Published:Updated:

'Right to Repair' திட்டத்தைக் கையிலெடுத்திருக்கும் ஆப்பிள்!

வாடிக்கையாளர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ‘right to repair’ என்ற முடிவை எடுத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு எலக்ட்ரானிக் பொருளை அந்த நிறுவனம் விதிக்கும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டுத்தான் அதை ஒரு வாடிக்கையாளர் வாங்குகிறார். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும், ஒரிஜினல் பாகங்களைத் தவிர வேறு ஏதாவது பாகங்களை மாற்றினால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல இல்லையென்றால் வாரண்டியை கிளைம் செய்ய முடியாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கேற்ற வகையில் ஒரிஜினல் பாகங்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதில்லை. இதை ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். ஆப்பிளின் சர்வீஸ் கட்டணங்களும், எலக்ட்ரானிக் பாக்ங்களின விலையும் அதிகம் இருப்பதுதான் அதற்கான காரணம் . இப்போது அந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ‘right to repair’ என்ற முடிவை எடுத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

சர்வீஸ் சென்டர்
சர்வீஸ் சென்டர்
`Right To Repair' - எலக்ட்ரானிக் குப்பைகளைக் குறைக்க ஐரோப்பிய யூனியனின் புதிய திட்டம்!

வாடிக்கையாளருக்கு ஒரு பொருளுக்கான முழு உரிமையும் வேண்டும்

ஒரு எலக்ட்ரானிக் பொருளை விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளருக்கு அதில் பழுது ஏற்பட்டால் அதை அவராகவே சரி செய்யும் உரிமை இருக்கிறதா என்றால் இல்லை என்கின்றன சந்தையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள். ஒரு பொருளில் ஏதாவது பழுது என்றால் அதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டருக்குத்தான் கொண்டு வர வேண்டும். அதைச் சரி செய்ய நாங்கள் சொல்லும் விலையை கொடுக்க வேண்டும் என்பது பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் ஒரு விஷயம். எடுத்துக்காட்டாக ஒரு ஐபோனின் உடைந்த டிஸ்பிளேவை மாற்ற வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டரில் அதை மாற்றித்தர புதிய பாகத்துக்கான விலையைத் தவிர்த்து 2,000 ரூபாய் ஆகிறது என்று வைத்துக் கொண்டால். வெளியில் அதை 100 ரூபாய்க்கோ 200 ரூபாய்க்கோ மாற்றிவிட முடியும் ஏன் நமக்கு அதை மாற்றத் தெரிந்தால் சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் இலவசமாகவே கூட மாற்றிவிடலாம். ஆனால் ஆப்பிளின் ஒரிஜினல் பாகங்களை வெளிச்சந்தையில் வாங்க முடியாது. இந்த நிலையை மாற்ற எழுந்த குரல்தான் ' Right To Repair '.

Right to Repair
Right to Repair

ஒரு பொருளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பழுதை அவர்களாகவே சரி செய்து கொள்ளக்கூடிய உரிமையும் நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என்பது இந்த இயக்க ஆதரவாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. உலகம் முவுவதிலும் சமீபகாலமாக இந்த குரல் பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது. பொதுமக்களிடம் இருந்து எழுந்திருக்கும் இந்த கோரிக்கையைப் பல நாடுகளின் அரசுகளும் இந்த கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. ' வாடிக்கையாளர்கள் அவர்களாகவே பழுதை சரி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிகளை ஆராய்ந்து சீரமைக்குமாறு ஃபெடரல் டிரேட் கமிஷனுக்கு உத்தரவிட்டார் ' அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ' Right To Repair ’ இயக்கத்துக்கு ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான், டெஸ்லா உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் பல தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அமெரிக்க அரசின் ஆதரவு நிறுவனங்களின் முடிவில் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்திருக்கிறத.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனதை மாற்றும் சர்வீஸ் சென்டர்கள்

