Published:Updated:

`தமிழகத்தில் 2 வது ராக்கெட் ஏவுதளம் ஏன்?' - இஸ்ரோ சிவன் சொன்ன விளக்கம்!

சந்திரயன் 3-ன் லேண்டர் மற்றும் ரோவருக்கு சுமார் 250 கோடி ரூபாய் செலவாகும். சந்திரயன்-3 தவிர, இந்த ஆண்டு 25-க்கும் மேற்பட்ட விண்வெளி திட்டங்கள் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது ஏவுதளத்தை அமைப்பதற்கு உகந்த இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தார்கள்.

தமிழகத்தின் தென்கோடியில் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது. பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் எரிபொருள் சிக்கனம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் குழுவினர் கண்டறிந்தனர்.

இஸ்ரோ சிவன்
இஸ்ரோ சிவன்

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டின் இஸ்ரோவின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவரான கே.சிவன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``2019-ம் ஆண்டில் இஸ்ரோ மையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது எங்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. திறன் மேம்பாடு என்பது எங்களின் இரண்டாவது நோக்கமாக இருந்தது.

மூன்றாவதாக இஸ்ரோவில் உடல் சார்ந்த வேலைப்பளுவைக் குறைத்து அறிவு சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது. அதன்படி, ககன்யன் ஆலோசனைக் குழுவை அமைத்திருக்கிறோம். கடந்த ஓராண்டில் நாங்கள் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறோம். சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்பணிகள் தற்போது நடந்து வருகிறது. எனினும் சந்திரயன்-3 பணிகளால் மற்ற செயற்கைக்கோள் திட்டங்கள் பாதிக்காது. சந்திரயன்-3 அமைப்பு சந்திரயான்-2 ஐப் போலவே இருக்கும். சந்திரயான்-2 இறங்கவிருந்த நிலவின் தென் துருவத்திலேயே சந்திரயன்-3 தரையிறக்கம் செய்யும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. சந்திரயன் 3-ன் லேண்டர் மற்றும் ரோவருக்கு சுமார் 250 கோடி ரூபாய் செலவாகும். சந்திரயன்-3 தவிர, இந்த ஆண்டு 25-க்கும் மேற்பட்ட விண்வெளி திட்டங்கள் இருக்கும்.

Vikatan

ககன்யான் திட்டத்துக்காக நான்கு வீரர்களை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு ஜனவரி மூன்றாவது வாரத்திலிருந்து ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படும்" என்றவர், தமிழகத்தின் தூத்துக்குடியில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

``ராக்கெட் தொழில்நுட்பத்தில் நாம் வளர்ச்சியடைந்து வருகிறோம். நமது ஏவுதல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காக, இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை விரைவில் அமைக்கவுள்ளோம். ராக்கெட் தொழில்நுட்பத்தில் நமது எல்லையை விரிவுபடுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைய உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்
விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. எதற்காக இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம் என்றால் பி.எஸ்.எல்.வி ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு இந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த இடத்தைத் தேர்வு செய்தோம்.

கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து வந்து விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து இரண்டு வாரங்கள் பயிற்சி அளித்தோம். அத்துடன், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள், தொழில்துறையால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கான நடைமுறையையும் கடந்த ஆண்டு செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்’’ என்றார்.

மேலும், ``சந்திராயன் 2 திட்டம் தோல்வி அடையவில்லை. வேகமாகச் சென்று நிலவின்மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாகத் தரையிறக்க முடியவில்லை. ஆனால், இன்னும் சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாகச் செயல்படுவதால் 7 ஆண்டுக்கு தகவல்களை அனுப்பும்'' என்று விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு