Published:Updated:

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இனி தப்பு நடக்காது!

ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்

தமிழ்நாட்டின் முதல் ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்!

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இனி தப்பு நடக்காது!

தமிழ்நாட்டின் முதல் ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்!

Published:Updated:
ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்
டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இனி தப்பு நடக்காது!

தமிழகத்திலேயே முதன்முறையாக கரூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சென்சார்கள், சிசிடிவி கேமராக்கள் கொண்ட கணினி மூலம் தேர்வு செய்யும் நவீன ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018–ம் ஆண்டே இந்தக் கணினி மையத் தேர்வுக்களம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்த முறையில், வாகன ஓட்டிகளின் திறனை எளிதாகக் கணிக்க முடிகிறது என்பதால், இன்னும் 14 மாவட்டங்களில் இந்தக் கணினி மையத் தேர்வுக்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்போதைக்கு கரூரில் மட்டுமே இந்தக் கணினி தேர்வுக்களம் தற்போது செயல்பட்டு வருவதால், எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள, அங்கே நேரடி விசிட் அடித்தோம். இதுகுறித்து, கன்ட்ரோல் ரூமில் அமர்ந்தபடி வாகன ஓட்டிகளின் திறனைக் கணினித் திரையில் கண்களைச் சிமிட்டாமல் கவனித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் (முதல்நிலை) சரவணனிடம் பேசினோம்.

‘‘முன்பு வாகன ஓட்டிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ள மலைச்சாலையில் வாகனம் ஓட்டிக் காட்ட வேண்டும். அதை நாங்கள் ஓட்டுநர்களின் அருகில் அமர்ந்தபடி கவனித்து, அவர்களுக்கு லைசென்ஸ் கொடுக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்வோம். நாங்கள் அருகில் அமர்ந்திருப்பதால், சைக்காலஜிக்கலாக ஓட்டுநர்களுக்குச் சிறிது அச்சம் இருக்கும். அதனால், தவறு செய்ய வாய்ப்பிருந்தது. இப்போது, ஓட்டுநர்கள் தங்கள் அருகில் வாகனத்தில் வேறு யாரும் இல்லாததால், தெளிவாக வாகனங்களை இயக்குகிறார்கள். எங்கள் வேலையையும் இது எளிமையாக்கியிருக்கிறது!" என்றார்.

இந்த டெக்னாலஜியை வடிவமைத்தது, கரூரில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும்தான் என்ற தகவலையும் சரவணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். கூடுதல் விவரங்களுக்காக, இந்த டெக்னாலஜியை வடிவமைத்தவர்களில் ஒருவரான, குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள ஐடி துறையின் சீனியர் அசிஸ்டன்ட் புரொஃபசரான சண்முக வேலாயுதத்திடம் பேசினோம்.

‘‘டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முதலில் ஓட்டுநர் பழகுநர் லைசென்ஸ் பெற்ற பிறகு, ஆறு மாதங்களுக்குள் டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும். இதற்கான தகுதித் தேர்வுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முன்னதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து, அறிவிக்கப்பட்ட நாளில், தேர்வில் பங்கேற்கும் வசதி தற்போது உள்ளது. அதேபோல், இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸுக்கு மேடான சாலையில் நிறுத்தி, பின்னர் பின்னோக்கி வண்டி நகராமல் மீண்டும் இயக்கும் தகுதி, ரிவர்ஸ் பார்க்கிங், ஆங்கில H எழுத்து வடிவ வழித்தடத்தில் பிழையின்றி இயக்குவது உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வாகனத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்ந்திருக்க, தேர்வாளர் ஓட்டிக் காண்பிக்க வேண்டும் என்பது இப்போதுள்ள நடைமுறை.

ஆனால், இந்தக் கணினி மையத் தேர்வுக்களத்தில் தேர்வுக்குத் தயாராகும் நபர் காரில் தனியாக இருக்க, பச்சை விளக்கு எரிந்ததும் தேர்வுக்கான வழித்தடத்தில் காரை இயக்க வேண்டும். வாகனம் சிக்னலைக் கடந்ததும், அவர் பயணிக்கும் நேரம் கணக்கிடப்படுகிறது. காரை ஓட்டும்போது ஏதாவது ஓர் இடத்தில் தவறு செய்தாலும், வழித்தடத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் அதை கம்ப்யூட்டரில் காண்பிக்கும். மேலும், சம்பந்தப்பட்ட வாகனம் பயணிப்பது முழுவதும் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. பயணித்த நேரம், எத்தனை சென்சார்களில் அவர் தவறு செய்துள்ளார் என்பதைப் பொருத்து மதிப்பெண் வழங்கப்பட்டு, அவர் லைசன்ஸ் பெற தகுதி உள்ளவரா எனத் தீர்மானிக்கப்படும்.

அதேபோல், வாகன ஓட்டிகள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் `பீப்' ஒலி எழுப்பி, எச்சரிக்கை செய்யும். இத்தகைய தானியங்கி வாகன ஓட்டுநர் தேர்வுக்களம் நாட்டில் முதன்முதலாக கேரளாவில் உள்ள கண்ணூரில் தொடங்கப்பட்டது. இங்கே சுமார் 40 லட்சம் ரூபாய் இந்த கன்ஸ்ட்ரக்ஷனுக்காகச் செலவு செய்திருக்கிறார்கள்" என்றார்.

தொடர்ந்து சென்சார், சிசிடிவி, கணினி மூலம் எப்படி ஓட்டுநர்களின் திறன் ஆட்டோமேட்டிக்காகத் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கினார் சண்முக வேலாயுதம்.

‘‘சி.எம்.வி.ஆர் விதிகளின்படி, வாகன ஓட்டிகளின் திறனைச் சோதிக்க, 10 நிமிடத்தை ஒதுக்கியிருக்கிறது. ஆய்வாளர் அனுமதி கொடுத்ததும், வாகனத்தை லைசென்ஸ் பெற வந்தவர் இயக்க வேண்டும். முதல் நான்கு நிமிடங்கள் சீட் பெல்ட் சரியாக அணிந்திருக்கிறாரா, கைகள் மூலம் சிக்னலை சரியாகக் காட்டிப் பயணிக்கிறாரா, ஹேண்ட் பிரேக்கை எடுத்து விட்டாரா, இண்டிகேட்டரைச் சரியாகப் போடுகிறாரா உள்ளிட்ட முதல்நிலை விஷயங்களைச் சரியாக செய்கிறாரா என்பன போன்ற விஷயங்களுக்காக. அதன்பிறகு, மீதமுள்ள 6 நிமிடங்களில் மூன்று தளங்களில் வாகன ஓட்டி வாகனத்தை எந்தப் பிழையும் செய்யாமல் இயக்கி முடிக்க வேண்டும். முதலில், H வடிவ டிராக்கில் வாகனத்தை இயக்கி ஃபார்வேர்டு, ரிவர்ஸ், மறுபடியும் ஃபார்வேர்டு என்று வாகனத்தை இயக்க வேண்டும். அடுத்து, ஹில்ஸ் எனப்படும் அப்க்ரேடியன்ட் டிராக்கில் உள்ள இரண்டு சென்சார்களுக்கு இடையில் உள்ள ஒரு டயர் நிறுத்துவதற்கான இடைவெளியில் நிறுத்த வேண்டும். 5–ல் இருந்து 7 விநாடிகள் வரைக்கும் பின்னே, முன்னே உள்ள சென்சார்களில் வாகனத்தை இடிக்காமல் நடுவில் நிறுத்த வேண்டும். சென்சார்களில் வாகன டயர் பட்டால், அவர் ஃபெயில். சரியாக வாகனத்தை நிறுத்தியவர்களை ஆய்வாளர் வண்டியை எடுக்கச் சொன்னதும், உடனே முன்னே நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும். மாறாக, பின்னே வண்டியை இயக்கினாலோ, அங்கேயே நிறுத்தியிருந்தாலோ அல்லது வாகனத்தை ஆஃப் செய்துவிட்டாலோ, அவரும் ஓட்டுநர் லைசென்ஸ் பெறத் தகுதியில்லை!

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இனி தப்பு நடக்காது!
டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இனி தப்பு நடக்காது!

அதேநேரம், அதையும் சரியாகச் செய்தவர், அதன் அருகில் உள்ள மூன்றாவது டிராக்கான ரிவர்ஸ் பேரலல் பார்க்கிங் டிராக்கில் ரிவர்ஸில் காரை இயக்கி, அங்குள்ள சென்சார் பொருத்தப்பட்ட சிறிய வேகத்தடை மாதிரியான அமைப்பில் பின் டயர்களை ஏற்றி இறக்கி நிறுத்திவிட்டு, பிறகு முன்னே செல்ல வேண்டும். அதையும் சரியாகச் செய்துவிட்டால், அவர்கள் லைசென்ஸ் பெறத் தகுதியானவர்கள் என்று சென்சார் மூலம் கணினிக்குத் தகவல் போய்விடும்.

அதேபோல், H வடிவ டிராக்கில் சென்சார் வசதியுடன் கூடிய 54 ரப்பர் போல்களும், 4 தரையில் அமைக்கப்பட்ட சென்சார்களும், ஹில்ஸ் அமைப்பில் இரண்டு சென்சார்களும், ரிவர்ஸ் பேரலல் பார்க்கிங் டிராக்கில் சென்சார் வசதியுடன் கூடிய 7 ரப்பர் போல்களும், தரையில் 1 சென்சாரும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று ட்ராக்குகளிலும் மொத்தமுள்ள 61 ரப்பர் போல்களிலும் 2 போல்கள் வரை வாகன ஓட்டி இடிக்கலாம். மூன்றாவது போலை இடித்தால், அவர் ஃபெயில்.

சிலர், `நாங்கள் சரியாக ஓட்டினோம். கணினி தவறாக ரிசல்ட் காண்பிக்கிறது' என்று சொல்லும் சூழல் ஏற்படலாம். அவர்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக 5 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சதீஷ்
சதீஷ்
சண்முக வேலாயுதம்
சண்முக வேலாயுதம்
சரவணன்
சரவணன்

மூன்று டிராக்குகளிலும் 6 நிமிடத்துக்குள் வாகனத்தை இயக்கி முடித்துவிட வேண்டும். 6.01 நிமிடம் ஆனாலும், அவர் ஃபெயில். இந்த டெக்னாலஜியை, ஐடி துறையைச் சேர்ந்த நான், இ.சி துறையைச் சேர்ந்த சீனியர் அசிஸ்டன்ட் புரொஃபசர் மோகன்ராஜ் மற்றும் இரண்டு துறைகளைச் சேர்ந்த 26 மாணவர்களும் சேர்ந்து வடிவமைத்தோம். இந்த டெக்னாலஜியை நாங்கள் வடிவமைத்து நிறுவுவதற்கு, அப்போதைய திருச்சி மண்டலத் துணைப் போக்குவரத்து ஆணையர் ராமலிங்கம் சாரும், அரவக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளரான ஆனந்தும் பெரிதும் உதவியாகவும், ஊக்கமாகவும் இருந்தார்கள்.

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இனி தப்பு நடக்காது!
டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இனி தப்பு நடக்காது!

RTO அலுவலகத்தில் வாகனம் ஓட்டி லைசென்ஸ் பெற வந்த பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ், ‘‘வழக்கமாக உள்ள லைசென்ஸ் வழங்கும் முறையில், நாம் இயக்கி காட்டும் வாகனத்தில் ஆய்வாளரும் அமர்ந்திருப்பார். அதனால், பக்கத்தில் ஆள் இருக்கிறாரே என்ற பதட்டத்தில் தவறு செய்ய நேரிடும். ஆனால், இந்தக் கணினி மையத் தேர்வுக்களத்தில், நாம் தனியாக வாகனத்தை இயக்குவதால், பதற்றமில்லாமல் இயக்க முடியும். அதேபோல், டிரைவிங் லைசென்ஸ் ஸ்கூல்கள் மூலமாக பெரும்பாலானவர்கள் பயிற்சி எடுத்துவிட்டு, லைசென்ஸ் பெற வருவதால், அந்தப் பள்ளிகள் வைத்திருக்கும் இரண்டு பிரேக்குகள் அமைக்கப்பட்ட வாகனங்களைக் கொண்டுதான், லைசென்ஸ் பெறும் இடத்திலும் ஓட்டிக் காட்ட நேரிடும். இங்கே நாம் சொந்தமாகப் பழகிய வாகனங்களை ஓட்டிக் காட்டிக்கூட லைசென்ஸ் பெற முடியும். நான் இந்த கணினி மையத் தேர்வுக்களத்தில் வாகனத்தை சரியாக இயக்கி, லைசென்ஸ் பெற தகுதியாகிவிட்டேன். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் மூன்று டிராக்குகளிலும் ஓட்டிக் காட்ட வேண்டுமே என்ற பதட்டத்தில், இந்த முறையிலும் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த முறையில் நமது வாகனம் ஓட்டும் திறனை சென்சார் மூலம் கணினி முடிவுசெய்வதால், சி.சி.டி.வி மூலம் வீடியோ பதிவும் செய்யப்படுவதால், இல்லீகலாக லைசென்ஸ் பெறுவது கடினம்!" என்றார்.

எது எப்படியோ… லைசென்ஸ் பெறுவதில் நடைமுறைகள் கட்டுக்கோப்பாக இருந்தால்தான்… விபத்துகளும் கட்டுக்குள்ளாகும்.

ஜெய்ஹிந்த் கரூர்!