Published:Updated:

டிஜிட்டல் உலகின் தகவல் திருட்டும், நாலடியார் அட்வைஸும்! #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பொருளைத் திருடலாம் அறிவைத் திருட முடியுமா? என்றால் அதுவும் சாத்தியமே என்று அறைகூவல் விடுகின்றனர் இன்றைய அறிவுக் கள்வர்கள்!

Plagiarism என்னும் அறிவுத் திருட்டு இன்று தொடர்கதையாகி வருகிறது. பிறரின் சிந்தனையை, கற்பனையை தன்னுடையது என்று உலகுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் அறிவித்துக்கொள்வது அறிவுத் திருட்டாகிறது!

Representational Image
Representational Image

போலச் செய்தலும் அறிவுத் திருட்டும்:

Imitation எனும் போலச் செய்தலும், Plagiarism எனும் அறிவுத்திருட்டும் ஒன்றுபோல இருப்பினும், இவை வெவ்வேறு பொருள் தரக்கூடியன.

போலச் செய்தலில் சிறப்பான கருத்துகள் மற்றும் உட்கூறுகள் யாரிடமிருந்து பெறப்பட்டவை என்பது அதைக் காணும் அனைவருக்குமே மிக எளிதாகப் புரியக் கூடியனவாக இருக்கும். மேலும் போலச் செய்தல் முன்பே அதைச் செய்தவர்களால் பெரும்பாலும் ரசிக்கப்படுகின்றது. சில வேளைகளில் போலச் செய்தல் அங்கதமாகவும் இருக்கிறது. எனவே, போலச் செய்தலும் திரும்பச் செய்தலும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளன.

ஆனால், அறிவுத் திருட்டு இதிலிருந்து வேறுபட்டது. அறிவுத் திருட்டில் குறிப்பிட்ட படைப்பு யாரிடமிருந்து பெறப்பட்டது அல்லது எடுக்கப்பட்டது என்பது சாமர்த்தியமாக மறைக்கப்படுகிறது அல்லது யதேச்சையாகக் கூறாமல் விடப்படுகிறது!

இந்த அறிவுத் திருட்டானது கல்வி, ஆராய்ச்சி, சினிமா, எழுத்து மற்றும் பத்திரிகைத் துறைகளில் பெருமளவு நடைபெறுகிறது.

Representational Image
Representational Image

அறிவுத் திருட்டு ஏன் நடக்கிறது?:

இன்றைய தொழில்நுட்ப உலகில், தான் அறிவாளி, சிந்தனையாளன் என மற்றவருக்கு அறிவித்துக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.

ஆனால் அதற்கான சுயசிந்தனை அனைவரிடமும் இருப்பதில்லை! விரைவில் புகழ் அடைய வேண்டும் அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும், தன்னை அறிந்த நான்கு பேர் தன்னை அறிவாளி எனக் கொண்டாட வேண்டும். அதற்கு எந்த வழியாக இருந்தாலும் சரிதான் என்பதே அறிவுத் திருட்டின் ஆரம்பமாக இருக்கிறது.

எவையெல்லாம் திருடப்படுகின்றன?:

கல்வித்துறையைப் பொறுத்தவரை ஆராய்ச்சிக் கட்டுரைகள் அப்பட்டமாய்த் திருடப்படுகின்றன. ஆராய்ச்சித் துறையில் பிறரின் கண்டுபிடிப்புகள் தன்னுடைய கண்டுபிடிப்புகள் எனத் தம்பட்டம் அடிக்கப்படுகின்றன.

எழுத்து மற்றும் பத்திரிகை துறையில் ஒருவரின் கட்டுரைகள் அல்லது கதைகள் முழுவதுமாகவோ அல்லது மையக்கருத்துகள் மட்டுமோ அப்படியே காப்பி அடிக்கப்படுகின்றன.

Representational Image
Representational Image

சினிமாத்துறையில் பெரும்பாலும் கதை திருடப்படுகிறது. ஒருவரின் கதை அப்படியே திரைப்படம் ஆக்கப்பட்டு, அந்தத் திரைப்படம் முடிவடையும் தறுவாயில் அல்லது வெளிவந்த பின்னர்தான் அது தன்னுடைய கதை என அந்தக் கதையின் உண்மையான உரிமையாளரான அப்பாவிக்குத் தெரியவருகிறது.

ஐந்தாறு படங்களின் காட்சிகள் திருடப்பட்டு ஒரு திரைப்படமாக வருவதெல்லாம் கூட தற்போது சர்வசாதாரணமாக நடக்கின்றது.

எல்லாவற்றையும்விட இன்று சமூக வலைதளங்களில் இந்த அறிவுத் திருட்டின் ஆதிக்கம் அதிகம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகளில் அட, என ரசிக்கத்தக்கவையும், நன்றாக இருப்பவையும், சிந்தனைக்கு உரியவரின் பெயர் மறைக்கப்பட்டு தன்னுடையது போலப் பகிரப்படுகின்றன.

Representational Image
Representational Image

ஒருவர் சுயமாகப் பகிர்ந்த ஒரு பதிவு, சில மணி நேரங்களில் வேறு ஒருவர் பெயருடன் தனக்கே திரும்ப வருமாயின் அவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்? உலகம் வட்டம் என்பதை இவ்வாறுதான் நிரூபிக்க வேண்டுமா?