பெரும்பாலான நிறுவனங்களைப் போலவே ஆப்பிளும் அதன் தயாரிப்புகளுக்கு ஒரு வருட உத்தரவாதத்தை அளிக்கிறது. ஒரு வருட காலத்துக்குள் வாங்கிய டிவைஸ்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை ஆப்பிள் சர்வீஸ் சென்டர் மூலமாக சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் பழுதடைந்த பாகத்தை பெரும்பாலும் இலவசமாகவே சரி செய்து கொள்ள முடியும். ஆனால் வாரன்டி காலம் முடிந்த பிறகு ஒரு டிவைஸில் பழுது ஏற்பட்டால் என்ன பிரச்னை என்பதை தெரிந்து கொள்ளவே சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பழுது நீக்குதல்
பழுது நீக்குதல்

மேலும் பழுது கண்டறியப்பட்டு அதற்கான பாகம் மாற்றப்பட்டால் அதற்கான கட்டணமும் தனியாக உண்டு. ஒரு டிவைஸின் மதிப்பில் பாதியளவு இருக்கும் இந்த சர்வீஸ் கட்டணங்கள்தான் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. விலை உயர்வான சர்வீஸ் கட்டணங்கள் டிவைஸில் ஏற்பட்டிருக்கும் பழுதை சரி செய்து பயன்படுத்தலாம் என்ற ஒரு வாடிக்கையாளரின் நினைப்பை மாற்றி விடுகின்றன. அதன்பின்னர் வாடிக்கையாளர்கள் புதிய அந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வாங்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்ல சந்தையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் இதே போலத்தான் செயல்பட்டு வருகின்றன.

‘ Right To Repair ’- மின்னணு கழிவுகள் உருவாவதைத் தடுக்கக்கூடும்

வாடிக்கையாளர்கள் பழுதை சர்வீஸ் செய்வது அல்லது புதிய தயாரிப்புகளை வாங்குவது என எந்த முடிவை எடுத்தாலும் அது அந்த நிறுவனத்துக்கு லாபகரமானதாகவே இருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் பார்வையில் பார்க்கப்போனால் இது பெரும் விளைவை ஏற்படுத்துகிறது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இப்படி உடைந்த சரி செய்யப்படாத பொருள்கள் மின்னணு கழிவுகளாக மாறுகின்றன. இப்படி ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான டன் அளவில் சேரும் மின்னணு கழிவை என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கின்றன உலக நாடுகள். கழிவுகள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு ‘ Right To Repair ’ உரிமை கொடுக்கப்பட்டால் அதுவும் மின்னணு கழிவுகள் உருவாவதைக் கணிசமாகக் குறைக்கும் என்பதும் இதை ஆதரிப்பவர்களின் எண்ணமாக இருக்கிறது.

E-Waste
E-Waste

2022-ம் ஆண்டு முதல் ஒரிஜினல் பாகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்

‘Right To Repair’ உரிமையை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முன் வந்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் முதல் ஒரிஜினல் பாகங்களை விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. அதன்படி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13-க்கான பாகங்கள் மற்றும் அதை மாற்றத் தேவையான உபகரணங்கள், வழிமுறைகள் அடங்கிய கையேடுகள் ஆகியவை முதலில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். அதன்பின்னர் ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான M1 சிப்கள் அடங்கிய மேக்புக்-குகளுக்கு இந்த சேவை விரிவிபடுத்தப்படும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இந்த பொருள்களை விற்பனை செய்ய புதிய ஆன்லைன் ஸ்டோர் ஒன்றும் தொடங்கப்படவுள்ளது. இந்த ஸ்டோரில் முதலில் ஐபோனுக்கான டிஸ்பிளேக்கள், பேட்டரிகள் மற்றும் கேமராக்கள் ஆகியவை கிடைக்கும். பின்னர் உபகரணங்கள், பாகங்கள் உட்பட 200 பொருள்கள் விற்பனைக்கு வரும் எனவும் ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. ஆனால் இவை அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர்களில் கிடைக்கும் பாகங்களின் விலைக்கே விற்பனை செய்யப்படுமா இல்லை ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதைப் பற்றி ஆப்பிள் தெரிவிக்கவில்லை. மக்களின் ஆதரவு மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் உள்ள அரசுகளின் ஆதரவும் ‘ Right To Repair ’ இயக்கத்துக்கு இருப்பதால் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் முடிவை விரைவில் பிற நிறுவனங்களும் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு