`இனி அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் இலவசம்!'- ஜியோ அறிவிப்பின் பின்னணி என்ன?

இனி வாய்ஸ் அழைப்புகளுக்கென்று கட்டணமே கிடையாது என்றுதான் அறிமுகமானது ஜியோ. மக்கள் பலரையும் தன்வசம் ஈர்த்தது இந்த வாக்குறுதியால்தான். ஆனால், கடந்த ஆண்டு மற்ற நிறுவன அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிப்போம் என்று பல்டி அடித்தது.
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு பரிசாக ஒரு நற்செய்தியை அறிவித்திருக்கிறது. இதுவரை ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது இனி இருக்காது, அனைத்து அழைப்புகளுமே இலவசம் என அறிவித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்த அறிவிப்பானது நாளை ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.

பின்னணி என்ன?
அறிமுகம் ஆன போது டேட்டாவுக்கு மட்டும்தான் கட்டணம், இனி வாய்ஸ் அழைப்புகளுக்கென்று கட்டணமே கிடையாது என்று அறிவித்தது ஜியோ. மக்கள் பலரையும் தன்வசம் ஈர்த்தது இந்த வாக்குறுதியால்தான். ஆனால், கடந்த ஆண்டு மற்ற நிறுவன அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிப்போம் என்று பல்டி அடித்தது. அதற்கு ஜியோ சொன்ன காரணம் IUC தொகை.
இந்த Interconnect Usage Charge என்பது ஒரு டெலிகாம் நிறுவனத்திலிருந்து மற்றொரு டெலிகாம் நிறுவனத்திற்குச் செல்லும் அழைப்புகளுக்கு முதல் டெலிகாம் நிறுவனம் செலுத்தவேண்டிய தொகை.
அதாவது, ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஜியோ நிறுவனத்திடமிருந்து வரும் அழைப்பை, ஏர்டெல் தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்கச் சிறிய தொகை ஒன்றை வசூலிக்கும். இதை ஜியோவிடமிருந்தே பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு 'Calling Party Pays' என்று பெயர். இதை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.
அதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் கட்டமைப்பிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த IUC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என டிராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது IUC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவிலிருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன.

ஏனென்றால் இதில் ஜியோ பெருமளவில் கொடுக்கும் தரப்பாகவும் மற்ற நிறுவனங்கள் வாங்கும் தரப்பாகவும் இருந்தன. இதெல்லாம் நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட டிராய், IUC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இதுதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இதையும் நீக்கவேண்டும் என்பதே ஜியோவின் ஆசையாக இருந்தது. ஆனால், டிராய் இதற்கு உடன்படாமலேயே இருந்துவந்தது. இதனால் இந்த தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்தே பெறலாம் என முடிவுசெய்தது ஜியோ. ஓராண்டுக்கும் மேலாக இந்த முறைதான் நடைமுறையில் இருக்கிறது.
இறுதியாக தற்போது, ஜனவரி 1 முதல், மற்ற நெட்வொர்க்குக்கான IUC அழைப்பு கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக டிராய் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இனி மற்ற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக அழைக்கலாம் என அறிவித்திருக்கிறது ஜியோ!