`மாணவர்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்களா?' - என்ன சொல்கிறது McAfee ஆய்வு முடிவுகள்?

ஆச்சர்யம் என்னவென்றால் 19% மாணவர்கள் மட்டுமே தங்கள் பள்ளித் தகவல்களையும் திட்டங்களையும் பாதுகாக்கக் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தும் சைபர்தாக்குதல்கள் 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. McAfee எனும் கணினி பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டது. 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 1,000 கல்லூரி மாணவர்களையும் பட்டதாரிகளையும் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மாணவ சமுதாயத்தின் மத்தியில் சைபர் தாக்குதல் பற்றிய அறிவும் அதன் புரிதலும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கம். இணையத் தாக்குதலிலிருந்து இளைஞர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதற்குப் பதிலளித்தவர்களில் 53% பேர் தங்கள் கணினிகளில் சில பாதுகாப்பு மென்பொருள்களைப் பயன்படுத்துவதாகவும், 37% பேர் தங்கள் தொலைபேசிகளில் VPN பயன்படுத்திப் பாதுகாப்பதாகவும், வெறும் 14% பேர் மட்டும்தான் தங்கள் டேப்லெட்களில் பாதுகாப்பு மென்பொருளை நிறுவியுள்ளதாகவும் தெரிவித்தனர். 69% மாணவர்கள் தங்கள் வங்கி அல்லது நிதித் தகவல்களை எச்சரிக்கையோடு பாதுகாக்கின்றனர். ஆனால், 19% மாணவர்கள் மட்டுமே தங்கள் பள்ளித் தகவல்களையும் திட்டங்களையும் பாதுகாக்கக் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
தாக்குதல் பற்றிய அறிவு இருந்தாலும் அவர்களுள் 80 சதவிகித மாணவர்கள் சைபர்தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஏதோ ஒருவரை அறிந்திருப்பதாகக் கூறினார்கள். சைபர் தாக்குதலால் 43% பாதிக்கப்படாததாகப் பதிலளித்தனர். இதில் பலரும் தங்களுக்கு அவையெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிக்கைத் தெரிவித்தனர்.

டிஜிட்டலிலேயே தவழ்ந்து வளர்ந்த இந்தத் தலைமுறையினர் தினசரி நாளின் பெரும்பகுதியை சமூக ஊடகங்களிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் செலவழிக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இளைஞர்கள் இலவச ஆன்லைன் சேவைகள் மற்றும் வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்துத் தெரியாமல்தான் இருக்கிறார்கள்.