Published:Updated:

ஆப்பிளின் எலக்ட்ரிக் கார் கனவு... கைகோக்கிறதா ஹூண்டாய்?!

ஆப்பிளின் கனவு எலக்ட்ரிக் கார் திட்டம்...!
ஆப்பிளின் கனவு எலக்ட்ரிக் கார் திட்டம்...!

பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆப்பிள் இதுபற்றி பொதுவெளியில் எந்தத் தகவல்களும் வெளியிடவில்லை. இருந்தும் ஆப்பிளின் கவனம் மின்சார கார் பக்கம் திரும்பியிருப்பதை டெக் வட்டாரத்தில் இருக்கும் அனைவராலும் கவனிக்க முடிந்திருக்கிறது.

பிரபல டெக் நிறுவனமான ஆப்பிளின் பல வருடக் கனவுகளுள் ஒன்று மின்சாரக் கார் ஒன்றைத் தயாரிப்பது. 2014 முதலே இதுகுறித்த பேச்சுகள் அடிபடத் தொடங்கின. இருந்தும் எதுவும் நடந்தேறியதாகத் தெரியவில்லை. ஆனால், தற்போது மீண்டும் அது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. தொழில்நுட்ப முன்னோடியாக ஸ்மார்ட்போன், டேப்லேட், லேப்டாப், பர்சனல் கம்ப்யூட்டர்ககளில் பல புதுமைகளைக் கொண்டுவந்த ஆப்பிளின் இந்தக் கனவை நனவாக்க ஹூண்டாய் உதவவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apple | Tim Cook
Apple | Tim Cook
Brooks Kraft | Apple

ஆப்பிள் சாதாரண கார்களைத் தயாரிக்கப்போவதில்லை. தானியங்கி மின்சார வாகனங்களைத் தயாரிப்பதே அதன் பல வருடத் திட்டம். ஆப்பிளின் இந்த மின்சார கார் திட்டத்தை 'டைட்டன்' (Titan) என்ற codename கொண்டு குறிப்பிடுகிறது அந்நிறுவனம். தானியங்கி காருக்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இப்போது தீவிரமாக களம் கண்டுள்ளது அந்நிறுவனம். பேட்டரி தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகளில் இருக்கிறது. இது குறித்துப் பல முக்கிய ஆய்வுகளைக் மேற்கொண்டுவரும் ஆப்பிள் இதுவரை இதுபற்றி பொதுவெளியில் எந்தத் தகவல்களும் வெளியிடவில்லை. இருந்தும் ஆப்பிளின் கவனம் மின்சார கார் பக்கம் திரும்பியிருப்பதை டெக் வட்டாரத்தில் இருக்கும் அனைவராலும் கவனிக்க முடிந்திருக்கிறது.

ஆயிரக்கணக்கில் ஊழியர்களைப் பணிக்கு எடுத்துக்கொண்டு ஒரு விஷயத்தை மறைப்பது என்பது கடினம்!
2016-ல் ஆப்பிளின் மின்சார கார் திட்டம் குறித்து எலான் மஸ்க்.

2018-ல் சுமார் 5000 ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் வேலைபார்ப்பதாகத் தெரிய வந்தது. பலரும் டெஸ்லாவின் முன்னாள் ஊழியர்கள். இந்த துறையில் மிக முக்கிய ஆளுமைகள் பலரையும் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது ஆப்பிள். 2024-ல் முதல் ஆப்பிள் காரை நாம் பார்க்கலாம் என டிசம்பரில் செய்தி வெளியிட்டது Reuters. ஆனால், ஆப்பிள் தயாரிப்புகளைக் கணிப்பதில் பெயர்பெற்ற பிரபல ஆய்வாளர் மிங்-ஷி குவோ 2025-க்குள் ஆப்பிள் கார் வெளியாக வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

Apple
Apple

ஆப்பிள் கார் பற்றி மீண்டும் பேச்சு அடிபடத்தொடங்கியதுமே டெஸ்லா நிறுவனரும் CEO-வுமான எலான் மஸ்க் சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டார். சில வருடங்களுக்கு முன்பு டெஸ்லாவை ஆப்பிளிடம் விற்பதற்கு தான் முயன்றதாகவும், அந்த சந்திப்பிற்கு ஆப்பிள் CEO டிம் குக் நேரம் தரவில்லை என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இன்று மின்சார கார் உலகின் முன்னோடியாக விளங்குகிறது டெஸ்லா.

டெஸ்லாவின் கார்களுக்குப் போட்டியாகவே ஆப்பிளின் கார்கள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவர்லே, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களின் மின்சார கார்களுடனும் ஆப்பிள் நேரடியாக மோதும். முழுவதும் தானாகவே இயங்கும் வண்ணம் கார்களை வடிவமைக்கும் முனைப்பில் இருக்கிறது ஆப்பிள். இதற்கான மென்பொருள் தொடங்கி சென்சார், சிப் வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்து தயார் செய்துகொண்டிருக்கிறது அந்நிறுவனம். பயணி செல்ல வேண்டிய இடத்தைக் கொடுத்தால் போதும் மீதி அனைத்தையும் முடிந்தளவு காரே தானாகச் செய்துவிட வேண்டும் என விருப்பப்படுகிறது ஆப்பிள்.

Tesla Car
Tesla Car

இத்தனை கனவுகள் இருந்தும் சொந்தமாக கார் தயாரிப்பது எந்த அளவு சாத்தியம் என்பதில் ஆப்பிளுக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. இதுகுறித்து தீவிரமாகப் பரிசீலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மூன்றாம் தரப்பு கார் நிறுவனம் ஒன்றுக்குத் தானியங்கி மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தை மட்டும் உருவாக்கிக் கொடுப்பது இன்னும் எளிதாக இருக்கும் என ஆப்பிள் யோசித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில்தான் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயுடன் கைகோக்கப்போகிறது ஆப்பிள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு 'ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என ஹூண்டாய் தரப்பு விளக்கம் கொடுத்திருக்கிறது. ஆப்பிள் எப்போதும் போல வாயைத் திறக்கவில்லை.

Hyundai
Hyundai
Hyundai Motor India

கொரோனாவால் உலகமெங்கும் விற்பனையில் சுமார் 15% சரிவைக் கண்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஆப்பிளுடனான கூட்டணி மிகப் பெரிய பூஸ்ட்டாக இருக்கும். இந்தச் செய்திகள் வெளிவந்ததுமே கொரியப் பங்குச் சந்தையில் Hyundai Motor பங்குகளின் மதிப்பு 23.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஏழு வருடங்களில் இல்லாத மதிப்பை எட்டியுள்ளது ஹூண்டாய் பங்குகளின் மதிப்பு.

காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு