Published:Updated:

`90 நிமிடங்கள்; விடுமுறையில் 3 மணிநேரம்!' - வீடியோ கேம்களுக்கு சீனா கட்டுப்பாடு

சீனாவில் குழந்தைகள் வீடியோ கேமுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வீடியோ கேம்
வீடியோ கேம்

அரசின் புதிய விதிமுறைகளின்படி, 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் இனி வாரநாள்களில் 90 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் கேம்களை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும், இவர்கள் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆன்லைன் கேம் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களிலும் பொது விடுமுறை நாள்களிலும் அவர்கள் ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் குறித்து சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நாட்டில் இயங்கும் கேமிங் தளங்கள் மூலம் நேரடியாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கேம்
வீடியோ கேம்

இதுதொடர்பாக சீன அரசின் செய்தித் தொடர்பாளர், அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,``சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன'' என்று கூறினார். ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு சிறுவர்கள் அதிகமாகச் செலவு செய்வதைத் தடுப்பதற்காகவும் குறிப்பிட்ட வரையறை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 16 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மாதத்துக்கு 200 யுவான் (சுமார் 2,037 ரூபாய் ) வரை கேமுக்காகச் செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 400 யுவான் (சுமார் 4,074 ரூபாய்) வரை செலவழிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய கேமிங் சந்தையாக சீனா உள்ளது.

2015-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 500 மில்லியன் சீன குடிமக்கள் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு மொபைல்போன்கள் மற்றும் ஆன்லைன் கேம்களில் காட்டும் அதீத ஈடுபாடே என ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து வீடியோ கேம் விளையாடுவதால் மயோபியா (கிட்டப்பார்வை) நோய் வர வாய்ப்புள்ளது என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் வீடியோ கேம் விளையாடுவதால், அதிக குழந்தைகளுக்கு இந்த நோய் வந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

வீடியோ கேம்
வீடியோ கேம்

கடந்த ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் வீடியோ கேம் அடிமைத்தனத்தை மனநலக் கோளாறு என்று அறிவித்தது. ஆன்லைன் கேம்களுக்கு ஒருவர் அடிமையாவதால் அவரது உடல் செயல்பாட்டில் குறிப்பிட்ட சிக்கல்கள் வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆன்லைன் கேமிங் போதையை மூன்றாக வகைப்படுத்துகின்றனர்,

1. கேமிங் மீதான பலவீனமான கட்டுப்பாடு.

2. தனது அன்றாட வேலைகளையும் பிற ஆர்வங்களையும் தவிர்த்துவிட்டு கேமிங்க்கு முன்னுரிமை கொடுப்பது.

3. எந்த ஒரு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கேமில் கவனம் செலுத்துவது.

வீடியோ கேம்
வீடியோ கேம்

வீடியோ கேம் நிறுவனங்கள் தங்கள் விளையாட்டுகளை வேண்டுமென்றே அடிமையாக்குவதுக்காகத் தயாரிக்கப்படுகிறது என்று அனைவராலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. சமீபத்தில் ஃபோர்னைட் டெவலப்பர் எபிக் கேம்ஸ் என்ற நிறுவனம் உளவியலாளர்களை வேளைக்கு எடுத்து முடிந்தவரை எப்படி அடிமையாக்கலாம் என்று கருத்து கேட்டு கேம்களைத் தயாரித்து வந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தத் தடைவிதிப்பு சீன குழந்தைகளிடையே அதிருப்தியைப் பெற்றிருந்தாலும் பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய குழந்தைகளும் சமீப காலத்தில் பப்ஜி போன்ற கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பெற்றோர்களால் நம்பப்படுகிறது.