Election bannerElection banner
Published:Updated:

AI உதவியுடன் குறைவான விலையில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை... சாதித்த பெங்களூரு ஸ்டார்ட்-அப்!

மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

பெங்களூரை மையமாக வைத்து இயங்கிவரும் `நிராமை' (NIRAMAI) என்ற நிறுவனமானது குறைந்த செலவில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

மார்பகப் புற்றுநோய் குறித்து, இன்றளவில் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஒருவருக்குப் புற்றுநோய் கண்டறியும் முறைகளுக்கு அதிக செலவாகிறது. தற்போதைய காலங்களிலுள்ள பரிசோதனை முறையானது மேமோகிராஃபி (Mammography) என்னும் கருவியைக்கொண்டு செய்யப்படுகிறது. இந்நோயைக் கண்டறிவதற்காக ஒரு தனிநபர் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை செலவுசெய்ய வேண்டியதாகவுள்ளது. தேசிய சுகாதாரப் பதிவேட்டின்படி இந்தியளவில் புற்றுநோய் பரிசோதனைக்காக மட்டும் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையானது 2018-2019 ஆண்டுகளில் 3.5 கோடியிலிருந்து 6.6 கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் மார்பகப் புற்றுநோய்க்காக வருபவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.

மார்பகப் புற்றுநோய்!
மார்பகப் புற்றுநோய்!
`அறிகுறிகள் தெரிவதற்கு 5 ஆண்டுகள் முன்பாகவே..!’ - நம்பிக்கையூட்டும் மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி

இன்று, பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் பெரும்பான்மையானவை மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதிலிருந்து மீண்டு, உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 50% மட்டுமே உள்ளது. அதனால், அவர்களின் இறப்பு விகிதங்களைக் குறைக்க ஆரம்பகால நோயறிதல் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த நோயைக் கண்டறியும் மேமோக்ராஃபி முறையை 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் பயன்படுத்த இயலாது. உலகில் உள்ள 90% பெண் நோயாளிகளுக்கு இன்றளவும் இந்நோயானது கையாலே தொட்டுணர்ந்து கண்டறியப்பட்டுவருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடானது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

இந்த நிலையில், பெங்களூரை மையமாக வைத்து இயங்கிவரும் `நிராமை' (NIRAMAI) என்ற நிறுவனமானது குறைந்த செலவில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. Non-Invasive Risk Assessment with MAchine Intelligence என்பதன் சுருக்கமே நிராமை (NIRAMAI). அதாவது தொடுதல் அல்லாமல் இயந்திர நுண்ணறிவு மூலம் நோயைக் கண்டறியும் முறை. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் தெர்மல் ஸ்கேனிங் மூலம் புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறியும் இந்தத் தொழில்நுட்பத்துக்கு 'Thermalytix' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தத் தொழில்நுட்பமானது நோயாளியின் அந்தரங்கத்தைப் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தானியங்கி செயலியாகும்.

தெர்மல் இமேஜிங்
தெர்மல் இமேஜிங்
Vikatan

X-Ray மூலம் செய்யப்படும் மேமோக்ராஃபி போல அல்லாமல் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் நபரை ஓர் அறையில் 10-15 நிமிடங்கள் வரை அமரவைத்து மூன்று அடி உயரம் கொண்ட தெர்மல் கருவியைக் கொண்டு அவரைச் சுற்றி ஐந்து thermal புகைப்படங்கள் எடுக்கப்படும். இப்புகைப்படங்களானது Hi-Resolution தெர்மல் தரத்தில் எடுக்கப்படுபவை. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஒரு மென்பொருள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு, அந்த அறிக்கையானது கதிரியக்க நிபுணரிடம் சான்றிதழ் பெறுவதற்கு அனுப்பிவைக்கப்படும். இதன்மூலம் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டறிய இயலும். கடந்த காலங்களில் 2,000 ரூபாய்க்குச் செய்யப்பட்டு வந்த ஒரு ஸ்கேனானது இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக இனிமேல் 150 ரூபாய்க்கு செய்யமுடியும்.

`நிராமை' நிறுவனம், இந்தக் கண்டுபிடிப்பைக் கிராமப்புறங்களுக்குக் கொண்டு செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. அந்நிறுவனத்தை நடத்திவரும் மருத்துவர் கீதா மஞ்சுநாத் மற்றும் அவரின் குழுவினர் கர்நாடக புற்றுநோய்க் கழகத்தினரோடு இணைந்து அம்மாநிலத்தில் உள்ள பல கிராமப்புறங்களுக்குச் சென்று பரிசோதனை முகாம்கள் நடத்தி வருகின்றனர். பெண்கள் தொடக்கக் காலங்களிலே இந்நோயின் கூறுகளைக் கண்டறிவதன் மூலம் அவர்கள் விரைவில் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

கீதா மஞ்சுநாத், CEO, Niramai
கீதா மஞ்சுநாத், CEO, Niramai

சிறிதொரு குழுவாகத் தொடங்கிய இந்நிறுவனமானது இன்று நாடு முழுவதும் உள்ள 10 முக்கிய நகரங்களில் 30 கிளைகளை நிறுவியுள்ளது. இந்நிறுவனத்தின் சேவைகளைக் கண்டு பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் இவர்களுக்குப் பொருளாதார உதவி மட்டுமல்லாமல், இவர்களின் திட்டப்பணிகளிலும் பங்குகொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது அடுத்தகட்ட நகர்வாக புற்றுநோய் மட்டுமன்றி மார்பகம் தொடர்பான எந்தொரு நோயையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு