Google Search பிரபாகர் ராகவன்... யார் இந்த இன்னொரு கூகுள் தமிழர்?

மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெரும் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகள் வகிக்கும் இந்தியர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் பிரபாகர் ராகவன்.
கூகுள் நிறுவனத் தேடல் மற்றும் அசிஸ்டன்ட் (Google search and assistant) பிரிவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் பிரபாகர். கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யவிருக்கிறார் இவர்.
யார் இந்த பிரபாகர் ராகவன்?
சென்னையைச் சேர்ந்த 59 வயதான இவர், சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் முடித்தார். பின்பு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
இவர் கூகுளில் பணியாற்றும் முன்பு, யாகூ (Yahoo), ஐபிஎம் (IBM) போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தார். 14 வருடங்கள் IBM-ல் பணியாற்றிய பிறகு, வெரிட்டியில் (verity) மூத்த துணைத் தலைவராகவும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும் ஆனார். இதற்குப் பின்பு Yahoo நிறுவனத்தில் சேர்ந்த இவர், 2005-ம் ஆண்டு `Yahoo! Research labs'-ஐ உருவாக்கி, அதற்குத் தலைமை வகித்தார். பின்பு Yahoo நிறுவனத்தின் முதன்மைச் செயல்திட்ட அதிகாரியாகப் (Chief Strategy Officer) பதவியுயந்தார்.
பல வருட அனுபவத்தால் பட்டை தீட்டப்பட்ட வைரமாய், 2012-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார் பிரபாகர். ஆறே வருடங்களில் விளம்பரங்கள் மற்றும் வர்த்தகப் பிரிவின் தலைவரானார். பின்பு கூகுள் ஆப்ஸ், கூகிள் கிளவுட், மற்றும் பயனர் அனுபவங்களை (user interface) மேற்பார்வையிடும் துணைத் தலைவராக (Vice president) பொறுப்பேற்றார். இதற்கடுத்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர்களுள் ஒருவராகப் பணியாற்றிய இவர், இனி கூகுள் நிறுவனத் தேடல் மற்றும் அசிஸ்டன்ட் (Google search and assistant) பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். இதை கூகுள் நிறுவனத் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார்.

கணிப்பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் Algorithm-கள் குறித்து இணை ஆசிரியராக இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். மேலும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறியியல் துறையின் ஆலோசனை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 2008-ம் ஆண்டு தேசியப் பொறியாளர் சங்கத்தின் (National academy of Engineers) உறுப்பினராகக் கவுரவிக்கப்பட்டார். மேலும் ஏ.சி.எம் (Association of computing machinery) பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார், பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். மேலும் 20 காப்புரிமைகள் இவர் பெயரில் இருக்கின்றன. இவரது சேவைகளைப் பாராட்டி 2009-ம் ஆண்டு இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகம் `Laurea honoris causa' என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது.
இவர் முன்னிருக்கும் சவால்கள்!
இதற்கு முன்பு பென் கோம்ஸ் என்பவர் கூகுள் தேடல் பிரிவை நிர்வகித்தார். இவர் வெளிநாட்டில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்தவர். 1999-ல் இவர் கூகுளில் சேர்ந்தபோது ஒரு தேடலுக்கு சுமார் இருபது விநாடிகள் வரை ஆனது. இவரின் தலைமையில்தான் `சர்ச் என்ஜின் என்றாலே கூகுள்தான்' என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது கூகுள். இன்று நாம் கூகுளில் இரண்டு எழுத்துகள் டைப் செய்தாலே நாம் தேடுவது என்னவாக இருக்கும் எனக் கணித்து கீழே பரிந்துரை செய்துவிடும் கூகுள். இந்த Automatic suggestion முறை வந்ததற்கு முக்கியக் காரணம் பென் கோம்ஸ்தான். இனி கோம்ஸ், கூகுளின் கல்வி சம்பந்தப்பட்ட முன்னெடுப்புகளுக்குத் தலைமை தங்குவார் என அறிவிக்கப்பட்டது. அப்படித் தொடர்ந்தாலும், அவர் கூகுள் தேடல் பிரிவுக்குத் தொழில்நுட்ப ஆலோசகராகவும் தொடருவார் என்று கூறப்படுகிறது.

இப்படி மிக முக்கிய ஆளுமையாக இருந்த கோம்ஸ் பொறுப்புக்குத்தான் வருகிறார் பிரபாகர் ராகவன். பிரபாகர் இந்தத் துறைக்குப் பரிந்துரைக்கப்பட்ட போது, கோம்ஸ் திறம்பட நடத்திய இந்தத் துறையை இவரால் நிர்வகிக்க முடியுமா? கூகுள் விளம்பரங்களை நிர்வகித்த ஒருவரால், கூகுள் தேடல்களை மேம்படுத்த முடியுமா? அவருக்குத் தேடல் செயல்முறைகளைப் பற்றித் தெளிவான பார்வை மற்றும் நீண்ட அனுபவம் இருக்கிறதா? இவ்வாறு பலர் மனதில் குழப்பமும் கேள்வியும் எழுந்தன.
இது அனைத்திற்கும் சுந்தர் பிச்சை, பிரபாகர் பற்றிக் கொடுத்த அறிமுகத்தில் பதிலிருந்தது.
பிரபாகர் இந்தப் பொறுப்பேற்பது கூகுளை நல்ல வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். தனது வாழ்நாளில் இருபது வருடங்களை அல்காரிதம்களுக்கே ஒதுக்கியவர் இவர். இதனால் கூகுளின் தேடல், மனிதர்களுக்கு இன்னும் உபயோகமாகவும் சுலபமாகவும் இருக்க இவர் வித்திடுவார் என்பதில் சந்தேகமில்லைசுந்தர் பிச்சை
``தற்போது உலகத்தில் இருக்கும் முக்கியப் பொறியாளர்களில் பிரபாகரும் ஒருவர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு சமூகக் கருவியாகவும் தினசரி நுகர்வோர் பயன்பாடாகவும் இணையத் தேடல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று செயல்திட்ட ரீதியாகத் தொடர்ந்து சிந்திக்கவும், பேசவும் செய்துவருபவர் பிரபாகர் என்கின்றனர் இவரின் நண்பர்கள். உண்மையில் இதுதான் அவர் இறங்கி அடிக்கும் ஏரியாவாம். இவரது `Yahoo research lab' கொண்டுவந்ததுதான் `Search near me' என்ற வசதி. இதை இன்று நம்மில் பலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவரின் நிர்வாகத் திறன் எப்படி இருக்கப்போகிறது என்பதை வேண்டுமானால் காலம் தீர்மானிக்கலாம், ஆனால் இவரின் அறிவு எல்லையற்றது, அதில் சந்தேகமே வேண்டாம் என்கிறார்கள்.

பல டெக் நிறுவனங்களுக்கு நிகரற்ற போட்டியாளராக இருக்கும் கூகுள் நிறுவனம் காலம் கடந்து இந்தப் பந்தயத்தில் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் அதன் திறன்தான். அப்படித்தான் பிரபாகருக்கும் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பெரிய நிறுவனங்களில் பலவும் இன்று இந்தியர்களைத்தான் தலைவர்களாகக் கொண்டிருக்கிறது. உலகமெங்கிலும் எல்லாத் துறையிலும் திரை கடல் ஓடி திரவியம் தேடி பெருமை சேர்த்துவருகின்றனர் தமிழர்கள்.