Published:Updated:

`மக்கள் நடமாட்டம் எந்த அளவில் இருக்கிறது?' -கொரோனா தடுப்பில் கூகுளைத் தொடர்ந்து ஆப்பிள்

அரசுகளுக்கு உதவப்போகும் ஆப்பிள்!
அரசுகளுக்கு உதவப்போகும் ஆப்பிள்!

இந்தத் தகவல்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் நடமாட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். அதை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என ஆலோசிக்கலாம்.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது பெருமளவில் வைரஸ் பரவுதலை நிறுத்தும். இதற்காகப் பல நாடுகளும் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்திவருகின்றன. அப்படி வலியுறுத்தியும் மக்கள் வீட்டில்தான் இருக்கிறார்களா, நிலை கட்டுக்குள் இருக்கிறதா எனச் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

'மொபிலிட்டி டேட்டா ட்ரெண்ட்ஸ்' என்பதன் மூலம் ஆப்பிள் அதன் பயனாளர்களின் நகர்தல்களைக் கண்காணித்து அதை ஒரு டேட்டாவாக வெளியிடத்தொடங்கியுள்ளது. இந்த டேட்டா மூலம் ஆப்பிள் பயனாளர்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். இந்த டேட்டா ஆப்பிள் மேப்ஸ் சேவை பயன்படுத்துபவர்களிடமிருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த டேட்டா பதிவேற்றப்படுகிறது. மேலும் ஜனவரியில் இருந்த மக்கள் நடமாட்டத்துடன் இப்போது உள்ள மக்கள் நடமாட்டத்தை ஒப்பிடப்படுகிறது இது.

ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம்!

இதில் தனிநபரின் நடமாட்டம் பகிரப்படாது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள மக்களின் நடமாட்டம் ஒட்டுமொத்தமாகவே தெரிவிக்கப்படும். துல்லியமாக எத்தனை நபர்கள் நடமாடுகிறார்கள் என்பதும் தெரிவிக்கப்படாது. அதற்குப் பதிலாக, நடமாடும் மக்களின் எண்ணிக்கை சதவிகிதத்தில் குறிப்பிடப்படும். இதன்மூலம் 63 நாடுகளில் வசிக்கும் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது ஆப்பிள். "ஆப்பிள் மேப்ஸ், பயனரின் ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்படாது. மேலும் ஒரு பயனரின் லொகேஷன் ஹிஸ்டரியை ஆப்பிள் தனியாகச் சேமித்துவைத்திருக்காது" என ப்ரைவசி கவலைகள் வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

கொரோனாவுக்கு எதிராகக் கைகோக்கும் ஆப்பிள் - கூகுள் கூட்டணி! இது எந்தளவுக்குப் பலன் தரும்? #LongRead

இப்படிச் சேகரிக்கப்பட்ட டேட்டா, உள்ளூர் அரசாங்கங்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்தத் தகவல்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் நடமாட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். அதை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என ஆலோசிக்கலாம்.

கூகுள் | Google
கூகுள் | Google
AP | Patrick Semansky

கூகுள் இதைச் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. கூகுள், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 131 நாடுகளில் உள்ள மக்களின் நகர்தல்களைக் கண்காணித்து அந்தத் தகவல்களை அரசுகளிடம் ஒப்படைக்கும் என்று கூறியிருந்தது. ஆப்பிள் கூறியது போல, தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று கூறியிருந்தது கூகுள் நிறுவனம். "ஒவ்வொரு நாளும் கூகுள் மேப்ஸ் மூலம் வீடுகளிலிருந்து கடைகளுக்கும், வேறு இடங்களுக்கும் செல்லும் மக்களின் நகர்தல்கள் கண்காணிக்கப்படும். மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதை ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் சதவிகிதங்களை வைத்துக் கண்டறியலாம். ஆனால், ஒரு நாளைக்கு இத்தனை பேர் நடமாடுகிறார்கள் என்று துல்லியமாகக் கூற முடியாது" என்று கூகுள் மேப்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு