Published:Updated:

கொஞ்சம் திகில் கொஞ்சம் ஆச்சர்யம்! - IoT என்னும் தொழில்நுட்ப ஜீபூம்பா #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

5 ஜி உள்ளிட்ட புதுமைகள் கூட இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக உள்ளன..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்றைய மெய்நிகர் உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. 5 ஜி உள்ளிட்ட புதுமைகள் கூட இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக உள்ளன.

மேலும் தொழில்நுட்பங்கள் வாயிலாக மனிதர்களால் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்படுவதும் தொடர்கிறது. எனவே இன்றைய டெக் உலகில் தொழில்நுட்பங்களைத் தவிர்த்து ஒரு மனிதன் வாழ்வது என்பது இயலாத ஒன்று.

நீங்கள் உங்கள் வீட்டினுள் நுழைகிறீர்கள். வெயில் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு ஏசி தேவைப்படுகிறது."ஏசி ஆன்" என்று நீங்கள் கூறியவுடன் உங்களின் ஏசி செயல்படத் தொடங்குகிறது! டி.வி பார்க்க விரும்புகிறீர்கள். "டி.வி ஆன்" என்றவுடன் டிவி ஒட ஆரம்பிக்கிறது. இப்படி உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு சாதனமும் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் எப்படி இருக்கும்? கீழ்ப்படிவது மட்டுமல்லாது உங்களுக்குப் பல்வேறு சூழ்நிலைகளில் தேவையான முடிவுகளைப் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்குமல்லவா?

Representational Image
Representational Image

இது ஏதோ ஜீபூம்பா வேலை இல்லை. IoT தொழில்நுட்பம் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.

IoT என்றால் என்ன?

IoT ( Internet of Things) என்பது நமது கணினி, மொபைல் போன், பிரின்டர், உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளையும், வீட்டின் ஸ்மார்ட் கதவு, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, டி.வி போன்ற மின்னணுப் பொருள்களையும் மனிதர்களுடன் விர்ச்சுவல் முறையில் இணைக்கும் ஒரு கட்டமைப்பு ஆகும்.

எந்தவித மனித உதவியோ அல்லது கணினிகள் மற்றும் கேபிள்களின் உதவியோ அன்றிக் குறிப்பிட்ட தனித்துவமிக்க அடையாளம் (Unique Identifier) மூலம் கருவிகள் தமக்குள்ளும், மனிதரிடையேயும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிற ஒரு ஸ்மார்ட்டான அமைப்புதான் IoT.

நமது வீட்டில் உள்ள டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு, நம்முடைய வீடு ஸ்மார்ட் ஹோம் ஆக இருந்தால் இந்த IoT தொழில்நுட்பத்தை நாம் எளிதாகப் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட் ஹோம் எனும் வசதி தற்போதைக்கு வசதிபடைத்த குடும்பங்களில் மட்டும் இருக்கலாம். ஆனால் வருங்காலங்களில் நடுத்தரக் குடும்பங்களிலும் விரைவில் இவ்வசதி ஏற்படுத்தப்பட வாய்ப்புண்டு. எனவே IoT என்பது மொபைல் போன் போன்று உலகளாவிய மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ளது.

Representational Image
Representational Image

இதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் IoT என்பது வீடுகளில் மட்டுமே பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் அல்ல. அலுவலகங்களில் உள்ள கருவிகள் மொத்தத்தையும் இணைத்துச் சிறப்பான நிர்வாகத்திற்குத் துணைபுரிவது, தொழிற்சாலைகளில் உற்பத்தி, விற்பனை மற்றும் அது சார்ந்த படிநிலைகளை முழுக்கக் கண்காணித்து தீர்வுகள் அளிப்பது, மருத்துவமனைகளில் டெலி சர்ஜரி உள்ளிட்டவற்றுக்கு உறுதுணையாக இருப்பது என IoT யின் பயன்பாடு எல்லையற்றது.

IoT செயல்படும் முறை:

டிஜிட்டல் மற்றும் எலக்டிரானிக்ஸ் கருவிகள் மற்றும் அமைப்புகளில் இருக்கும் சென்சார்கள் மூலமாக IoT பிளாட்பார்ம் உடன் கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இவை இணையத்தின் உதவியுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும். மேலும் பல்வேறு கருவிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து, நீங்கள் ஏதும் சொல்லாமல் தானாகவே அதிலிருந்து முடிவுகளை IoT ப்ளாட்பார்ம் எடுக்கும்.

தானாகவே முடிவுகள் எனும்போது தற்போதைய தகவல்களை மற்றும் தரவுகளை மட்டும் வைத்து IoT முடிவுகள் எடுப்பதில்லை. நீங்கள் சார்ந்த சாதகமான மற்றும் பாதகமான இதற்கு முந்தைய பல்வேறு தரவுகளையும் ஆய்வு செய்து பெறப்பட்ட தகவல்களை அனலைஸ் செய்து, உங்களுக்குச் சாதகமான முடிவுகளையே எப்போதும் எடுக்கும்.

Representational Image
Representational Image

IoT யின் முடிவெடுக்கும் திறனுக்கு ஒரு உதாரணம்:

வெளியூரில் உள்ள உங்கள் மனைவியின் ஒரு உறவினரின் திருமணத்திற்கு நாளை காலை 7 மணிக்கு நீங்கள் சென்றாக வேண்டும். ஒருவேளை திருமணத்திற்கு நீங்கள் செல்லாவிடில் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனும் சூழல். பயணத்திற்கு நீங்கள் ரயிலில் முன்பதிவு செய்துள்ளீர்கள். காலை 5 மணிக்கு ரயில் புறப்படுகிறது. இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் காலை 7 மணிக்கு நீங்கள் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்குப் போய் சேர்ந்துவிட முடியும்.

எனவே நீங்கள் காலையில் எழுந்து தயாராக 1 மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டு, உங்கள் ஸ்மார்ட் வாட்ச் அல்லது மொபைல் போனில் 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்கி விடுகிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் செல்ல வேண்டிய ரயில் ரத்தாகிவிட்டது. அதற்கான தகவல் உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால் நீங்கள் அப்போது தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த இடத்தில்தான் IoT தொழில்நுட்பம் உங்களுக்கு கை கொடுப்பதாக உள்ளது. உங்களுக்கு வந்த அந்த தகவல் IoT ஆல் அனலைஸ் செய்யப்பட்டு, ரயில் ரத்து ஆகிவிட்டதால் அடுத்த மாற்று ஏற்பாடாக நீங்கள் பேருந்து அல்லது கார் மூலமாக அந்த இடத்திற்குச் செல்ல வாய்ப்புண்டு என்ற இரு முடிவுகள் தெரிவு செய்யப்படும்.

Representational Image
Representational Image

பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அந்த முடிவு உங்களின் தற்போதைய அதிகாலைச் சூழலுக்குச் சாத்தியமானது அல்ல என்பதால் அந்த முடிவு நிராகரிக்கப்பட்டு விடும்.

அடுத்த முடிவாக காரில் நீங்கள் செல்வது இறுதி முடிவாக ஏற்கப்படும். உங்களுடைய காரின் வேகம், போக்குவரத்து ஆகியவற்றை அனலைஸ் செய்து குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சேர மூன்று மணிநேரம் ஆகும் எனத் தெரியவருகிறது.

பயண நேரம் மூன்று மணி நேரம் என்றால் நீங்கள் நான்கு மணிக்கே கிளம்பி ஆக வேண்டும். நீங்கள் அலாரம் வைத்திருப்பது 4 மணிக்கு. எனவே அலாரம் ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றி வைக்கப்படும். நான்கு மணிக்கு நீங்கள் வைத்த அலாரம் மூன்று மணிக்கே அடிக்கும். அதற்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் உங்களுடன் பகிரப்படும்.

எனவே நீங்கள் 3 மணிக்கு எழுந்து தயாராகி, 4 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, 3 மணி நேர கார் பயணத்தில் 7 மணிக்குக் குறிப்பிட்ட திருமணத்திற்குச் சென்று விட முடிகிறது.

இதில் எதுவுமே நீங்கள் முடிவெடுக்கவில்லை. முழுக்க முழுக்க உங்கள் சூழலை ஆய்வு செய்து, உங்களுக்கு சாதகமான முடிவினை எடுத்ததும், அந்த முடிவினை உங்களுடன் பகிர்ந்ததும் IoT தொழில்நுட்பம்தான். இதில் உங்கள் பங்கு முடிவை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது மட்டும்தான். சிந்தித்துப் பார்த்தால் இது சற்று திகிலாகத்தான் இருக்கும்.

Representational Image
Representational Image

IoT இன் சாதகங்கள்:

*ஆட்டோமேஷன் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத தேவை. loT மனித தலையீட்டைக் குறைக்கிறது. பணிகள் மற்றும் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கிறது.

*நெட்வொர்க் வழியாக தரவுகள் மற்றும் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதில் நேரம் மற்றும் பணத்தின் அளவு பெருமளவு குறைகிறது.

*தகவலை அணுகுவது எளிதானது. நிகழ்நேரத்தில் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள சாதனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

*இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு இடையேயான தொடர்பு மிகவும் வெளிப்படையானதாகவும்,எளிதாகவும் மாறும்.

* மருத்துவம்,போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் IoT யினால் பெருமளவு சாதனைகளை நிகழ்த்த முடியும்.

IoT இன் பாதகங்கள்:

*மனிதனது வாழ்க்கை முறை முழுக்க தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதால், மிகச்சிறிய பணிகளுக்குக் கூட தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்கும் அவலம் ஏற்படும்.

*முக்கியமான தரவுகளை அனுப்பும்போது ஏதேனும் ஒரு கருவியின் குறைபாட்டினால் கூட முழுத் தகவல் மற்றும் ரகசியத் தரவு கசிவு ஏற்படுவதற்கான பெரும் ஆபத்து உள்ளது.

*ஆட்டோமேஷன் மூலம் மனித உழைப்பிற்கான தேவை குறைகிறது. வேலையின்மை பிரச்னையும் ஏற்படும்.

*இதன் சிக்கலான நெட்வொர்க் காரணமாக ஒரு இடத்தில் ஏற்படும் சிறு பிரச்னை அனைவரையும் மற்றும் முழு அமைப்பையும் பாதிக்கும்.

Representational Image
Representational Image

*மனிதன் சோம்பேறி ஆவதற்கான சாத்தியக்கூறு மேலும் அதிகமாகும்.

இன்று நம்மில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனுக்கு அடிமைகளாக மாறியிருப்பதை மறுக்க முடியாது. மனிதன் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகாமல் அவற்றை அடிமைப்படுத்த வேண்டும் என்பர்.

சிந்திப்பது மற்றும் முடிவெடுப்பது ஆகியவை மனிதனது ஆதார குணங்கள்.இக்குணங்கள் இருப்பதால்தான் மனிதன் என்று நாம் உணர்கிறோம். அறியப்படுகிறோம்.

ஆனால் IoT மூலமாக சாதகமான முடிவுகள் மனிதர்கள் மேல் திணிக்கப்பட வாய்ப்புண்டு. எளிமை மற்றும் புதுமை காரணமாக மனிதர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புண்டு. இது நமது சிந்தனை ஆற்றலுக்கு எதிரான ஒன்றாகவே அமையும்.

தொழில்நுட்பங்களை முற்றிலும் சார்ந்து வாழ்வது மனித நலனுக்கு ஏற்றதன்று என்ற புரிதல் நமக்கு அவசியம் தேவை.

ஆனால் இது போன்ற எண்ணற்ற தொழில்நுட்பங்களின் பிடியிலிருந்து மனிதன் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளான். இத்தகைய தொழில்நுட்பங்களில் மனிதனுக்குப் பாதகமான குறைகளை நீக்கியும், அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டும் வாழ்கிறான். இந்த IoT எனும் இருபுறக் கத்தியும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஏனெனில்"புத்திசாலிகளுக்கு என்றுமே தொழில்நுட்பங்கள் ஒருவழிப்பாதையாக அமைந்து விடாது!"

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு