Published:Updated:

`பேட்டரிக்காகச் சுரண்டப்படும் குழந்தைத் தொழிலாளிகள்!'- சர்ச்சையில் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

 குழந்தைத் தொழிலாளிகள்
குழந்தைத் தொழிலாளிகள்

கோபால்ட், சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் ஐயான் பேட்டரி செய்ய மிக முக்கியப் பொருளாகும். இவைதான் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் மின் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்திக் குறைந்த செலவில் லாபம் காண்பது அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து நடந்துவரும் ஓர் அவலம். குழந்தைகளுக்கெனப் பாதுகாப்பு சட்டங்களும், மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டாலும் இதைத் தடுக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படியான சூழலில் தற்போது குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியதற்கான வழக்கில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபேட், மைக்ரோசாஃப்ட், டெஸ்லா ஆகியவற்றின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

டெக் நிறுவனங்கள்
டெக் நிறுவனங்கள்

இந்த வழக்கானது கடந்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உரிமை வழக்கறிஞர் அமைப்பு (international right advocates ) வழக்கைத் தொடர்ந்துள்ளது. இது மனித உரிமைகள், கார்ப்பரேட் பொறுப்புகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றைச் சட்ட உதவியுடன் பெறத் தொடங்கப்பட்ட அமைப்பாகும். ஆஃப் காங்கோவில் உள்ள உலோகச் சுரங்கத்தில் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அபாயகரமான சூழலில் பணி செய்ய வைத்ததாக இந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

இவை அனைத்தும் பெயர் வெளியிடப்படாத குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் சார்பில் தொடரப்பட்ட வழக்காகும். இந்தச் சுரங்கத்தில் பணிபுரிந்த குழந்தைகள் மீது சுரங்கத்தின் சுவர் விழுந்து மோதியதால் பல பேர் இறந்திருக்கின்றனர். மேலும், பலர் தங்களது உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர். உலகளவிலேயே காங்கோ நாட்டில்தான் கோபால்ட் (Cobalt) அதிக அளவில் கிடைக்கிறது. இது சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் ஐயான் பேட்டரி செய்ய மிக முக்கியப் பொருளாகும். இவைதான் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பேட்டரி
பேட்டரி

இந்த வழக்கு பற்றி சர்வதேச உரிமை வழக்கறிஞர்கள் அமைப்பு கூறுகையில், ``தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சியால் கோபால்ட் (cobalt) தேவை அதிகரித்துள்ளது. இதனால் காங்கோ நாட்டில் உள்ள கோபால்ட் சுரங்கத்தில் குழந்தைத் தொழிலாளர்களால் அபாயகரமான சூழலில் தோண்டப்படுகிறது. மேலும், அவர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டாலர்கள்தான் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டப்பட்ட கோபால்டைத்தான் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் வாங்குகின்றன. மனுதாரர்களிடம் இவ்வாறு குழந்தைகளைத் துன்புறுத்தியும், காயப்படுத்தியும் வேலை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும், இதற்குப் பெரு நிறுவனங்களும் துணை போனதற்கான சான்றுகளும் உள்ளன" என்றது.

`சாக்கடை தெருவில் ஓடுதுன்னு கவலைப்பட்டார்!' -கும்பகோணத்தைப் பதறவைத்த துப்புரவுத் தொழிலாளி மரணம்

`இவ்வாறு தோண்டப்பட்ட கோபால்ட்டை அறிந்தேதான் பெரிய நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்நிறுவனங்கள் தங்களது சுய லாபத்திற்காக இப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஆதரித்துள்ளனர். இதற்கு எதிராக நிறுவனங்கள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதது நிச்சயம் கண்டனத்திற்குரியது' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு