளன் படுதீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், உங்கள் ஸ்மார்ட் போன் கைதவறிக் கீழே விழுந்து திரை உடைந்துவிடுகிறது. என்ன செய்வீர்கள்? ஒன்றும் தெரியாத, தொடுதிரையில் எதைத் தொடுவது, எப்படி இயக்குவது?

நீங்கள் ஒரு பொருளை வாங்குகிறீர்கள். அது உங்களுடையது, அது பழுதானால் நீங்களே சரி செய்வதும் அதைச் சரி செய்ய ஒருவரை நாடுவதும் உங்கள் முடிவைப் பொருத்ததுதான். ஆனால், அந்த இரண்டுக்குமான வசதிகளை உற்பத்தியாளர்கள் கொடுக்க வேண்டும்.
நாதன் ப்ரோக்டார் (Nathan Proctor), ரைட் டு ரிப்பேர் இயக்கம்

ஒன்று, அதைச் சரி செய்தாக வேண்டும் அல்லது வேறொன்றைப் புதிதாக வாங்கியாக வேண்டும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்கவே திண்டாட வேண்டிய இந்தச் சூழலில் புது கைபேசியை எங்கென்று வாங்குவது! சரி பழுதாவது பார்க்கலாம் என்றால், சாதாரண நாள்களிலேயே ஸ்மார்ட் போன் பழுது பார்க்க அந்தந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களைத் தேடி அலைய வேண்டும். எளிதில் அணுகும் தூரத்தில் இருப்பதில்லை. அதோடு செலவும் அதிகமல்லவா. பிறகு, எங்கிருந்து இந்த லாக்டெளன் நேரத்தில் பழுதுபார்ப்பது? இந்தச் சிக்கல்களை மையப்படுத்திய போராட்டம்தான் 'ரைட் டு ரிப்பேர்'. அதாவது நம் பொருள்களை நாமே பழுது பார்த்துக்கொள்வதற்கான உரிமை.

சரி, இப்போது கட்டுரைக்குள் செல்வோம்...

ஒருமுறை உங்களைச் சுற்றியுள்ள பொருள்களைக் கண்களால் அலசுங்கள். அவற்றில் எத்தனை பொருள்களை, உடைந்தாலோ, பழுதடைந்தாலோ உங்களாலேயே சரி செய்துவிட முடியும்? குறைந்தபட்சம் உங்கள் கைப்பேசி, கணினி போன்றவற்றை எப்படிப் பழுது பார்ப்பது என்றாவது தெரியுமா?

உங்கள் பொருள்களைப் பழுதுபார்க்க ஆகும் செலவு, பழுதான பாகத்தையே புதிதாக வாங்குவதற்கு ஆகும் செலவைவிடக் குறைவு என்றால் என்ன செய்வீர்கள்?

நுகர்வோர்
நுகர்வோர்

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதுதான் 'பழுது பார்க்கும் உரிமை (Right to Repair) கோருவோரின் மையப் புள்ளி. அதாவது நுகர்வோர்களாகிய நாமே நம் பொருள்களைப் பழுது பார்த்துக்கொள்வதற்கான உரிமை வேண்டும். ஆனால், இதை உற்பத்தியாளர்கள் அவ்வளவு எளிதாக வைக்கவில்லை. அவர்களிடம் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகளிடம்தான் பழுதுபார்க்க முடியும் என்ற சூழலே தற்போது நிலவுகிறது. அது அவ்வளவு மலிவாகவும் இருப்பதில்லை.

அமெரிக்க செனடர் எலிசபத் வாரனிடமிருந்துதான் இந்தப் பேச்சு வேகமெடுத்தது. அவரும் இன்னொரு செனடரான பெர்னி சாண்டர்ஸும் 'பழுது பார்க்கும் உரிமைக்கான சட்டம்' கொண்டுவரவே முன்மொழிந்தார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில், ஐரோப்பிய ஒன்றியம் புதிய சட்டங்களைக் கொண்டு வந்தது. அதன்படி, 2021-ம் ஆண்டிலிருந்து உற்பத்தியாளர்கள் நீண்ட நாள்களுக்குச் செயல்படக்கூடிய பொருள்களையே உற்பத்தி செய்ய வேண்டும். அதோடு, அவற்றுக்கான உதிரி பாகங்களை உற்பத்தித் தேதியிலிருந்து 10 ஆண்டுகள் வரை தயாரிக்க வேண்டும் என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சட்டம் ஒளியூட்டும் பொருள்களான டியூப் லைட் போன்றவை மற்றும் வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், குளிர்சாதனப்பெட்டி போன்ற பொருள்களுக்குப் பொருந்தும். ஆனால், இந்த 'ரைட் டு ரிபேர்' என்ற உரிமைக்காகப் போராடுபவர்கள், தங்கள் பொருள்களைத் தாங்களே பழுது பார்ப்பதற்கான உரிமைகளைக் கேட்கின்றனர்.

தெற்காசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வாங்கும் பொருள்கள் அவற்றின் உத்தரவாதக் கெடுவைத் (warranty) தாண்டியவுடனே பழுதாகி விடுவதாகப் புகார் தெரிவித்திருந்தார்கள். அப்படி நடக்கும்போது, இயந்திரங்களை நுகர்வோர்களால் சரி செய்ய முடிவதில்லை. அதேநேரம் அவற்றை நியாயமான விலையில் சரி செய்ய யாரும் கிடைப்பதில்லை. ஆகவே, வேறு வழியின்றி அந்தப் பொருளை மாற்றிவிட்டுப் புதியதை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மிகச் சரியாகக் கெடு முடிந்தவுடன் பழுதாகுமாறுதான் உற்பத்தியாளர்கள் தயாரிக்கிறார்கள் என்பதுதான் இப்படிப் பாதிக்கப்பட்டுப் புகாரளித்த நுகர்வோர்களின் குற்றச்சாட்டு.

பழுது பார்த்தல்
பழுது பார்த்தல்
Vikatan

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு ரைட் டு ரிப்பேர் என்று தனியாக ஒரு சட்டம் அவசியமே இல்லை என்று எதிர்க்கின்றன ஆப்பிள் உட்பட பல நிறுவனங்கள்.

"நாங்கள் ஏற்கெனவே வாடிக்கையாளர்களுக்கு பழுதுபார்க்கும் உரிமையை வழங்கியுள்ளோம். எங்கள் பொருளை மாற்றி வடிவமைத்துக்கொள்ளும் உரிமையைத்தான் மறுக்கிறோம்" என்கிறது வேர்ஹெம் (Wareham) என்ற விவசாய இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம். மூன்றாவது நபர்களுக்கும் பயனர்களுக்கும் ஆப்பிள் பொருள்களைப் பழுது பார்க்கும் உரிமையை வழங்குவதன் மூலம், தங்கள் பொருள்களின் பிரைவசியை, பயனர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதோடு, தீய செயல்களுக்குப் பாலம் அமைத்துக் கொடுப்பது போலாகிவிடும் என்று கூறி, ஆப்பிள் நிறுவனம் ரைட் டு ரிப்பேரை எதிர்க்கின்றது. ஆப்பிள் மட்டுமன்றி, வெரிசான், டொயோடா, கேட்டர்பில்லர், மெட்டிரானிக் போன்ற பெருநிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பழுது பார்க்கும் உரிமையை அளிக்க மறுக்கின்றனர்.

"பழுது பார்க்கும் உரிமை என்பது ஒவ்வொரு தனிமனிதரின் விருப்பத் தேர்வுதான். கைப்பேசி, கணினி, ஃப்ரிட்ஜ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நீங்கள் ஒரு பொருளை வாங்குகிறீர்கள். அது உங்களுடையது, அது பழுதானால் நீங்களே சரி செய்வதும் அதைச் சரி செய்ய ஒருவரை நாடுவதும் உங்கள் முடிவைப் பொருத்ததுதான். ஆனால், அந்த இரண்டிற்குமான வசதிகளை உற்பத்தியாளர்கள் கொடுக்க வேண்டும். பழுது பார்க்க வெளியே நாடும்போதும்கூட அதற்கு ஆகும் செலவு நியாயமாக இருக்க வேண்டும். பொருளின் விலையை ஒத்த செலவை வைக்கக் கூடாது" என்கிறார் ரைட் டு ரிப்பேர் இயக்கத்தைச் சேர்ந்த நாதன் ப்ரோக்டார் (Nathan Proctor).

நம் பொருள்கள் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
கைல் வியென்ஸ் (Kyle Wiens), தலைமைச் செயல் அலுவலர் (CEO), ஐஃபிக்ஸிட் (iFixit)

நடைமுறையிலும் அவர் சொல்வதுபோல் மலிவாகப் பழுது பார்க்கும் ஏஜென்டுகளோ அதைச் செய்யத் தேவையான உதிரி பாகங்கள், பொருள் குறித்த தகவல்கள், கருவிகள், பழுது பார்க்கத் தேவைப்படும் மென்பொருள் என்று அனைத்தும் பாதுகாப்பாக, தரமாக, எளிமையாக நுகர்வோர்கள் அணுகும்படி இருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை என்பதுதான் ரைட் டு ரிப்பேர் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மருத்துவத் துறையில்கூட இந்தச் சிக்கல் பின்விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக ரைட் டு ரிப்பேர் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உதாரணத்துக்கு, வென்டிலேட்டர்ஸ். இப்போது நாம் எதிர்கொள்ளும் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்டிலேட்டர்ஸுக்கு மிக முக்கியப் பங்குண்டு. ஆனால், அவை பழுதாகும்போது அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர்தான் வந்து அதைப் பழுதுபார்க்க முடியும். சில நேரங்களில், அதைச் சரிசெய்ய ஆள் வரும்வரை வேறு வழியின்றிக் காத்திருக்க வேண்டிய சூழல்கூட ஏற்படுகிறது. இது பிரச்னையைத்தான் கொண்டுவரும் என்று ரைட் டு ரிப்பேர் ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதை அடிப்படையாக வைத்து பென்சில்வேனியாவில் நடந்த வழக்கின் விளைவாக, அந்த அரசாங்கம் கடந்த புதன்கிழமையன்று ஒரு சட்டத்தை இயற்றியது. அந்தச் சட்டம், பென்சில்வேனிய நுகர்வோருக்குத் தங்கள் பொருளைத் தாங்களே பழுது பார்த்துக்கொள்ளும் உரிமையையும் சேவை நிறுவனங்களிடம் மலிவாகப் பழுது பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இது அவ்வளவு சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய பிரச்னையல்ல. நுகர்வோர்களின் பணத்தை வேட்டையாடக் காத்திருக்கும் பெருமுதலாளிகளின் இந்த அச்சுறுத்தல் அவர்களை மட்டுமன்றி பூமியையே பாதித்துக்கொண்டிருக்கிறது. இப்படி வாங்குவதும் பழுதாவதும் குப்பையாகக் கொட்டிவிட்டு மீண்டும் வாங்குவதும், உலகம் முழுக்க மின்னணுக் கழிவுகளை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது. பழைய கைப்பேசிகள், செயலிழந்த கணினிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என்று அந்தக் குப்பைகள் குவிந்துக்கொண்டே போகின்றன.

மின்னணுக் கழிவுகள்
மின்னணுக் கழிவுகள்
எஸ்.ஆரிஃப் முகம்மது
Vikatan

புதிதாக வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று நம்மைத் தந்திரமாக நம்ப வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பொருளாதார அமைப்புதான் இதைச் செய்துகொண்டிருக்கிறது. நுகர்வு அதிகமானால்தான் சந்தைப் பொருளாதாரத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் லாபம் பார்க்க முடியும். ஆனால், அதற்காக அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் விலை மிகப் பெரியது.

2016 மட்டுமே 45 மில்லியன் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகியுள்ளன. இவையனைத்தும், காற்று, மண், நீர், அவற்றில் வாழும் உயிரினங்கள் என்று அனைத்து மட்டங்களிலும் பாதித்துக்கொண்டிருக்கின்றன. ஆம், பாதித்த உயிரினங்கள் பட்டியலில் மனிதர்களும் அடக்கம்.

பொருள்கள் பழுதடைவது இயல்புதான். ஆனால், அதற்கான உதிரி பாகங்களும் பழுதுபார்க்கும் வழிமுறைகளும் தேவைப்படும் கருவிகளும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். சிறுசிறு பிரச்னைகளை நுகர்வோரே சரிசெய்து கொள்ளும் வகையில் வழிகாட்டப்பட வேண்டும். பொருளின் விலைக்கு நிகராகப் பழுது பார்க்கும் விலையை வைக்காமல், நியாயமான விலையில் எளிமையாகப் பழுது பார்க்கும் முறை வர வேண்டும் என்ற கோரிக்கைகளே ரைட் டு ரிப்பேர் சார்பாகச் சர்வதேச அளவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. எந்தப் பழுதாக இருந்தாலும், வாடிக்கையாளரே சரிசெய்துகொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது. அதுமட்டுமன்றி, அனைத்துப் பழுதுகளையும் மலிவாகவே சரிசெய்துவிட முடியாது.

பழுது பார்க்கும் கருவிகள்
பழுது பார்க்கும் கருவிகள்

ஆப்பிள் நிறுவனம் சொல்வதுபோல், இந்த இணைய உலகில் பயனர்களின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அங்கீகரிக்கப்பட்ட சேவை நிறுவனங்களை அனைவரும் அணுகும் விதத்தில் அமைப்பதே அதற்குள்ள ஒரே தீர்வு. உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் என்று இரண்டு தரப்புமே பயனடையும் விதத்தில் ஒரு பொருளுக்கான சேவைகள் இருக்க வேண்டும்.

"நம் பொருள்கள் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதுதான் எதிர்காலத் தொழில்நுட்பத்துக்கும் மனித இனத்துக்கும் நல்லது" - கைல் வியென்ஸ் (Kyle Wiens), தலைமைச் செயல் அலுவலர் (CEO), ஐஃபிக்ஸிட் (iFixit).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு