Published:Updated:

ரஷ்ய அரசுக்கு எதிராகத் திரண்டிருக்கும் 'Anonymous' ஹேக்கர்கள்!

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா மீது சைபர் போர் ஒன்றைத் தொடுக்கவிருப்பதாக அறிவித்தது 'Anonymous' என்ற பெயரில் செயல்பட்டு வரும் இணையதளக் குழு ஒன்று

ரஷ்ய அரசுக்கு எதிராகத் திரண்டிருக்கும் 'Anonymous' ஹேக்கர்கள்!

ரஷ்யா மீது சைபர் போர் ஒன்றைத் தொடுக்கவிருப்பதாக அறிவித்தது 'Anonymous' என்ற பெயரில் செயல்பட்டு வரும் இணையதளக் குழு ஒன்று

Published:Updated:
ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான சூழல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரும் நிலையில், ஏழாவது நாளாக இன்று உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களால் உலகமே ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. பெரும்பாலான அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்புகள் பலவும் ரஷ்யா மற்றும் ரஷ்ய அரசு ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ரஷ்ய நிறுவனங்களுடன் தங்கள் சேவையை நிறுத்தி வருகின்றன. ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனங்களான ரஷ்யா டுடே மற்றும் ஸ்புட்னிக் ஆகிய நிறுவனங்களை தங்களுடைய தளத்தில் தடை செய்திருப்பதாக நேற்று அறிவித்தது யூடியூப். யூடியூப் மட்டுமின்றி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சேவைகளிலும் மேற்கூறிய இரண்டு ரஷ்ய செய்தி நிறுவனங்களையும் அவற்றின் கணக்குகளையும் தடை செய்திருக்கின்றன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். இவ்வாறு அரசுகள் கடந்து தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் வரை மறைமுகமாகவும் நேரடியாக எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது ரஷ்யா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஷ்ய அரசுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் ஹேக்கர்கள்!

இந்த நிலையில் தான் கடந்த பிப்.25-ல் ரஷ்யா மீது சைபர் போர் ஒன்றைத் தொடுக்கவிருப்பதாக அறிவித்தது 'Anonymous' என்ற பெயரில் செயல்பட்டு வரும் இணையதளக் குழு ஒன்று. ஒரு நிறுவன அமைப்பில் அல்லாமல் தனி நபர்களாக அடக்குமுறைகளுக்கு எதிராக இணையதளத்தில் செயலாற்றும் ஆர்வலர்கள் இணைந்த ஒரு அமைப்பு எனத் தங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர் இந்தக் குழுவினர். உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு தனி நபர்களால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கீழ் ஒன்றிணைந்து தாங்கள் செயல்படுவதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 7.6 மில்லியன் பாலோயர்கள் கொண்ட 'Anonymous' எனப் பெயரிடப்பட்ட ட்விட்டர் கணக்கின் மூலம் தான் தங்களுடைய நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்களை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறது இந்தக் குழு. 2008-ல் இருந்தே இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இந்தக் குழுவானது உலகமெங்கும் எந்த நாட்டில் எல்லாம் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதற்கு எதிராகப் போராடும் விதமாக சைபர் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். இதற்கு முன்னர் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் சைபர் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் சர்ச்சையில் ரஷ்ய அரசுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் களமிறங்கியிருக்கும் இந்தக் குழுவினர், ரஷ்யா அரசு சம்பந்தப்பட்ட மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் தாங்கள் சைபர் தாக்குதலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், ரஷ்யா உக்ரைன் மீது அவ்வப்போது சைபர் தாக்குதல்களை நடத்திவருவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது உக்ரைன். ரஷ்யாவின் தற்போதைய இந்தத் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகக் கூட உக்ரைன் அரசின் இணையதளங்களில் இருந்து தகவல்களை அழிக்கும் நோக்கத்தில் ஒரு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அது ரஷ்யா தான் எனக் குற்றம் சாட்டுகிறது உக்ரைன். ஆனால், அது தாங்கள் இல்லை என வாதிடுகிறது ரஷ்யா. இந்த மோதலில் ரஷ்யாவை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்படவிருப்பதாக அறிவித்துள்ளது 'Anonymous' குழு.

இது வரை ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்படும் மற்றும் ரஷ்ய அரசின் இணையதளங்களை முடக்குவது, ரஷ்ய அரசின் இணையதளங்களில் இருந்து தகவல்களை ஹேக் செய்வது மற்றும் ரஷ்ய அரசின் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து அதன் மூலம் முக்கியமான தகவல்களைக் கைப்பற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது Anonymous குழு. அவர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் அனைத்துமே ரஷ்ய மொழியில் இருப்பதால், அவர்கள் கைபற்றிய ஆவணங்களால் ஏதாவது நன்மை இருக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. ரஷ்ய அரசின் இணையதளங்களைக் கைப்பற்றுவதைத் தவிர்த்து, ரஷ்யாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றை ஹேக் செய்து அவற்றில் உக்ரைன் பாடல்களை ஒலிக்கச் செய்வது, போருக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்வது, ரஷ்யாவிற்கு வெளியில் இருக்கும் உக்ரைன் குறித்த செய்திகளை ஒளிபரப்புவது என "உக்ரைன் குறித்த உண்மையான தகவல்களை ரஷ்ய மக்களுக்குத் தெரிவிக்கிறோம்" என்று மேற்கூறிய செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறது அந்தக் குழு.

'நாங்கள் ரஷ்ய அரசு மற்றும் ரஷ்ய அரசின் செயல்பாடுகளுக்குத் தான் எதிராக இருக்கிறோமே தவிர, ரஷ்ய மக்களுக்கு எதிராகச் செயல்படவில்லை' என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது அந்தக் குழு. இந்தக் குழுவின் செயல்பாடுகள் ரஷ்யா அரசிற்குப் பெரிய நெருக்கடிகள் எதுவும் கொடுத்ததாகத். தெரியவில்லை. ஆனால், ரஷ்யாவிற்குள் உக்ரைன் குறித்த பல செய்திகள் தடை செய்யப்பட்ட போதிலும், இந்தக் குழுவின் செயல்பாடுகளால் ரஷ்ய மக்கள் உக்ரைன் குறித்த உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள முடிவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism