Published:Updated:

எம்-பரிவாஹன் மற்றும் டிஜிலாக்கர் ஆவணங்கள் செல்லுபடியாகுமா ? சட்டம் சொல்வது என்ன ? 

போக்குவரத்துக் காவல்துறையினர் கேட்கும்போது இந்த ஆப்களில் இருக்கும் ஆவணங்களைக் காட்டலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

mParivahan and Digilocker Apps
mParivahan and Digilocker Apps

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அண்மையில் நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கிறது. இந்தத் திருத்தத்தின்படி ஒவ்வொரு குற்றத்துக்கும் விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் சட்டம் அமலுக்கு வரவில்லை என்றாலும்கூட, மக்கள் ஒருவித பதற்றத்துடனே வாகனத்தில் பயணிக்கிறார்கள்.

Digilocker
Digilocker

அபராதத் தொகையைக் குறைத்த பின்னர், இந்தச் சட்டம் தொடர்பான அரசாணையை வெளியிடத் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்குப் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, டிஜிட்டல் ஆவணங்கள் தொடர்பானது. எம்-பரிவாஹன் ( mParivahan ) மற்றும் டிஜிலாக்கர் ( digilocker) என்ற இரண்டு ஆப்களில் இருக்கும் ஆவணங்களைக் காவல்துறையினரிடம் காட்ட முடியுமா. இந்த ஆப்களை பயன்படுத்துவது எப்படி?

எம்-பரிவாஹன் ஆப்பை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உருவாக்கியிருக்கிறது. இதில் வாகனங்கள் தொடர்பான தகவல்கள், ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற முடியும். டிஜிலாக்கர் ஆப் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

mParivahan
mParivahan

எம்-பரிவாஹன் ஆப் போல இல்லாமல் இந்த ஆப்பில் வாகனம் தொடர்பான ஆவணங்கள் மட்டுமன்றி அரசு வழங்கும் பல்வேறு சான்றிதழ்களையும்கூட டிஜிலாக்கர் ஆப்பில் டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ளலாம். எம்-பரிவாஹன் மற்றும் டிஜிலாக்கர் இரண்டு ஆப்களுமே கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்றன.

போலி ஆப்கள் கவனம் தேவை

இந்த ஆப்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி ஆப்கள் ப்ளே ஸ்டோரில் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்த இரண்டு ஆப்களையும் இன்ஸ்டால் செய்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்.

வாகன ஆவணங்கள் மட்டுமே போதும் என்றால் எம்-பரிவாஹன் ஆப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். காரணம் எம்-பரிவாஹன் ஆப்பைப் பயன்படுத்துவது மிக எளிமையானது. இதைப் பயன்படுத்த மொபைல் எண் மட்டுமே போதுமானது.

Digilocker
Digilocker

வாகன ஆவணங்கள் மட்டுமன்றி அரசின் வேறு சில சேவைகளையும் பயன்படுத்த வேண்டுமென்றால், டிஜிலாக்கர் ஆப்தான் சரியானதாக இருக்கும். இந்த ஆப்பில் கணக்கைத் தொடங்குவதற்கு மொபைல் எண்ணும் ஆதார் எண்ணும் தேவைப்படும். அதில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்துக்கான ஆவணங்களை டவுன்லோடு செய்யும் பகுதிகள் இருக்கின்றன. அவற்றை க்ளிக் செய்து கேட்கும் விவரங்களைச் சரியாகக் கொடுத்தால் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை டவுன்லோடு செய்து வைத்தால் போதுமானது.

`குழப்பத்தைத் தீர்த்து வைத்த சட்டத் திருத்தம்'

டிஜிலாக்கர் 2015-ம் ஆண்டிலும் எம்-பரிவாஹன் 2017-ம் ஆண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆப்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சமயங்களில் வாகன ஓட்டிகளிடம் அசல் ஆவணம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதே சட்டமாக இருந்தது. எனவே, மக்களுக்கு மட்டுமல்ல காவல்துறையினருக்கும்கூட இந்த ஆப்பில் இருக்கும் ஆவணங்கள் செல்லுமா என்பது சந்தேகமாகவே இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 2018-ம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட விதி 139-ன்படி ஓட்டுநர் உரிமம் உட்பட வாகனத்தின் அனைத்துச் சான்றிதழ்களையும் அதிகாரிகள் கேட்கும்போது டிஜிட்டல் ஆவணங்களாகக் காட்ட முடியும்.

Driving License
Driving License

வெறும் புகைப்படம், PDF ஆகியவை உதவாது!

அதே நேரம் இதில் ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பலர் ஆவணங்களைப் போனில் புகைப்படமாகவோ, PDF வடிவிலோ எடுத்து வைத்துக்கொள்வது போதுமானதாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், சட்டத்தின்படி அவை செல்லாதவைதான்; அவற்றைக் காவல்துறையினரிடம் காட்ட முடியாது. எம்-பரிவாஹன் மற்றும் டிஜிலாக்கர் இரண்டு ஆப்களில் முறையாகப் பெறப்பட்டுச் சேமித்து வைத்திருக்கும் ஆவணங்களைப் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

பெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் - வாகன ஓட்டிகள் கவனத்துக்கு!