சமூக வலைதளங்களில் இவ்வாறு பகிர்வதால் எந்த விதமான பணப்பலனும் கிடைப்பதில்லை. ஆயினும் ஒரு மனிதன் தான் அறிவாளி, புத்திசாலி எனச் சமூகத்திற்குத் தொடர்ந்து சொல்லிக்கொள்ள விரும்புகிறான். ஆனால், அதற்கான சுயசிந்தனை பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை! அதை வளர்த்துக்கொள்ள முயலாமல், சுலபமான குறுக்கு வழியிலேயே செல்லப் பலரும் விரும்புகின்றனர்!

ஒரே மாதிரி இருவர் சிந்திக்கக் கூடாதா?:

பிறரின் அறிவைத் திருடிவிட்டு அதை மறைக்க அல்லது தப்பிக்கப் பார்க்கும் நபர்களின் ஒரு வலிமையான ஆயுதம், ``ஒரே மாதிரி இருவர் சிந்திக்கக் கூடாதா?" என்பதே!

பெரும்பாலான அறிவுத் திருட்டுகளில் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஒரே மாதிரியான சிந்தனை வரலாம் ஆனால் வரிக்கு வரி ஒரே மாதிரியான சிந்தனை என்பது நடைமுறையில் நகைப்புக்குரியது! மனிதனின் மூளைத்திறன் அவ்வாறு கிடையாது.

Representational Image
Representational Image

பரந்த பொருள்பட்டு சிறு சிறு ஐடியாக்கள் வேண்டுமானால் ஒரே மாதிரியான சிந்தனையாக இருக்கலாம். காட்சிக்குக் காட்சி அல்லது வரிக்கு வரி அப்பட்டமாய் இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பே இல்லை!

எவ்வாறு தற்காத்துக் கொள்வது?:

பெரும் சிந்தனையாளர்கள் இந்த அறிவுத் திருட்டைப் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. ஒருசிலர் தங்களுடைய சிந்தனைக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த அறிவுத் திருட்டைப் பார்க்கின்றனர்!

தன் படைப்பை வேறு ஒருவர் அவருடையது என்கிறார் என்றால் அந்தப் படைப்பு சிறப்பான ஒன்றாகத்தானே இருக்க வேண்டும் என்பது இவர்களின் பார்வை! ஆனால், தன் சிந்தனை மூலம்தான் தனது வாழ்க்கை என்று இருக்கக்கூடிய நபர்களுக்குத் தன் சிந்தனை திருடப்படுவது பெரும் வேதனையும் பொருள் இழப்பும் அளிக்கக்கூடியதே! இதற்கு என்ன செய்வது என்றால், நாள் மற்றும் நேரம் Default ஆக வரக்கூடிய சமூக வலைதளங்களிலும் பிளாக் உள்ளிட்ட தளங்களிலும் நம்முடைய படைப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

Representational Image
Representational Image

சினிமா கதாசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலர் தமது படைப்புகளையும் கதைகளையும் உரிய இடங்களில் பதிவு செய்து வைப்பதுடன், தமது படைப்புகளை தங்களுடைய பெயருக்குத் தாங்களே பதிவுத்தபால் அனுப்பி, அதைப் பிரிக்காமல் தபால்நிலைய நாள் முத்திரையுடன் பாதுகாத்துக் கொள்கின்றனர். இதுவும் ஒரு பாதுகாப்பான முறையே.

வலைதளங்களைப் பொறுத்தவரை யார் முதலில் பதிவிட்டாரோ அவருக்கு அந்தப் படைப்பிற்கான, கருத்துக்கான முழு உரிமையும் இயல்பாகவே கிடைக்கிறது. எனவே, நாள் மற்றும் நேரம் வரக்கூடிய பொருத்தமான வலைதளங்களில் தங்களுடைய படைப்புகளைப் பதிவிட்டும், சேமித்தும் வைத்துக்கொள்வது அறிவுத் திருட்டிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

இந்த அறிவுத் திருட்டைத்தடுக்கவே முடியாதா?:

``திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது போல பிறரின் சிந்தனைகளைத் திருடுபவர்கள் தாங்களாகவே திருந்தினால் மட்டுமே இந்த அறிவுத் திருட்டை முழுக்க ஒழிக்க முடியும்!

சுயசிந்தனையின் பற்றாக்குறையும், விரைவில் புகழ் அடைய வேண்டும் என்னும் பெருவிருப்பமுமே உண்மையில் அறிவுத் திருட்டின் ஆணிவேராய் இருக்கின்றன.

``அறிவை விரிவு செய் அகண்டமாக்கு"

எனும் பாவேந்தர் வழியொற்றியும்,

Representational Image
Representational Image

``வெள்ளத்தாற் போகாது, வெந்தழலால் வேகாது,வேந்தராலும்

கொள்ளத்தான் முடியாது,கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது

கள்ளர்க்கோ மிகவரிது, காவலோ மிகவெளிது கல்வியென்னும்

உள்ளத்தே பொருளிருக்க, உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதேனோ!"

எனும் நாலடியார் நவிலுதலுக்கு ஏற்பவும்,

மனிதச் சமூகம் அறிவார்ந்த முறையிலான கற்றலை நோக்கியும், வாசிப்பின் பக்கமும், சுய சிந்தனையின் மீதும் தன் பார்வையைத் திருப்புமாயின் இந்த அறிவுத் திருட்டு தானாகவே ஒழிந்துவிடும்!

-அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு